பாக்திரியா
பாக்திரியா அல்லது பாக்தர் அல்லது பாக்ட்ரியா (Bactria) பண்டைய ஈரானியர்களுடைய பழம்பெரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகும். இதன் வடக்கிலும், வடகிழக்கிலும் பாமிர் மலைகள் அமைந்துள்ளது. இன்றைய ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய பழமையான பாக்தரியா நகரம் இந்து குஷ் மலைத்தொடரில் உற்பத்தியாகும் ஆமூ தாரியா நதிக்கரையில் அமைந்திருந்தது.[1]ஜொராஷ்டிரிய சமயம் இங்கு தோன்றியதாகும். இஸ்லாமியர்களின் வருகைகு முன்பு இங்கு பௌத்தம் பரவியிருந்தது. பின்னர் ஏழாம் நூற்றாண்டில் ரஷிதுன் கலிபா, உமய்யத் கலிபா ஆகிய கலீபாக்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. கிரேக்கத்தில் பாக்தரியா பகுதி சிலநேரங்களில் 'பாக்த்திரியனா' என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதியில் பாக்திரியா-மார்கியானா தொல்லியல் வளாகம் உள்ளது.
புவியியல்
[தொகு]பி. இலெரிச் என்பவரது கூற்றின்படி[2]
பேக்தராவைத் தலைநகராகக் கொண்ட பேக்த்திரியா இராச்சியமானது ஆமூ தாரியாவின் தெற்கே இருந்த பகுதிகளையும் பாக் ஆறு, தஷ்குர்கன், கோன்டுசு, சார் எ போல், சிரின் டாகோ ஆகிய நதிகளிலிருந்து பெறும் நீரைச் சார்ந்த பாலைவனச் சோலை நகரங்களையும் உள்ளடக்கிய பிரதேசம். இப்பகுதி மத்திய ஆசிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைப் பெற்றுள்ளது. சில நேரங்களில் பேக்தரியாவின் அரசியல் வரம்புகள் பேக்தரீய சமவெளியையும் கடந்து அதற்கப்பாலும் நீண்டிருந்தது.
வரலாறு
[தொகு]பாக்திரியா- மார்க்கியானா தொல்லியல் வளாகம் (BMAC)
[தொகு]ஆக்சஸ் நாகரீகம் என அறியப்படும் பேக்தரீயா- மார்ஜியானா- தொல்லியல் வளாகம் என்பது நடு ஆசியாவில் செம்புக்கால நாகரீகம் பற்றிய நவீன தொல்லியல் ஆய்வு நிலையாகும். கிமு. 2200 -7000 களில் இன்றைய துருக்மேனிஸ்தான், வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெக்கிஸ்தான், மேற்கு தஜிகிஸ்தான், ஆகியவற்றுடன் மேல் ஆமூ தாரியா ஆற்றை மையப்படுத்திய நிலப்பரப்பே அன்றைய பேக்தரியாவாக இருந்தது. இவ்வாய்வுக் களங்கள் சோவியத் ஒன்றிய தொல்லியலாளர் 'விக்டர் சாரியாநிதி' என்பவரால் 1976 இல் கண்டறியப்பட்டன. பேக்தரியா என்பது பழைய பாரசீக மொழியில் வழங்கப்படும் கிரேக்கச் சொல்லான 'பாக்ஸ்ட்ரிஸ்' (மூலச் சொல்*Bāxçiš)என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.[3] இதன் தலைநகரம் பாக்தர் இன்றைய வட ஆப்கானிஸ்தான் பகுதியிலுள்ள பாக் நகரம் ஆகும். மார்ஜியானா என்பதும் பெர்சிய மாகாணத்தைக் குறிக்கும் மார்கு என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகும், இப்பகுதி இன்றைய துருக்மேனிஸ்தானின் தலைநகரான 'மெர்வி' ஆகும்.
தியோடரஸ் சிகுலஸ் என்ற தொடக்க கால வரலாற்றாய்வாளருக்குப் பின்னர் கி. மு. 400 களில் கிரேக்க வரலாற்றாய்வாளரான இக்டெசியஸ் என்பவர் பண்டைய அசீரிய மன்னன் நினசு என்பவன் ஆக்சியார்டெசு என்ற பாக்தரிய மன்னனால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார், இது கி. மு. 2140 அல்லது ட்ரோசான் போர் நடைபெறுவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். கியூனிபார்ம் எழுத்து முறையில் உள்ள அசிரிய வரலாற்றை, அதன் பதிவுகளை அறிய முனைந்தாலன்றி அதைப் பற்றிய முழு விவரமும் தெரிய வாய்ப்பில்லை. எனினும் பாக்தரியா வரலாற்றில் கிரேக்கத்தின் பங்கு கனிசமாக இருந்தே வந்துள்ளது என வரலாற்றாய்வளர்கள் கருதுகின்றனர்.
ஒரு சில எழுத்தாளர்களின் கருத்துப் படி கி. மு. 2500- 2000 ங்களில் பாக்தரியாவானது தற்போது ஈரான் மற்றும் வட மேற்கு இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த இந்தோ-ஈரானிய பழங்குடிகளின் நிலமாக இருந்தது. பின்னர் மத்திய ஆசியாவில் பெர்சியாவின் வடக்கு மாகாணமாக ஆனது, [4]
மலைவளமும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட துரானியாப் பாலைவனத்தைச் சூழ்ந்திருந்த இப்பகுதியில் தான் சொராட்டிரிய நெறியை தோற்றிவித்த ஜொராஸ்டிரர் முதன் முதலில் தனது ஆதரவாளர்களைப் பெற்றார், ஜொராஸ்டிரத்தின் பழைமையான நூலான அவெஸ்தா, பழைமையான ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கிழக்கு ஈரானிய மொழியில் எழுதப்பட்டதாகும்.
மகா சைரஸ்t
[தொகு]எர்னஸ்ட் எர்ஸ்பெல்டு என்பவர், கி. மு. ஆறாம் நூற்றாண்டில் பெர்சிய அரசர் மகா சைரஸ் பாக்திரியாவை தனது அரசுடன் இணைக்கும் முன்னர்[5] அப்பகுதி மார்ஜியானாவுடன் இணைந்து மெதியன் அரசின் ஒரு பகுதியாக பன்னிரண்டாவது மாகாணமாக பாக்தரியா இருந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார்.[2]
மகா அலெக்சாண்டரால் தோற்கடிக்கப்பட்ட பாக்தரிய மன்னன் மூன்றாம் டாரியசுக்குப் பின்னர் பாக்தரியாவின் படைத் தளபதி பெசஸ் படைகளை ஒன்று திரட்டி ஓர் அணியை உருவாக்கினார். ஆனால் அவர் பிற போர்ப்படையினர்களால் பிடிக்கப்பட்டு அலெக்சாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டார். இறுதியில் அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்..[6]
மகா அலெக்சாண்டர்
[தொகு]மகா அலெக்சாண்டர் 'சோக்தியானா' பகுதியை வெற்றிகொண்ட பிறகு ஆமூ தாரியா (ஓக்சஸ்) பகுதியைத் தாண்டி கடினமான எதிர்ப்புகளுக்கிடையில் தெற்கில் அவரது செல்வாக்கை நிலைநிறுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டாண்டுகள் கடுமையான சண்டைக்குப் பின்னரே அலெக்சாண்டரால் பாக்தரியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொணர முடிந்தது. தியோடோரஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி அலெக்சாண்டரின் இறப்புக்குப் பின்னர் பாக்தரியா பிலிப்சின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. ஆனால் வரலாற்றாய்வாளர் ஜஸ்டின் என்பவர் அமின்டசுகள் பாக்தரியாவைக் கட்டுப்படுத்த்தினார்கள் எனக் கூறுகிறார், திரிப்பரடைசசு உடன்படிக்கையின்படி தளபதி ஸ்டாசனோர் ஆளுகையின் கீழ் பாக்தரியா இருந்ததை தியோடோரஸ் சிகுலசு மற்றும் ஆரியான் என்ற இரு ஆசிரியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அலெக்சாண்டருடைய பேரரசு அவரது படைத்தலைவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட போது, படைத்தலைவர் செலுக்கஸ் நிக்கோடர் நிறுவிய செலூக்கியப் பேரரசின் ஒரு பகுதியாக பாக்தரியா ஆனது.
கிரேக்கர்களான மாசிடோனியர்கள், குறிப்பாக செலுக்கஸ் நிக்கோடர் மற்றும் அவரது மகன் முதலாம் ஆண்டியோகஸ் ஆகியோர் செலூக்கியப் பேரரசை நிறுவி நிறைய கிரேக்க நகரஙக்ளைத் தோற்றுவித்தனர். அங்கு சில காலங்கள் கிரேக்க மொழி ஆதிக்கம் பெற்றிருந்தது முதலாம் டேரியஸ் காலத்தில் கிரேக்கத்தின் பழமையான நகரமான பார்கா மற்றும் சிரனயிகா நகரங்களில் அரசை எதிர்த்தவர்களும் சரணடைய மறுத்தோரும் பாக்தரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். இதில் முரண்பாடு என்னவெனில் பாக்தரியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வந்தவர்களால் கிரேக்கத்தின் அருகிலுள்ள நாடுகளை விட பாக்தரியாவில் கிரேக்க மொழியின் செல்வாக்கு மிகுந்திருந்தது எனலாம்.[7]
கூடுதலாக அகாமனிசியப் பேரரசர் முதலாம் செர்கஸ் என்பவர் மேற்கு மத்திய ஆசியாவில் திதிமாவிற்கு அருகில் குடியிருந்த பிராஞ்சிடேயிக்களையும் பாக்தரியாவில் குடியேற்றம் செய்தார். இவர்கள் கிரேக்க கோவில்களில் பூசாரிகளின் வழித்தோன்றல்களாவர். கோவில்களிலிருந்தபடியே அவருக்குத் துரோகம் செய்த காரணத்தால் பாக்தரியாவில் குடியமர்த்தப்பட்டனர்.[8]
கிரேக்கத்தில் நடைபெற்ற அயோனியன் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் மகளிரை ஒரு பெர்சியப் படைத்தளபதி அச்சுறுத்தி, அடிமைப்படுத்தி பாக்தரியாவிற்கு அனுப்பியதாக ஹெரோடடஸ் என்ற வரலாற்றாசிரியர் பதிவு செய்கிறார்.[9]எனினும் இந்த சில சான்றுகள் மட்டுமே கிரேக்கத்திலிருந்து மத்திய ஆசியாவிற்கு ஏராளமானோர் நாடுகடத்தப்பதற்கான அறிகுறிகளாகக் கூற முடியாது.
"மிகப் பெரிய செல்வஙகளைப் பெற்ற ஆயிரம் நகரங்கள் கொண்ட பாக்திரியப் பேரரசு (opulentissimum illud mille urbium Bactrianum imperium)"[10]
செலுக்கிய பேரரசர்களால் துயரங்களை சந்தித்து வந்த பாக்தரியாவின் தளபதி தியோடோட்சுக்கு, எகிப்தின் இரண்டாம் தாலமியின் தாக்குதலுக்குப் பின்னர் கி. மு. 245இல் சோக்தியானாவை வென்று சுதந்திர அறிவிப்பை வெளியிட ஒரு வாய்ப்பு கிட்டியது. இவரே கிரேக்க-பாக்திரிய அரசை நிறுவியவர் ஆவார். தியோடோடசும் அவருக்குப் பின் வந்தோர்களும் செலூக்கியர்களின் குறிப்பாக கி. மு 190-ல் ரோமானியர்களால் வெல்லப்பட்ட அண்டியோகசின் தாக்குதல்களை திறம்பட முறியடிக்கும் வல்லமை பெற்றிருந்தனர். கிரேக்க பாக்திரியா பேரரசர்கள் தங்களது பேரரசையும் தாண்டி இந்தியா - சீனா வரை தனது பேரரசை விரிவாக்கவும் வலிமை பெற்றிருந்தனர்.[11] கிரேக்க- பாக்திரியர்கள் கிரேக்க மொழியை தங்களுடைய ஆட்சி மொழியாகக் கொண்டனர் இம்மொழிகள் சில அப்படியே அல்லது சில மாறுதல்களுக்குட்பட்டு உள்நாட்டு பாக்தரிய மொழிக்கலப்பு பெற்றன. அதே சமயம் நவீன பாஷ்தோ மொழியிலிருந்து மூலசொற்கள் சிலவற்றையும் இவை பெற்றன..[12]
பாக்தரிய அரசரான முதலாம் யூதிடெமஸ் மற்றும் அவரது மகனான பாக்தரியாவின் முதலாம் திமெத்ரியசு ஆகியோர் இந்து குஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை வெற்றிகொண்டனர், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே கிழக்கே உருவான கிரேக்கப் பேரரசுகளில் இவரர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகியிருந்தனர். ஆனால் இந்த இந்தோ-கிரேக்கப் பேரரசர்களிடையே கருத்து வேறுபடுகளின் காரணமாக ஒருவருடைய ஆளுகையை மற்றொருவர் வலுக்கட்டாயமாகப் பெற்றனர். திமெத்ரியசு இந்தியாவில் நீண்ட தூரம் முன்னேறிச் செல்லும் வேளையில் அவருடைய படைத்தளபதிகளுல் ஒருவரான யூக்ரடிடசு பாக்தரியாவின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டான். விரைவில் பாக்தரியாவின் மற்ற பிரதேசங்களில் புதிதாக எழுச்சி பெற்றவர்களும் தங்களைத் தாங்களே அரசர்களாக அறிவித்துக் கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு எதிராக சண்டையிட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோரை ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட அவர்களது நாணயங்களை வைத்தே அறிய முடிகிறது. இப்போர்களின் மூலம் கிரேக்கர்களுடைய மேலாதிக்கம் குறைவாக மதிப்பிடப்பட்டது. இல்லையெனில் இதன் நிலை வேறாக இருந்திருக்கும். திமெத்ரியசு மற்றும் யூக்ரடிடசு ஆகியோருக்குப் பின் வந்தவர்கள் கிரேக்க அட்டிக் வகை நாணயங்களைக் கைவிட்டு சொந்தமாக நாணயங்களை அச்சிட்டார்கள்.
இந்தியாவில் மெனாண்டர் என அறியப்படும் இந்தோ-கிரேக்க மன்னன் மிகப்பெறிய வெற்றியாளராக அறியப்படுகிறார். இவர் புத்த மதத்திற்கு மாறினார். இவரது காலத்தில் நாகசேனர் என்ற பௌத்த அறிஞர் பாளி மொழியில் மிலிந்த பன்ஹா எனும் மிலிந்தரின் கேள்விகள் எனும் நூலை எழுதினார். இவருக்குப் பின்வந்த இந்தோ-கிரேக்க அரசர்கள் இந்தியாவில் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தினர். கடைசியாக அறியப்படும் இந்தோ-கிரேக்க மன்னன் கி. மு 55 இல பஞ்சாப் பகுதியை ஆண்ட இரண்டாம் சிட்ரெடோ ஆவார்.[13] ஆயினும் கி. பி. 10இல் இவரது ஆட்சி முடிவுற்றதாக பிற சான்றுகள் கூறுகின்றன.
சாகர்கள், யூசிக்கள், சாசானியர்கள்
[தொகு]ஹான் அரசுடனான தொடர்புகள்
[தொகு]தோக்கரிஸ்தான்
[தொகு]இசுலாமிய வருகை
[தொகு]பாக்தரிய மக்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ Bactria 1911 Encycolopaedia Britannica.
- ↑ 2.0 2.1 P. Leriche, "Bactria, Pre-Islamic period." Encyclopaedia Iranica, Vol. 3, 1998.
- ↑ David Testen, "Old Persian and Avestan Phonology", Phonologies of Asia and Africa, vol. II (Winona Lake, Indiana: Eisenbrauns, 1997), 583.
- ↑ Cotterell (1998), p. 59
- ↑ Herzfeld, Ernst (1968). The Persian Empire: Studies in geography and ethnography of the ancient Near East. F. Steiner. p. 344.
- ↑ Holt (2005), pp. 41–43.
- ↑ Herodotus, 4.200-204
- ↑ Strabo, 11.11.4
- ↑ Herodotus 6.9
- ↑ Justin (historian)|Justinus. XLI 1.8.
- ↑ இசுட்ராபோ Geography, Book 11, chapter 11, section 1
- ↑ UCLA Language Materials Project: Language Profile: Pashto பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bernard (1994), p. 126.
வெளியிணைப்புகள்
[தொகு]- Bactrian Coins
- Bactrian Gold
- Livius.org: Bactria
- Batriane du nord பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம்—about the Termez region, an archeological site
- Art of the Bronze Age: Southeastern Iran, Western Central Asia, and the Indus Valley, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Bactria