மதுரை சுல்தானகம்
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
மதுரை சுல்தானகம் அல்லது மாபார் சுல்தானகம் (பாரசீக மொழி: مابار سلطنت), பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இஸ்லாமிய அரசு.[1]
பின்புலம்
[தொகு]முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) மரணத்திற்கு பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இஸ்லாமிய வரலாற்றாளர்கள் அப்துல்லா வசாஃப், அமீர் குஸ்ரோ ஆகியோரின் குறிப்புகள், வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றன. இதனால் கஃபூரின் படைகள் கி. பி. 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடை பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் குஸ்ராவ் கான் தலைமையிலும் (1318), உலூக் கானின் (1323) தலைமையிலும் மதுரையை சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்து விட்டார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது.[2][2][3]
1325 ஆம் ஆண்டு உலூக் கான் முகமது பின் துக்ளக் என்ற பெயருடன் டெல்லி சுல்தானாக முடி சூடினார். பாரசீகம் மற்றும் கொரோசான் (தற்கால ஆஃப்கானிஸ்தான்) நாடுகளின் மீது அவரது படையெடுப்பு முயற்சிகள் அவரது கருவூலத்தைக் காலி செய்தன. இதனால் அவரது படையினருக்கு ஊதியம் சரிவர வழங்க இயலவில்லை. அவரது பேரரசின் எல்லையோரப் பிரதேசங்கள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. முதலில் வங்காளம் போர்க்கொடி தூக்கியது. பின்னர் மாபார் ஆளுனர் ஜலாலுதீன் ஆசன் கான் மதுரையை சுதந்திர நாடாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 1335 ஆம் ஆண்டே மதுரை சுல்தானகம் தோன்றிய ஆண்டாகக் கருதப்படுகிறது, சுல்தானகம் வெளியிட்ட நாணயங்களும் இவ்வாண்டே தொடங்குகின்றன. ஆனால் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா 1340 ஆம் ஆண்டு மாபார் பிரிந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.[3]
சுல்தான்கள்
[தொகு]ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். இவரது மகன் இப்ராஹீம் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றினார். மாபார் பிரிந்து சென்ற செய்தியை கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த துக்ளக் இப்ரஹீமை கொலை செய்தார். பெரும் படையுடன் மாபாரை மீண்டும் கைப்பற்ற தெற்கு நோக்கி கிளம்பினார். ஆனால் வழியில் உடல் நலக்குறைவினால் படையெடுப்பை கைவிட நேர்ந்தது. ஜலாலுதீனின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது. ஜலாலுதீனின் மகளை மொரோக்கோ நாட்டின் வரலாற்றாளர் இப்னு பதூதா மணந்திருந்தார். 1340 ஆம் ஆண்டு ஜலாலுதீன் அவருடை பிரபு (சிற்றரசர்) ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் சுல்தானாகிய அலாவுதீன் உதாஜி, குதுப்துதீன் ஃபிரோஸ் ஆகியோரும் முடிசூடிய குறுகிய காலத்தில் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பின்னர் மதுரை சுல்தானகம் கியாத்துதீன் முகமது தம்கானியின் ஆட்சியின் கீழ் வந்தது. இபுன் பத்தூதா கியாத்துதீனின் ஆட்சி காலத்தில் மதுரைக்கு வந்தார். அவரது குறிப்புகள் கியாத்துதீன் ஆட்சி ஒரு கொடுங்கோலனின் ஆட்சி என்று வர்ணிக்கின்றன. கியாத்துதீன், போசள மன்னர் மூன்றாம் வீர வல்லாளன் மோதினார். முதலில் தோல்வி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வல்லாளரை சிறைபிடித்தார். வல்லாளரைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார். 1344 ஆம் ஆண்டு வீரிய மருந்து ஒவ்வாமை காரணமாக, கியாத்துதீன் மரணமடைந்தார்.[4][5]
கியாத்துதீன் மரணத்திற்கு பிறகு மதுரை சுல்தானகம் வலுவிழந்தது. விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. 1344-1371 காலகட்டத்தில் நசுரீதின் தம்கானி, ஷம்சுதீன் ஆதில் ஷா, ஃபக்ரூதின் முபாரக் ஷா, அலாவுதீன் சிகந்தர் ஷா ஆகியோர் மதுரையின் சுல்தான்களாக இருந்தனர். விஜய நகர் படைகள் சம்புவரையர்களை வென்று, ஸ்ரீரங்கத்தை கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின. சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், சிக்கந்தர் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின் சமாதிகள் மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது.[5][6][7]
சுல்தான் | ஆட்சி காலம் |
---|---|
ஜலாலுதீன் ஆசன் கான் | கிபி 1335–1339 |
அலாவுதீன் உதாஜி | கிபி 1339 |
குதுப்துதீன் ஃபிரோஸ் | கிபி 1339–1340 |
கியாத்துதீன் முகமது தம்கானி | கிபி 1340–1344 |
நசுரீதின் தம்கானி | கிபி 1344–1356 |
ஷம்சுதீன் ஆதில் ஷா | கிபி 1356–1358 |
ஃபக்ரூதின் முபாரக் ஷா | கிபி 1358–1368 |
அலாவுதீன் சிகந்தர் ஷா | கிபி 1368–1378 |
ஆட்சி குறிப்புகள்
[தொகு]மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனு பதூதாவின் குறிப்புகளும், கங்கதேவியின் மதுரா விஜயம் இரண்டுமே, மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய தாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.[8][9][10]
அழிவு
[தொகு]கிபி 1378ல் விஜயநகரப் பேரரசர் முதலாவது புக்கா ராயனின் மகன் இளவரசர் குமார கம்பணன், மதுரை சுல்தான்களை வென்றார். பின்னர் மதுரையில் மதுரை நாயக்கர்கள் ஆட்சி நிறுவப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Aiyangar, Sakkottai Krishnaswami (1921), South India and her Muhammadan Invaders (PDF), Madras, British India: Humphrey Milford, Oxford University Press
- Batuta, Ibn (1854–74), Defrémery, Charles François; Beniamino Raffaello, Sanguinetti (eds.), Voyages d'Ibn Batoutah (PDF), Paris: La Societé Asiatique, L'Imprimerie Nationale
{{citation}}
: CS1 maint: date format (link) - Majumdar, R.C. (ed.) (2006), The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan
{{citation}}
:|given1=
has generic name (help) - Sastri, KA Nilakanta (2005) [1955], A History of South India (Paperback ed.), Chennai: Oxford University Press
{{citation}}
: External link in
(help)|title=
- Devi, Ganga (1924), Sastri, G Harihara; Sastri, V Srinivasa (eds.), Madhura Vijaya (or Virakamparaya Charita): An Historical Kavya, Trivandrum, British India: Sridhara Power Press
- Lee, Samuel (1829), The travels of Ibn Batuta :translated from the abridged Arabic manuscript copies, preserved in the Public Library of Cambridge. With notes, illustrative of the history, geography, botany, antiquities, &c. occurring throughout the work (PDF), London: Oriental Translation Committee, p. 191
- Chattopadhyaya, Brajadulal (2006), Studying Early India: Archaeology, Texts and Historical Issues, Anthem Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843311321, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843311324
{{citation}}
: External link in
(help)|title=
மேலும் படிக்க
[தொகு]- நரசய்யா (2009), ஆலவாய், பழனியப்பா பிரதர்ஸ்