புலம்பல் (நூல்)
விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
கிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல் |
புலம்பல் (Book of Lamentations) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
பெயர்
[தொகு]புலம்பல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் אֵיכָה (Eikha, ʾēḫā(h)) என்னும் பெயர் கொண்டது. "அந்தோ!" ("ஐயோ!") எனப் பொருள்படும் அச்சொல்லே இந்நூலின் தொடக்கமாக இருப்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டது. கிரேக்க மொழிபெயர்ப்பு "எரேமியாவின் புலம்பல்" என்னும் பொருள்கொண்ட "Threnoi Hieremiou" என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இலத்தீன் மொழிபெயர்ப்பும் அவ்வாறே அமைந்தது ("Lamentationes"). இந்நூலின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பு புலம்பல் ஆகமம் என்னும் பெயர் கொண்டிருந்தது.
கிறித்தவர்கள் இந்நூலின் பகுதிகளைப் பெரிய வெள்ளிக் கிழமையில் இயேசுவின் துன்பங்களை நினைவுகூரும் வண்ணம் அறிக்கையிட்டு தியானிப்பது வழக்கம்.
உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர்
[தொகு]"புலம்பல்" என்னும் இத்திருநூல் ஐந்து எபிரேய அகர வரிசைக் கவிதைகளால் ஆனது. கி.மு. 586இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது.
எரேமியா என்னும் இறைவாக்கினரின் காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்நூலில், அவலச் சுவையே மேலோங்கி நிற்கின்றது. ஆயினும், கடவுளின் அருளினால் கிடைக்கவிருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் ஆங்காங்கே வெளிப்படுகிறது. இக்கவிதைகள், மேற்குறிப்பிட்ட பேரழிவின் நினைவு நாளுக்கான நோன்பு வழிபாட்டில், யூதர்களால் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகின்றன.
முதல் புலம்பல் (அதிகாரம் 1): எருசலேம் அழிவுற்ற நிலையில் தன் துயரங்களை எடுத்துக் கூறி, ஒரு "கைம்பெண்" போல ஒப்பாரி வைக்கிறது.
இரண்டாம் புலம்பல் (அதிகாரம் 2): எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவுக்குக் காரணம் மக்களின் பாவமே என்றும், அதனால் கடவுள் தண்டனை அளித்தார் எனவும் அமைந்துள்ளது.
மூன்றாம் புலம்பல் (அதிகாரம் 3): கடவுளால் தேர்ந்துகொண்ட மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்னும் கருத்து வெளிப்படுகிறது. கடவுள் அனுப்பும் துன்பங்கள் மக்களைக் கண்டித்துத் திருத்தி அவர்களை நல்வழிக்குக் கொண்ரவே என்னும் கருத்து துலங்குகிறது.
நான்காம் புலம்பல் (அதிகாரம் 4): மக்கள் செய்த பாவத்தின் விளைவாக எருசலேம் நகரும் திருக்கோவிலும் அழிந்துபட்டன என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
ஐந்தாம் புலம்பல் (அதிகாரம் 5): மக்கள் மனம் திரும்பி கடவுளை நாடிச்சென்று மன்னிப்பு அடையும்படியாக வேண்டல்.
முதல் நான்கு புலம்பல் கவிதைகளும் எபிரேய மொழி அகர வரிசைப்படி தொடங்குகின்றன. பாடல் 1, 2, 4 ஆகிய மூன்று பாடல்கள் ஒவ்வொன்றிலும் 22 வசனங்கள் உள்ளன. எபிரேய அரிச்சுவடியில் உள்ள அனைத்து 22 எழுத்துக்களும் தொடக்கமாக வரிசைப்படி அமைந்துள்ளன.
மூன்றாம் கவிதை 66 வசனங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூன்று வசனங்களும் ஓரெழுத்துக் கொண்டு தொடங்குவதாக அப்பாடல் உள்ளது.
ஐந்தாம் கவிதை அகர வரிசைப்படி வரவில்லை. ஆனால் அங்கும் 22 வசனங்கள் உள்ளன.
தமிழ்ச் செய்யுள் வகையில் அந்தாதி இருப்பதுபோல, எபிரேய செய்யுள் அமைப்பாக அகர வரிசை ஓர் அணியாக வடிவம் பெறுகிறது (acrostics).
இந்நூலின் ஆசிரியர் எரேமியா இறைவாக்கினர் என்பது மரபு. ஆயினும் இந்நூலின் ஓரிடத்திலும் எரேமியாவின் பெயர் வரவில்லை. இரண்டாம் குறிப்பேடு என்னும் விவிலிய நூல் "யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார்" என்று கூறுகிறது (2 குறிப்பேடு 35:25). ஆயினும், புலம்பல் நூலை இயற்றியவர் பலராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி
[தொகு]புலம்பல் 4:1-4
ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே!
பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே!
திருத்தலக் கற்கள் தெருமுனை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!
பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் மைந்தர்
இன்று குயவனின் கைவினையாம்
மட்பாண்டம் ஆயினரே!
குள்ளநரிகளும் பாலூட்டித் தம் பிள்ளைகளைக் காக்கும்!
பாலைநிலத் தீக்கோழியென
என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!
பால்குடி மறவாத மழலைகளின் நாவு
தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!
பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை
அளித்திடுவார் யாருமிலர்!
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, John (1746–1763). "Lamentations 5". Exposition of the Entire Bible.
- ↑ Lee, David. "Lamentations: introducing this version". ServiceMusic (in ஆங்கிலம்). ServiceMusic. Archived from the original on 2024-05-18. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
- ↑ Renau, J.S. (20 July 2010). "I Form the Light and Create Darkness". Contemporary Poetry Review (in ஆங்கிலம்). Archived from the original on 2024-02-29.
உட்பிரிவுகள்
[தொகு]பொருளடக்கம் | அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
பாடல் 1: எருசலேமின் துன்பங்கள் | 1:1-22 | 1198 - 1200 |
பாடல் 2: எருசலேமுக்குரிய தண்டனை | 2:1-22 | 1200 - 1202 |
பாடல் 3: தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும் | 3:1-66 | 1202 - 1204 |
பாடல் 4: வீழ்ச்சியுற்ற எருசலேம் | 4:1-22 | 1204 - 1206 |
பாடல் 5: இறைவனின் இரக்கத்திற்காக வேண்டல் | 5:1-22 | 1206 |