நுட்பியல் ஒற்றைப்புள்ளி
தொழில் நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீள முடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (technological singularity) எனப்படுகிறது. இம்மாற்றம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக எதிர்கூறமுடியாது, ஆனால் குமுகம் (சமூகம்), அரசியல், சூழல், பொருளியல் என அனைத்து தளங்களிலும் மாற்றம் இருக்கும். மனித இருப்பின் பொருள் அல்லது தன்மையைக் கூட இந்த நிகழ்வு மாற்றி அமைக்கலாம் என்று ஒற்றைப்புள்ளியாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கருதுகோளுக்கு வலுவான அறிவியல் அடிப்படை இன்னும் இல்லை.
இயற்பியிலில் ஒற்றைப்புள்ளி
[தொகு]ஒற்றைப்புள்ளி என்ற எண்ணக்கரு இயற்பியிலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. இயற்பியலில் ஒற்றைப்புள்ளியியே கருங்குழிக்கும் விளிம்பு வானத்துக்குமான இறுதி எல்லை அல்லது புள்ளி ஆகும்.
ஒற்றைப்புள்ளி நோக்கி விமர்சனங்கள்
[தொகு]நுட்பியல் ஒற்றைப்புள்ளி உலகில் காணப்படும் பன்முகத் தன்மையை, ஏற்றத்தாழ்வை கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அதி வலு உள்ளவர்களாக படிவளர்ச்சி அடைய மற்றவர்கள் அனுமதிப்பர்களா? அப்படி படிவளர்ச்சி அடைந்தால் மற்றவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இன்று பொருளாதார நோக்கில் பின் தங்கிய மனித குழுக்கம் போன்று, மனித இனம் படிவளர்ச்சி பெற்ற இனம், பின் தங்கிய இனம் என்று உயிரியல் நோக்கிலும் இரண்டாக பிளவுபடுமா? இவ்வாறு பலவேறு கேள்விகள் எழுகின்றன.
நுட்பியல் ஒற்றைப்புள்ளியும் மார்க்சிய கோட்பாடும்
[தொகு]நுட்பியல் ஒற்றைப்புள்ளி கோட்பாட்டையும் மார்க்சிய வர்க்க புரட்சி கோட்பாட்டையும் ஒப்பிட்டு பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டும் கடந்த கால நிகழ்வுகளை அவதானித்து வரவிருக்கும் காலகட்டம் ஒன்றை விவரிக்கின்றன. மார்க்சியம் வரலாற்று அரசியல் மாற்றத்தையும், நுட்பியல் ஒற்றைப்புள்ளி வரலாற்றுத் தொழில்நுட்ப மாற்றத்தையும் முதன்மைப்படுத்தி வருவதுரைக்கின்றன. இரண்டிலும் அடிப்படையில் முன்னேற்றம் என்ற கரு இழையோடுகிறது. நுட்பியல் ஒற்றைப்புள்ளி ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தந்தாலும், அந்தக் காலம் பிற்போடப்படக்கூடியதே. எனவே இரண்டு கோட்பாடுகளும் பிழை என்று இறுதியாக நிரூபிக்க முடியாதவை, ஆகையால் இரண்டையும் அறிவியல் கோட்பாடுகளாகக் கருத முடியாது.