மயிலை சிவ. முத்து
மயிலை சிவமுத்து | |
---|---|
பிறப்பு | மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி சனவரி 15, 1892 மயிலாப்பூர் |
இறப்பு | 6 சூலை 1968 சென்னை | (அகவை 76)
தொழில் | ஆசிரியர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
மயிலை சிவ. முத்து என்னும் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி இசைப்பாடகர், தமிழ்நெறிக் காவலர், பேராசிரியர், மாணவர் மன்றத் தலைவர், சமூகத் தொண்டர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர், இதழாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]மயிலை சிவ. முத்து 1892ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[1]
இவர் மயிலாப்பூரில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அக்கல்வி தடைபட்டது. பின்னர் 1904 ஆம் ஆண்டில் எழுப்பூரில் உள்ள சென்னை கைவினைக் கல்லூரியில் (தற்பொழுது கவின்கலைக் கல்லூரி, சென்னை) ஓவியம் கற்றச் சென்றார். தந்தையின் மறைவின் காரணமாக அக்கல்வியும் தடைபட்டது. சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். ஒழிந்த நேரத்தில் சிறு சிறு நூல்களைப் படித்துத் தன்னுடைய தமிழ் அறிவையும் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார்.
இவர் இசைப் பாடகராக இருந்ததால் சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அக்கூட்டத்தால் நிறுவப்பட்ட பால சைவ சபையில் சொற்பொழிவாற்றப் பழகினார். அங்கே தமிழறிஞர்களான ஆதிமூல முதலியார், மணி.திருநாவுக்கரசர் ஆகியவர்களின் நட்பைப் பெற்றார்.
திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். இதனால் உயர் நீதிமன்ற அச்சகப் பணியிலிருந்து 1912ஆம் ஆண்டில் விலகினார். 1912-14ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.[1]
ஆற்றிய பணிகள்
[தொகு]1914ஆம் ஆண்டில் சென்னை கொண்டியம்பதியில் சிவனடியார் கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வந்த சைவ ஆரம்பப் பாடசாலையில் தலைமையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார்.
1917ஆம் ஆண்டில் மயிலை சிவ.முத்து தம் ஆசிரியரான திருநாவுக்கரசரின் விருப்பத்திற்கிணங்க முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி 1947ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[1]
தமிழ்ப்பணி
[தொகு]1931ஆம் ஆண்டில் மருத்துவர் தருமாம்பாள் தலைமையில் உருவாக்கப்பட்ட மாணவர் மன்றப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.[1]
1938ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
மருத்துவர் தருமாம்பாள் தலைவராக இருந்த தாய்மார்கள் கழகத்தில் திருக்குறள் தொடர் வகுப்புகளை நடத்தினார்.[1]
1957ஆம் ஆண்டில் மருத்துவர் தருமாம்பாள் மறைவுக்குப் பிறகு மயிலை சிவ. முத்து மாணவர் மன்றத்தின் தலைவர் ஆனார். அப்பொழுது, நாளடைவில் சென்னையில் வாழ்ந்த மாணவர்களிடையே கலை நலமும், கல்வி வளமும் பெருகக் கலைப்போட்டிகளை நடத்தினார். உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயின்ற மாணவர்களுக்கு முன் மாதிரித் தமிழ்த் தேர்வுகளை மாநில அளவில் நடத்தினார்.[1]
1961ஆம் ஆண்டில் மாணவர் மன்றத்தின் சார்பில் நித்திலக்குவியல் என்னும் இதழைத் தொடங்கினார். அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். மாணவர் மன்றத்திற்கென சொந்தக் கட்டிடம் கட்டினார். அம்மன்றத்தின் சார்பில் 1963ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.[1]
நூல்கள்
[தொகு]- என் இளமைப் பருவம்
- தமிழ்த் திருமண முறை
- சிவஞானம்; மாணவர் மன்றம், சென்னை.
- தங்கநாணயம்; மாணவர் மன்றம், சென்னை.
- தமிழ்நெறிக்காவலர்; மாணவர் மன்றம், சென்னை.
- திருக்குறள் – எளிய உரை
- நல்ல எறும்பு; மாணவர் மன்றம், சென்னை.
- நித்திலக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
- நித்தில வாசகம்
- முத்துக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
- முத்துப்பாடல்கள் (இந்திய ஒன்றிய அரசின் பரிசைப் பெற்றது)
- வரதன்; மாணவர் மன்றம், சென்னை.
மறைவு
[தொகு]மயிலை சிவ. முத்து 1968 – சூலை 6ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார்.[1]