யாழ்ப்பாணத்தில் குடியேற்றவாத ஆட்சி
யாழ்ப்பாணத்தில் குடியேற்றவாத ஆட்சி என்பது, போத்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய இனத்தவருடைய ஆட்சி ஆகும். இது 1620 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டுவரையான 328 ஆண்டுகளை அடக்கிய காலப்பகுதியாகும். இதில், முதல் 38 ஆண்டுகாலம் போத்துக்கீசரும், அடுத்துவந்த 138 ஆண்டுக்காலம் ஒல்லாந்தரும் மிகுதியான காலப்பகுதியாகிய 152 ஆண்டுகள் பிரித்தானியரும் ஆண்டனர்.
போத்துக்கீசர் ஆட்சி
[தொகு]போத்துக்கீசரின் நேரடி ஆட்சி 1620 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் தொடங்கியது எனினும், இதற்குச் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரேயே யாழ்ப்பாண அரசில் போத்துக்கீசர் தலையிடத் தொடங்கிவிட்டனர் எனலாம். 1560 ஆம் ஆண்டு வாக்கில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய தாக்குதல் முழு வெற்றி பெறாவிட்டாலும், மன்னார்த் தீவைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் 1590 ஆம் ஆண்டளவில் நடத்திய தாக்குதல் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டுத் தாங்கள் விரும்பிய ஒரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அடுத்து மீண்டும் 1620 ல், படையெடுத்த போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியை யாழ்ப்பாணத்தில் நிறுவினர்.
கத்தோலிக்க மதம்
[தொகு]யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்று கத்தோலிக்க மதத்தின் அறிமுகமாகும். போத்துக்கீசரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாண அரசுக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவில் இருந்துவந்த, கத்தோலிக்க மதப் பிரசார முயற்சிகள், 1590 ஆம் ஆண்டின் படையெடுப்புக்குப் பின்னர் அதிகரித்தது. யாழ்ப்பாணம் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் இது மிகவும் தீவிரம் அடைந்ததுடன், எல்லா இந்துக் கோயில்களும் இடிக்கப்பட்டதுடன், இந்து சமயத்தைக் கைக்கொள்வதும் தடை செய்யப்பட்டது. பெருந்தொகையில் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். 1624 க்கும், 1626 க்கும் இடையில், பிரான்சிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் யாழ்ப்பாணத்தில் 52,000 மக்களை மதம் மாற்றியதாகத் தெரிகின்றது.
போத்துக்கீசரின் வரிக்கொள்கை
[தொகு]போத்துக்கீசரின் வரிக் கொள்கை முதல் சில ஆண்டுகளுக்கு, யாழ்ப்பாணத்து அரசர் கால முறைகளைப் பின்பற்றுவதாகவே அமைந்திருந்தது. குடியேற்ற நாடொன்றில் செலவுகளுக்குரிய வருமானத்தை அந்தந்த நாடுகளிலேயே உருவாக்கிக் கொள்வதென்ற, லிஸ்பனில் இருந்த போத்துக்கீச அரசின் கொள்கையோடு பொருந்தி வந்த காரணத்தாலேயே இவ்வாறு செய்யப்பட்டது. ஆனால், 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள்மீது அதிக வரிச்சுமை ஏற்றப்பட்டது. மேலதிக வருமானம், திருகோணமலை, கொழும்பு, கொச்சின் முதலிய, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள இடங்களின் தேவைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மக்கள் வெளியேற்றம்
[தொகு]இந்த மத நிறுவனங்களின் நடவடிக்கைகளினாலும், வரிச்சுமையாலும் பெருமளவில் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்ததாகத் தெரிகிறது. இவர்களில் பலர் போத்துக்கீசரின் கெடுபிடிகள் குறைவாக இருந்த வன்னிக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் சென்றனர். இதனால் யாழ்ப்பாணத்தின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. முழுமையாக நோக்கும்போது போத்துக்கீசர் ஆட்சிக்காலம் யாழ்ப்பாணத்தவரின், பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை தொடர்பிலேற்பட்ட மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும்.
ஒல்லாந்தர் ஆட்சி
[தொகு]1658 ஆம் ஆண்டில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தரிடம் இழந்தனர்.
உசாத்துணைகள்
[தொகு]- அபயசிங்க, டிக்கிரி. போத்துக்கீசரின் கீழ் யாழ்ப்பாணம் (Jaffna Under the Portuguese), லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிட்., கொழும்பு, 1986. (ஆங்கில மொழியில்)
- பீரிஸ், பி. ஈ, யாழ்ப்பாணப்பட்டின அரசு 1645 (Kingdom of Jafnapatnam 1645), 1920, மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், 1995. (ஆங்கில மொழியில்)