வானக பீட புனித மரியா கோவில்
வானக பீட புனித மரியா பெருங்கோவில் Basilica di Santa Maria in Ara coeli (இத்தாலியம்) Basilica Sanctae Mariae de Ara coeli (இலத்தீன்) | |
---|---|
கோவிலின் முகப்புத் தோற்றமும் பயணியர் ஏறிச் செல்லும் படிக்கட்டும் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இத்தாலி உரோமை |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′38″N 12°29′00″E / 41.89389°N 12.48333°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நிலை | இளம் பெருங்கோவில் |
தலைமை | சால்வத்தோரே தெ ஜோர்ஜியோ |
இணையத் தளம் | Official Website |
வானக பீட புனித மரியா பெருங்கோவில் (Basilica of St. Mary of the Altar of Heaven) (இலத்தீன்: Basilica Sanctae Mariae de Ara coeli al Campidoglio, இத்தாலியம்:Basilica di Santa Maria in Ara coeli) என்பது உரோமையில் கம்பிதோலியோ என்னும் குன்றின் உச்சியில் அமைந்த சிறப்புமிக்க கத்தோலிக்க வழிபாட்டுக் கட்டடம் ஆகும்[1]. உரோமை நகரத்தின் ஆட்சிக் குழுவின் அதிகாரப்பூர்வமான கோவிலாக இது இன்றும் உள்ளதால், உரோமை நகரின் இலச்சினையான SPQR (Senatus Populusque Romanus = "உரோமை நகராட்சி மன்றமும் மக்களும்") என்னும் அடையாளம் இக்கோவிலில் உள்ளது.
கோவில் எழுந்த வரலாறு
[தொகு]வானக பீட புனித மரியா கோவில் என்னும் இந்த வழிபாட்டிடம் முதலில் "கப்பித்தோலியோ புனித மரியா கோவில்" என்று அறியப்பட்டது. கப்பித்தோலியோ (இத்தாலியம்: கம்பிதோலியோ) குன்றின்மேல் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து "வானக பீட புனித மரியா கோவில்" என்னும் புதுப்பெயர் இக்கோவிலுக்கு வழங்கப்படலாயிற்று.
இப்பெயர் எவ்வாறு எழுந்தது என்பதை விளக்கும் நடுக்கால வரலாறு ஒன்றுளது. 12ஆம் நூற்றாண்டில் இலத்தீனில் எழுதப்பட்ட "உரோமை நகரின் அதிசயங்கள்" (Mirabilia Urbis Romae) என்னும் கையேடு அவ்வரலாற்றைத் தருகிறது. பண்டைய உரோமைப் பேரரசின் தலைநகரான உரோமையில் கட்டப்பட்டு, ஜூனோ மொனேட்டா (Juno Moneta) என்னும் தெய்வத்துக்கு ஒரு கோவில் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் கட்டப்பட்டதே "வானக பீட மரியா கோவில்". ஜூனோ மொனேட்டா கோவில் அருகே நாணயங்கள் உருவாக்கப்பட்டன. மொனேட்டா என்னும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் money என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது.
உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் தம்மை உரோமை நாடாளுமன்றத்தவர் "கடவுள்" என்று வணங்க முடிவுசெய்தனர் என்பதை அறிந்ததும் உள்ளம் கலங்கி, குறி கேட்டாராம். அவருக்கு அளிக்கப்பட்ட அருள்வாக்கு "அனைத்தையும் ஆளும் அரசர் ஒருவர் வானிலிருந்து இறங்குவார்" என்பதாம். இவ்வாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அரசர் ஒரு காட்சி கண்டாராம். பீடத்தின் மேல் அன்னை மரியா ஒளிமயமாகத் தோன்றி, கையில் குழந்தை இயேசுவை ஏந்தியிருந்தாராம். அப்போது ஒரு குரல் கேட்டது: "இது கடவுளின் மகனின் பீடம்". உடனே அரசன் அவ்விடத்தில் ஒரு பீடத்தைக் கட்டி எழுப்பி அதற்கு "வானக பீடம்" (Ara Coeli = altar of the heavens) என்று பெயரிட்டாராம்.
ஐந்தாம் நூற்றாண்டிலேயே இக்கதை எழுந்ததாகத் தெரிகிறது. இக்கதை வழியாக, பண்டைய உரோமை தெய்வமாகிய ஜூனோவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இருந்த இடத்தில் அன்னை மரியாவுக்கு ஒரு கோவில் எவ்வாறு எழுந்தது என்னும் வரலாறு பரவியது. இன்றும் கூட, இக்கோவிலின் உட்பகுதியில் உள்ள ஒரு பண்டைக்காலத் தூணில் "அகுஸ்துசின் படுக்கையறையிலிருந்து" என்னும் வாசகம் இலத்தீனில் உள்ளது ("a cubiculo Augustorum"). இத்தூண் அகுஸ்துசின் அரண்மனையிலிருந்து வந்தது எனத் தெரிகிறது. அகுஸ்துசின் உருவமும் குறிகூறும் தேவதை உருவமும் மரியா கோவிலின் உட்பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் வானதூதரோடும் புனிதரோடும் காட்டப்படுகின்றன.
ஜூனோ மொனேட்டா (Juno Moneta) என்னும் தெய்வம் பற்றி இன்னொரு வரலாறும் உண்டு. கி.மு. நான்காம் நூற்றாண்டில் உரோமை நகரைத் தாக்க கால் நாட்டவர் (Gauls) வந்து, நள்ளிரவு நேரத்தில் கோட்டைச் சுவரில் ஏறி நகருக்குள் இரகசியமாக இறங்க முனைந்தபோது, ஜூனோ மெனேட்டா கோவிலில் இருந்த கோவில் வாத்துக்கள் உச்சக்குரலில் கத்த ஆரம்பித்தன. நகர மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்னும் "எச்சரிக்கை" கொடுக்கப்பட்டது; மக்களும் விழித்தெழுந்து எதிரிகளைத் துரத்தி முறியடித்தனர். இவ்வாறு, ஜூனோவுக்கு "எச்சரிக்கை கொடுத்த தெய்வம்" என்னும் பொருளில் "Moneta" என்னும் பெயர் வந்தது (இலத்தீனில் monere என்றால் "எச்சரித்தல்" என்று பொருள்).
இந்த ஜூனோ கோவிலின் சில பகுதிகளை உள்ளடக்கி மரியா கோவில் கட்டப்பட்டது. அப்பகுதியில் பறவைகள் பறந்து செல்லும் திசை, அவை எழுப்பும் குரல் போன்றவற்றைக் கணித்து ஒரு செயலைத் தொடங்குவதா வேண்டாமா, அல்லது தொடங்கிய செயலத் தொடர்வது நலமா இல்லையா என்று குறி சொல்லும் குருக்கள் வாழ்ந்தனர் என்றொரு வரலாறும் உண்டு[2].
கோவில் முகப்பும் கட்டடமும்
[தொகு]ஜூனோ கோவில் இருந்த இடத்தில் மரியா கோவிலுக்கான அடிக்கல் அங்கிருந்த பிசான்சியத் துறவியர் இல்ல இடத்தில் இடப்பட்டதாக 574இல் எழுதப்பட்ட ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. கிரேக்க வழிபாட்டு முறை அங்கு நிலவியது. 9ஆம் நூற்றாண்டில் அக்கோவில் திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர் அக்கோவிலைப் புனித ஆசீர்வாதப்பர் சபைத் துறவியரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் மரியா கோவில் புனித பிரான்சிசு சபைத் துறவியரிடம் 1249-1250இல் கொடுக்கப்பட்டது. அக்கால கட்டத்தில்தான் இக்கோவில் கட்டடம் உரோமை கலைவழிப் பாணியையும் கோத்திக் பாணியையும் பெற்றது. பண்டைய உரோமைக் கட்டடங்களிலிருந்து பெறப்பட்ட 22 பெரிய தூண்கள் தமக்குள் வேறுபட்டவையாக இருந்தாலும் இக்கோவில் கட்ட பயன்பட்டன. இன்று இப்பெரும் தூண்கள் கோவிலின் நடுநீள்பகுதியை அதன் பக்கப் பகுதிகளிலிருந்து பிரிக்கின்ற வளைவுகளைத் தாங்கும் வகையில் உள்ளன.
நடுக்காலத்தில் இக்கோவில் வளாகம் சமயம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நிர்ணயிக்கும் மையமாக மாறியது. 14ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி உணர்வு மேலோங்கிய நிலையில் கோலா தி ரியேன்சோ (Cola di Rienzo) என்பவர் இக்கோவிலுக்கு இட்டுச் செல்கின்ற பிரமாண்டமான படிக்கட்டைத் திறந்துவைத்தார். அகன்று விரிந்த 124 படிகள் இக்கோவிலின் அழகைக் கூட்டுகின்றன. இப்படிக்கட்டை 1348இல் வடிவமைத்தவர் சிமோனே அந்த்ரேயோஸ்ஸி (Simone Andreozzi) என்னும் கட்டடக் கலைஞர் ஆவார். உரோமை நகரில் அழிவைக் கொணர்ந்த கொள்ளைநோயிலிருந்து மரியாவின் வேண்டுதலால் விடுதலை கிடைத்ததற்கு நன்றியாகக் கோவில் படிக்கட்டு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு.
இன்றும் கூட "வானக பீட மரியா கோவில்" உரோமை ஆட்சிக் குழுவினர் மற்றும் மக்களின் கோவில் என்றே குறிக்கப்படுகிறது. மரியா கோவிலை அடுத்து கம்பிதோலியோ குன்றில் உரோமை நகராட்சி மன்றம் உள்ளது[3]. சமயமும் சமூகமும் ஒன்றோடொன்று இணைந்தும் உரசியும் சமன்தேடும் வகையில் பண்டைய உரோமையில் செயல்பட்டதுபோல இன்றும் செயல்படுகின்றன என்பது இங்கே அடையாள முறையில் தெரிகிறது எனலாம்.
கோவிலுக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டு கரடுமுரடாகவும் செங்குத்தாக எழுவதாகவும் உள்ளது. அதற்கு மாறாக, உரோமை நகராட்சி மன்றத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கட்டோ பளபளப்பாகவும் எளிதாகக் காலெடுத்து வைத்துச் செல்லும் விதத்தில் மிக அகன்றும் உள்ளன. அதுபோல, கரடுமுரடான படிக்கட்டின் உச்சியில் வெறுமையான செங்கல்லால் கட்டப்பட்டு, யாதொரு அலங்காரமும் இன்றி மரியா கோவில் மலைபோல் எழுகிறது. கலையழகோடு சிறிதுசிறிதாக உயர்ந்துசெல்லும் ஓரச் சுவர்களைக் கொண்ட உரோமை நகராட்சி மன்ற படிக்கட்டு அகலமும் நீளமும் இசைவுற அமைந்த விரிவளாகத்திற்குப் பயணியரைக் கொண்டு சேர்க்கின்றது. அவ்விரிவளாகத்தை எழிலுற வடிவமைத்தவர் உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் ஆவார்.
மரியா கோவிலின் முகப்பு இன்று வெறுமையாகக் காட்சி தந்தாலும் முன்னர் கற்பதிகை ஓவியங்களாலும் சுவர்ச் சித்திரங்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தன என்று கலை வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். நடு வாயிலுக்கு மேலே தெரிகின்ற குழியில் ஒரு பெரிய கடிகாரம் 1412இல் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நேரம் கணிக்க உரோமையில் அமைக்கப்பட்ட முதல் கடிகாரம் அதுவே.
மரியா கோவிலின் உட்புற அமைப்பு
[தொகு]கம்பிதோலியோ குன்றிமேல் எழுகின்ற கோவில் முகப்பின் நடுக்கதவைத் தாண்டி கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் கண்ணில் படுவது பண்டைய உரோமைக் கலைப் பாணியில் அமைந்த கோவில் கட்டட அமைப்பு ஆகும். நடுநீள் பகுதி, அதன் இரு பக்கங்களிலும் இரு பக்க நீள் பகுதிகள், அவற்றைப் பிரிக்கப் பயன்படும் உயர்ந்த தூண்கள் கண்களைக் கவர்கின்றன. அத்தூண்கள் அனைத்தும் பண்டைய உரோமைக் கட்டடங்களிலிருந்து பெறப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.
கோவிலில் உள்ள கலைப் பொருள்கள்
[தொகு]பிற உரோமைக் கோவில்களைப் போலவே, வானக பீட புனித மரியா கோவிலும் பல காலங்களைச் சார்ந்த அழகிய கலைப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பியேத்ரோ கவால்லீனி என்னும் ஓவியர் வரைந்த பல அழகிய சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. ஆயினும் கையில் குழந்தை இயேசுவைத் தாங்கியிருக்கின்ற அன்னை மரியா ஓவியம் எஞ்சியது.
மரத்தாலான கோவிலின் உட்கூரையில் அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாங்கிநிற்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது (1575). அது 1571இல் கிறித்தவப் படைகள் துருக்கியப் படைகளை லெப்பான்டோ போரில் முறியடித்த நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது[4].
கோவிலின் திருத்தூயகப் பகுதியில் பிசான்சியக் கலையில் அமைந்த அன்னை மரியா குழந்தை இயேசுவோடுள்ள ஓவியத் திருப்படிமம் (icon) உள்ளது. இதற்கு "வானக பீட அன்னை மரியா" (Madonna d'Aracoeli) என்னும் பெயர் உண்டு. உறுதியான பீச் மரப்பலகையில் எழுதப்பட்ட இவ்வோவியம் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. ஒருவேளை அதற்கும் முற்பட்ட காலத்ததாகவும் இருக்கலாம். சில அறிஞர் கருத்துப்படி அந்த ஓவியம் 6ஆம் நூற்றாண்டில் கிரேக்கத் துறவிகளால் உருவாக்கப்பட்டு வணக்கத்திற்கு வைக்கப்பட்டது. 1348இல் உரோமையில் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது அத்திரு ஓவியம் உரோமை நகரெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. நோயின் வேகம் அன்னையின் அருளால் தணிந்தது என்று நம்பிய மக்கள் நன்றிசெலுத்தினார்கள்.
1636ஆம் ஆண்டு "வானக பீட அன்னை மரியா" ஓவியத்திற்கு விலையுயர்ந்ததொரு முடி சூட்டப்பட்டது. ஆனால் 1797இல் பிரான்சிய இராணுவம் அம்முடியைத் திருடிச் சென்றுவிட்டது. புதியதொரு முடி 1938இல் சூட்டப்பட்டது. இந்த திருப்படத்தின் முன்னிலையில் உரோமை மக்கள் தங்களை மரியாவின் மாசற்ற இதயத்திற்குக் காணிக்கையாக 1949இல் அர்ப்பணித்தனர்.
ரபயேல்லோ என்னும் புகழ்மிக்க கலைஞர் வரைந்த "ஃபொலீஞ்ஞோ அன்னை மரியா" (Madonna of Foligno) என்னும் ஓவியம் 1512-1516 ஆண்டுக்காலத்தில் இக்கோவிலில் இருந்தது. பின்னர் அது வத்திக்கான் கலைக்கூடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த ஓவியத்தை உருவாக்கப் பணித்த சிஜிஸ்மோந்தோ கோந்தி என்பவரின் கல்லறை மரியா கோவிலின் தரையில் வலப்புறம் உள்ளது.
கோவிலின் வலப்புறம் உள்ள முதல் சிறுகோவில் பீடத்தில் பிந்துரீக்கியோ என்னும் 15ஆம் நூற்றாண்டு ஓவியர் வரைந்த ஓவியங்கள் மிகப் புகழ்பெற்றவை. புனித சீயேனா பெர்னார்தீன் என்பவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இவ்வோவியங்கள் உயிரோட்டமான வண்ணங்களால் தீட்டப்பட்டு, நெஞ்சைக் கவரும் வண்ணம் உள்ளன.
மரியா கோவிலில் வணக்கம் செலுத்தப்படும் குழந்தை இயேசு திருவுருவம்
[தொகு]மரியா கோவிலில் உள்ள சிற்றாலயங்களுள் ஒன்று மிகப் புகழ் பெற்றதாகும். அது "குழந்தை இயேசு சிற்றாலயம்" என்று அழைக்கப்படுகிறது. அங்கே குழந்தை இயேசுவின் சிறு திருவுருவம் உள்ளது. அது புதுமைகள் செய்யும் திருச்சிலையாகக் கருதப்பட்டு, உரோமை மக்களால் போற்றப்படுகிறது.
15ஆம் நூற்றாண்டில் ஒரு பிரான்சிஸ்கு சபைத் துறவி, எருசலேம் சென்று, அங்கு இயேசு துன்பங்கள் அனுபவித்த ஒலிவத் தோட்டத்திலிருந்து ஒரு மரத்தை வெட்டி, அம்மரத்தால் ஒரு குழந்தை இயேசு சிலை செய்தார்.
மரியா கோவிலில் நிறுவப்பட்டிருந்த குழந்தை இயேசு சிலை தங்க ஆபரணங்களால் அணிசெய்யப்பட்டிருக்கும். குழந்தை இயேசுவிடம் மன்றாடி வரம் பெற்ற பக்தர்கள் தாராளமாக அளித்த நன்கொடைகளும், காணிக்கைகளும் அச்சிலையை அணிசெய்யப் பயன்பட்டன.
இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட குழந்தை இயேசு திருச்சிலைமுன் மக்கள் முழந்தாட்படியிட்டு, மன்றாடி, தங்கள் கவலைகள் மறைந்ததைக் கண்டிருக்கின்றனர். கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்ட நாள்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் சென்று குழந்தை இயேசுவிடம் மன்றாட்டுகள் செய்து பயன்பெறுவர். முற்காலத்தில் உரோமை நகரில் நோய்பரவியபோது, அல்லது பேரழிவு ஏற்பட்ட போது இக்குழந்தை இயேசு திருவுரு உரோமை தெருக்களில் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டதுண்டு.
சிறு குழந்தைகளும் பள்ளி சிறுவர்களும் இக்குழந்தை இயேசுவுக்குக் கடிதங்கள் எழுதுவது வழக்கம்.
இவ்வாறு மக்களின் அன்புக்குரியதாக விளங்கிய இத்திருவுருவம் 1994, பெப்ருவர் முதல் நாளில் திருடப்பட்டு காணாமற்போயிற்று. உரோமை முழுவதும் இதனால் துயருற்றது. 3 திருடர்கள் கோவிலில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து அச்சிலையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்தது.
சிலை திருடப்பட்டதைக் கேள்விப்பட்டதும் மக்கள் வேறொரு சிலை செய்துவைப்பதற்கு நன்கொடைகள் அனுப்பினர் அவ்வாறு நன்கொடை அனுப்பியவர்களுள் உரோமையில் பேர்போன "வானக அரசி சிறைச்சாலையில்" அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளும் உள்ளடங்குவர்.
அச்சிறைக்கைதிகள் ஏன் திருடப்பட்ட சிலைக்குப் பதில் வேறொரு சிலை செய்ய நன்கொடை அனுப்பினார்கள் என்று கேட்டதற்கு, "நாங்கள் குற்றம் செய்து இங்கே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். அது உண்மைதான். நாங்கள் கொலைகாரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு!" என்று பதில் கூறினார்களாம்.[5][6].
தற்போது மரியா கோவிலில் இருக்கும் குழந்தை இயேசு சிலை 15ஆம் நூற்றாண்டு சிலையின் ஒரு மாதிரி உருவம் ஆகும். என்றாவது ஒருநாள் குழந்தை இயேசு சிலை மீண்டும் கோவிலுக்குத் திரும்பும் என்று உரோமையர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ வானக பீட புனித மரியா கோவில்
- ↑ பண்டைய உரோமையில் குறிசொல்வோர்
- ↑ "கம்பிதோலியோ"
- ↑ லெப்பான்டோ போர்
- ↑ குழந்தை இயேசு சிலை திருட்டு
- ↑ R. Borngässer: Diebe sammelten für "Bambino Gesu". Welt-Online, 21. August 1996 "திருடப்பட்ட குழந்தை இயேசு சிலை": பார்க்கப்பட்டது: 2011, நவம்பர் 9