மண் மாசடைதல்
மண் மாசடைதல் (Soil contamination, soil pollution) மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் கலப்பதாலும், இயற்கை மண் சூழலில் ஏற்படும் வேறு மாற்றங்களாலும் உருவாகிறது. பொதுவாக இவ்வாறான மாசடைதல், நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிகள் உடைதல், பூச்சிகொல்லிப் பயன்பாடு, மாசடைந்த மேற்பரப்பு நீர் நிலக்கீழ் மட்டங்களுக்குச் செல்லல், எண்ணெய் மற்றும் எரிபொருட் கழிவுகளைக் கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நிலத்தில் வெளியேற்றுதல் போன்றவற்றால் ஏற்படுகின்றது. மிகப் பொதுவான வேதிப்பொருள் மாசுகள், பெட்ரோலிய ஐதரோகாபன்கள், கரையங்கள், பூச்சிகொல்லிகள், ஈயம், பார உலோகங்கள் போன்றனவாகும். இந்த மாசடைதல் தோற்றப்பாடு, தொழில்மயமாதல், வேதிப்பொருட் பயன்பாடு என்பவற்றுடன் ஒத்திசைவாக நடைபெறுகிறது.
மண் மாசடைதலால் ஏற்படக்கூடிய முதலாவது பிரச்சினை உடல்நலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புத் தொடர்பானது. இது நேரடித் தொடர்பாலோ, மண்ணுடன் நேரடித்தொடர்புடைய நீர் மாசடைதல் மூலமோ ஏற்படலாம். மாசடைந்த மண் பகுதிகளைக் குறித்துவைத்துச் சுத்தப்படுத்துதல் பணச் செலவையும், நேரச் செலவையும் ஏற்படுத்தும் ஒரு வேலையாகும். இதற்கு நிலவியல், நீரியல், வேதியியல், கணினி ஆகிய துறைகள் தொடர்பான திறனும் தேவை.