உள்ளடக்கத்துக்குச் செல்

மேலக்கால் முஹம்மது பிலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரபத்திரன் என்ற முற்பெயர் கொண்ட முஹம்மது பிலால் ஒரு சமூக செயற்பாட்டாளர்.

மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தில் கருப்பன், கருப்பாயி தம்பதியினருக்கு 16.07.1919 ல் பிறந்தவர். சோழவந்தான் அருகில் ஆலங்கொட்டாரம் பள்ளியில் படித்தார். 1940களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ (வரலாறு) பட்டம் பெற்றவர். இவரது கிராமத்தில் புகழ்பெற்ற நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தீண்டாமையை அனுபவித்தவர். கிராமத்தில் தேனீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறையினை முழுவதுமாக ஒழிப்பதற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் செலவிட்டார். கலப்புத் திருமணங்களை ஆதரித்ததோடு நில்லாமல் தனது மகன்களுக்கும் கலப்பு மணம் செய்து வைத்தவர்.

பின்னாளில் ஜனாப் மேலக்கால் முஹம்மது பிலால் என்று அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் அரசுப் பணிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும், வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மேலும் பல நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்தவர்.[1] இதுபோலவே இந்திய ராணுவத்திலும் உயர் பதவி வகித்தவர். இவர் 1946ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் மதுரை விக்டோரியா ஹாலில் பலர் திரண்டிருந்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய ஆங்கில உரையினை தமிழில் மொழி பெயர்த்தார். அவர் வகித்த அனைத்து அரசு பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டு அம்பேத்கரின் யோசனையின் பேரில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் யானை சின்னத்தில் போட்டியிட்டார். அங்கேயே ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென 'சாந்தி மாணவர் இல்லம்' துவக்கினார். இன்றும் அந்த மாணவர் விடுதி தமிழக அரசால் ஏற்கப்பட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறது. இவர் இந்திய தேசிய காங்கிரஸ், அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்கள் மூலமும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டவர். சகோதரத்துவத்துக்கான அமைப்பான 'சமூக நீதிப் பேரவை'யின் தோற்றுநராகவும் இருந்தார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக அரசியல் ரீதியாக அம்பேத்கர், காமராஜர், ராம் விலாஸ் பாஸ்வான் வை.பாலசுந்தரம் போன்றோருடனும், சமூக முன்னேற்றத்திற்காக அப்துல்லாஹ் அடியார் கேப்டன் அமீர் அலி, ஜவாஹிருல்லா எஸ். எம். பாக்கர், அப்துர் ரவுஃப் ஆஸாத், மற்றும் பலருடன் இணைந்து செயல் புரிந்தார்.

மேலக்கால் வீரபத்திரன், இவர் அன்றைய நாளில் (1960) மாவட்ட ஆட்சியர் தேர்வுக்காக நடத்தப்படும் இ.கு.ப (Indian Civil Service, ICS) தேர்வில் தேர்வானவர். பெரியாரியல்/பெரியாரியத்தை பின் பற்றுபவராகவும், அம்பேத்காரின் மாணவராகவும் இருந்தவர். சம உரிமைக்காக மேலக்காலில் இவர் நடத்திய போராட்டங்களால் மாவீரனாக அடையாளப்படுத்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் கொல்லப்பட்டபின், அதன் பின் நடந்த முதுகுளத்தூர் கலவரங்களுக்கு காரணமானவர்களை சிறைப்படுத்த வேண்டும் என பல அறப்போராட்டங்களை நடத்தியவர். 1988ல் நடந்த போடி கலவரம், கொடியங்குளம் நிகழ்வு அதையொன்றி தாமிரபரணி கொடுமைகள், கீழவளவு நிகழ்வு என பல நிகழ்வுகளுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தவர்

பின்னாளில் இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமையினால் 06.12.1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் 300 தாழ்த்தப்பட்டோர் அடங்கிய 1000 பேருடன் சென்னை அசோக் நகர் பள்ளிவாசலில் இஸ்லாம்/இஸ்லாமிய மதத்துக்கு மாறினார்.அன்றைய தினம் அம்பேத்காரின் பிறந்த தினம் ஆகும். இவரைப் பின்பற்றி பலரும் மேலக்காலில் மதம் மாறியுள்ளனர். இவர் 28.11.2006 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இன்றைக்கு மேலக்காலில் பல மாணவர்கள் படித்து துபாய், இஸ்ரேல், அமெரிக்கா என்றும், சென்னையில் பன்னாட்டு மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பொறியாளர் என்றும், அரசுப் பணிகளிலும் - விரிவுரையாளர், மேற்பார்வையாளர் , வழக்கறிஞர் என சென்றதற்கு வீரபத்திரன் இட்ட அடித்தளமே காரணமாகும்.

இவரது துணைவியார் மணிராஜம்மாள் என்ற ஆயிஷா பேகம் தனது கணவருக்கு தீண்டாமை ஒழிப்பு பணியில் உறுதுணையாக இருந்தார். இவரது சமூகத்தில் முதல் முதலில் ரவிக்கை அணிந்த, படித்த பெண்மணி இவர். இவர் தனது இஸ்லாமிய மத மாற்றத்திற்குப் பிறகு அளித்த பேட்டி 2012 ஃபெப்ரவரி மாதத்தின் தலித் முரசு பத்திரிகையிலும் அன்பு செல்வன் எழுதிய விடுதலையின் வேர்காணல் என்ற புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மேலக்கால்". onefivenine. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.