உள்ளடக்கத்துக்குச் செல்

புனித இஞ்ஞாசியார் கோவில்

ஆள்கூறுகள்: 41°53′56.4″N 12°28′47.2″E / 41.899000°N 12.479778°E / 41.899000; 12.479778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்சியோ வெளி புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில்
Church of Saint Ignatius of Loyola at Campus Martius
Chiesa di Sant'Ignazio di Loyola a Campo Marzio (இத்தாலியம்)
இஞ்ஞாசியார் கோவில் முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°53′56.4″N 12°28′47.2″E / 41.899000°N 12.479778°E / 41.899000; 12.479778
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1722
நிலைபங்குக் கோவில்; பட்டம் தொடர்புக் கோவில்
தலைமைரொபேர்ட்டோ தூச்சி

புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில் என்பது உரோமை நகரில் இயேசு சபை நிறுவுநரான புனித இஞ்ஞாசியாருக்கு (1491-1556)[1] அர்ப்பணிக்கப்பட்ட முதன்மையான கோவில் ஆகும். இதன் முழுப்பெயர் "மார்சியோ வெளி புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில்" என்பதாகும். ஆங்கிலத்தில் இக்கோவில் Church of Saint Ignatius of Loyola at Campus Martius என்று அழைக்கப்படுகிறது (இத்தாலியம்: Chiesa di Sant'Ignazio di Loyola a Campo Marzio, இலத்தீன்: S. Ignatii de Loyola in Campo Martio).

பரோக் கலைப்பாணியில் அமைந்த இக்கோவில் 1626-1650 ஆண்டுகளில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இக்கோவில் அதன் அருகே அமைந்திருந்த உரோமைக் கல்லூரி (Collegio Romano) என்னும் கல்விக்கூடத்துக்குரிய தனிக்கோவிலாக இருந்தது. இட நெருக்கடி முன்னிட்டு உரோமைக் கல்லூரி வசதியான புதியதொரு இடத்துக்கு அகற்றப்பட்டு, பின்னர் கிரகோரி பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.

தொடக்க வரலாறு

[தொகு]

"உரோமைக் கல்லூரி" (Collegio Romano) என்னும் கல்வி நிறுவனம் எளிய முறையில் 1551இல் தொடங்கப்பட்டது. அதன் நுழைவாயிலின் மேல் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இது: "இலக்கணம், மனித அறிவுப் பாடம், கிறித்தவ போதனை கற்பிக்கப்படும் கல்விக்கூடம். இலவசம்".[2]

தொடக்க காலத்தில் இக்கல்விக் கூடம் பண நெருக்கடியால் வெவ்வேறு மையங்களிலிருந்து செயல்பட்டது. பின்னர் 1560இல் வித்தோரியா தெல்லா தோல்ஃபா (Vittoria della Tolfa) என்னும் பெயர்கொண்ட "மர்க்கேசா தெல்லா வால்லே" (Marchesa della Valle) உரோமைச் சீமாட்டி தமது சொத்திலிருந்து ஒரு பெரும்பகுதியை, அதில் அமைந்திருந்த கட்டடங்கள் உட்பட, இயேசு சபையினருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, "உரோமைக் கல்லூரி" தொடங்குவதற்கு வழி வகுத்தார். தம் கணவர் கமில்லோ ஒர்சீனி[3] என்னும் பிரபுவின் நினைவாக அவர் அந்த அன்பளிப்பைக் கொடுத்தார்.[4]

கிரகோரி பல்கலைக் கழகம்

[தொகு]

பின்னர் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி ஒரு பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுத்ததைத் தொடர்ந்து, அவரையே நிறுவுநராகக் கொண்டு, அவர் பெயராலேயே புதிய கல்விநிறுவனம் "கிரகோரி பல்கலைக்கழகம்" (Gregorian University) என்னும் பெயர் பெற்றுச் சிறப்புறலாயிற்று. [5] அந்நிறுவனத்துக்கு "மர்க்கேசா தெல்லா வால்லே" என்னும் பெயர் கொடுப்பதே அதிகப் பொருத்தம் என்று திருத்தந்தை கூறினார்.

இயேசு சபையினர் கட்டடம்

[தொகு]

உரோமைக் கல்லூரி கட்டுவதற்குப் போதிய நிதி இல்லாததால் இயேசு சபையினர் வெளியிலிருந்து கட்டடக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக, தங்கள் சபை உறுப்பினரே வேலை செய்வது என்று முடிவு செய்தனர். எனவே, இயேசு சபைத் துறவி ஜோவான்னி த்ரிஸ்தானோ கட்டட வேலைக்குப் பொறுப்பேற்றார்.

இயேசு சபையினர் பொறுப்பேற்பதற்கு முன் "ஏழைப் பெண்மணிகள் சபை" என்னும் நிறுவனம் ஏற்கனவே "மங்கள வார்த்தை அன்னை" கோவிலை அந்த இடத்தில் கட்ட ஆரம்பித்திருந்தனர். அது இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் இயேசு சபை உறுப்பினர்களே முன்னின்று உழைத்து அந்த "மங்கள வாழ்த்து அன்னை" கோவிலைக் கட்டி முடித்தார்கள். அக்கோவிலில் 1567இல் முதல் வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது.

விரிவாக்கல் முயற்சி

[தொகு]

உரோமைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது கோவிலை விரிவுபடுத்த இடம் இல்லாமல் போனது. பின்னர் 1558 இல் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி உரோமைக் கல்லூரியை விரிவுபடுத்தியதோடு "மங்கள வார்த்தை அன்னை" கோவிலையும் விரிவுபடுத்தினார்.

கல்லூரி மேலும் வளர்ச்சி கண்டது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்கல்லூரியில் பல நாடுகளிலுமிருந்து 2000க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி தாம் பயின்ற கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினார்.

புனித இஞ்ஞாசியார் கோவில் கட்டப்படுதல்

[தொகு]

இயேசு சபையை நிறுவிய இஞ்ஞாசியாருக்கு 1622இல் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி தம் மருமகன் கர்தினால் லுடோவிக்கோ லுடோவிசி (Cardinal Ludovico Ludovisi)[6] என்பவரிடம் இயேசு சபை நிறுவுநராகிய புனித இஞ்ஞாசியாருக்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு புதிய கோவில் கட்டவேண்டும் என்று கேட்டார். இளைமைப் பருவத்தினராயிருந்த கர்தினால் லுடோவிசியும் அப்பொறுப்பை ஏற்று, புகழ்மிக்க கட்டடக் கலைஞர்களிடம் கோவில் கட்ட வரைவு சமர்ப்பிக்கக் கேட்டார். அவர்களுள் கார்லோ மதேர்னோ (Carlo Maderno)[7] என்னும் தலைசிறந்த கலைஞரும் ஒருவர். வரைவுகளை நன்கு ஆய்வுசெய்தபின் கர்தினால் லுடோவிசி இயேசு சபையைச் சார்ந்தவரும் கணிதத் துறையில் வல்லவருமான ஒராசியோ க்ராஸ்ஸி (Orazio Grassi) என்பவரிடம் கட்டடப் பணியை ஒப்படைத்தார்.

பெரிய அளவில் புதிய கோவில் கட்டுவதற்காக உரோமைக் கல்லூரியின் ஒரு பகுதியை இடிக்க வேண்டியதாயிற்று. எனவே புதிய கோவில் கட்டட வேலை 1626இல் தொடங்கியது. இதற்கிடையில் "மங்கள வார்த்தை அன்னை" பழைய கோவில் 1650இல் இடிக்கப்பட்டது. இஞ்ஞாசியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் வேலை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் நிறைவுற்றது.

உரோமைக் கல்லூரியும் "மங்கள வார்த்தை அன்னை" பழைய கோவிலும் இருந்த இடத்தில் பிரமாண்டமாக எழுந்த புதிய இஞ்ஞாசியார் கோவிலில் பொது வழிபாடு 1650இல் நடக்கத் தொடங்கியது. அது ஒரு ஜூபிலி ஆண்டு.

1722இல் இஞ்ஞாசியார் கோவில் ஆடம்பரமாக நேர்ந்தளிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கர்தினால் அந்தோன்ஃபெலீச்சே சோண்டடாரி (Antonfelice Zandadari) என்பவர் தலைமை தாங்கினார்.

கோவிலின் உட்பகுதி

[தொகு]
குவிமாடம் போல் தோற்றமளிக்கும் கோவில் உட்கூரைப் பகுதி. உண்மையான குவிமாடம் அல்ல.
உட்கூரை போல அமைந்த கோவில் உட்பகுதி ஓவியங்கள்
நடுப்பீடத்திற்கு மேல் எழுகின்ற உட்கூரையும் ஓவியங்களும்

இக்கோவில் இலத்தீன் சிலுவை (Latin Cross) வடிவத்தில் அமைந்தது. இக்கோவிலுக்கு முன் மாதிரி உருவாக உரோமையில் அமைந்துள்ள இயேசு சபைத் தாய்க்கோவிலாகிய இயேசு கோவில் கொள்ளப்பட்டது. அக்கோவில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது.

புனித இஞ்ஞாசியர் கோவிலின் உட்பகுதியில் பல சிறப்புக் கூறுகள் உள்ளன:

  • கொரிந்து பாணி தூண்கள் கோவிலின் உட்புற நீள்பகுதியின் இரு புறங்களையும் அணிசெய்கின்றன.
  • நடுப்பீடம் கலைமேடை போல எழுகின்றது.
  • கோவிலின் உள் தரையில் பல வண்ண பளிங்குக் கற்கள்.
  • சுவர்ச்சாந்து கொண்டு வடிக்கப்பட்ட அழகிய மலர்ப் பாணி பூச்சுகள்.
  • நன்கு அணி செய்யப்பட்ட பீடங்கள்.
  • பரவலாகப் பூசப்பட்டுள்ள தங்க முலாம்.
  • நீள்பகுதிக் கூரையும் குவிமாடமும் அற்புதமான கலைப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.
  • சுவர்ச்சாந்தினால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான புனித இஞ்ஞாசியாரின் சிலை (கலைஞர்: கமில்லோ ருஸ்கோனி - 1728).
  • கண்ணாடியால் அமைந்த அடக்கப் பெட்டியில் புனித ராபர்ட் பெல்லார்மின் அடக்கப்பட்டிருக்கிறார்.

கோவிலில் உள்ள மாயத் தோற்றப் பகுதிகள்

[தொகு]

புனித இஞ்ஞாசியார் கோவிலில் இரண்டு கூறுகள் மாயத் தோற்றம் அளிக்கின்றன. அவை:

  • கோவிலின் நீள்பகுதி உள்கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தொகுதி கோவில். இன்னும் இரண்டு மாடிகள் மேலே எழுந்து செல்வது போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கின்றது.
  • அதுபோலவே, கோவிலின் தூயகப் பகுதிக்கு மேலே கூரையாக அமைகின்ற "குவிமாடம்". உண்மையில் அங்கே குவிமாடம் இல்லை. மாறாக குவிமாடம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
  • நீள்பகுதியில் அமைந்துள்ள உள்கூரை ஓவியத் தொகுதி மிக்க அழகுவாய்ந்தது. அதை அந்திரேயா போட்சோ (Andrea Pozzo) என்னும் இயேசு சபை சகோதரர் வரைந்தார் (1685). அந்த ஓவியத் தொகுதியில் புனித இஞ்ஞாசியார் நிறுவிய இயேசு சபை உலகமெங்கும் பரவியதும், அதன் வெற்றிகளும் உயிரூட்டத்தோடு சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இஞ்ஞாசியார் விண்ணகம் செல்கிறார். அவரை இயேசுவும் அன்னை மரியாவும் வரவேற்கின்றார்கள். அக்காட்சியைச் சூழ்ந்து அமைகின்ற ஓவியம் இயேசு சபை பரவியிருக்கின்ற நான்கு கண்டங்களைச் சித்தரிக்கிறது.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sant'Ignazio
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. புனித இஞ்ஞாசியார்
  2. O'Malley, John (1993). The First Jesuits. Cambridge: Harvard University Press. p. 366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674303133.
  3. ஒர்சீனி குடும்பம்
  4. Bailey, Gauvin (2003). "Jesuit Teaching and a Brief History of the Roman Collegiate Institutions". Between Renaissance and Baroque. Toronto: University of Toronto Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802037216.
  5. கிரகோரி பல்கலைக்கழகம்
  6. கர்தினால் லுடோவிக்கோ லுடோவிசி
  7. கார்லோ மதேர்னோ

வெளி இணைப்புகள்

[தொகு]