நயாதிகளி
பாலக்காடு உத்ராலிக்காவு கோவிலில் நாயதிகளி | |
பூர்வீக பெயர் | നായാടിക്കളി (மலையாளம்) |
---|---|
வகை | இந்திய நாட்டுப்புற நடனம் |
கருவி(கள்) | மூங்கில் குச்சிகள் |
தோற்றம் | கேரளம், இந்தியா |
நயாதிகளி (Nayadikali)(வேட்டை நடனம் என்று பொருள்) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள வள்ளுவநாடு பகுதியில் (இன்றைய பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள்) பாணன் சமூகத்தினரிடையே நிலவும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவமாகும். இது பொதுவாகப் பூரம் திருவிழாவிற்கு முன்னதாக, அந்தப் பகுதி மக்களுக்காகவும், பிராந்தியத்தின் நன்மைக்காகவும் செழிப்புக்காகவும், தேவி கோயில்களில் நிகழ்த்தப்படுகிறது.
செயல்பாடு
[தொகு]நயாதிகளி என்பது இப்பகுதியின் நன்மைக்காகவும் செழிப்புக்காகவும் பண்டைய காலங்களிலிருந்து பின்பற்றப்படும் ஒரு நாட்டுப்புறக் கலை வடிவமாகும். தேவி கோயில்களில் பூரம் திருவிழாவிற்கு முன்னதாக, நயாதிகளியாடும் குழுக்கள் இப்பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றித் திரிகின்றனர்.[1] காட்டில் வேட்டையாடச் செல்லும் மக்களைப் போல உடையணிந்து, பாணன் சமூகத்தினர் வீடு வீடாகச் சென்று பாடி விளையாடுகிறார்கள்.[1][2] ஒரு குழுவில் பொதுவாக ஐந்து பேர் வரை இருப்பார்கள்.[1] இவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள் இரண்டு மூங்கில் குச்சிகள். இவற்றில் ஒன்று நீளமாகவும் மற்றொன்று குட்டையாகவும் இருக்கும்.[2] இடது அக்குளில் நீண்ட குச்சியைப் பிடித்து, ஒரு குறுகிய குச்சியால் தட்டுவதன் மூலம் நாட்டுப்புறப் பாடல் பாடும்போது இசைக்கப்படுகிறது.[2]
இவர்கள் இடுப்பில் சுற்றிய முண்டுகளின் மேல் தனித்துவமான ஆடைகளை அணிந்துகொண்டு வருகிறார்கள். தலையில் மற்றொரு முண்டு கட்டப்பட்டு உடலில் வெவ்வேறு வண்ணங்களைப் பூசியுள்ளனர். தோளில் ஒரு துணிப் பை வைத்திருப்பார்கள். இவர்கள் கையில் இட்டிங்காலிகுட்டி என்ற சிறிய மரச் சிலையையும் ஏந்திச் செல்கிறார்கள்.[2] இந்தச் சிலையினை வீடுகளின் முற்றத்தில் வைத்து, அதைச் சுற்றி குச்சியை முன்னும் பின்னுமாக அடித்து நடனமாடுவார்கள்.[1] இவர்கள் வழக்கமாக வேட்டை தொடர்பான பாடல்களைப் பாடுவார்கள். சொந்தமாகவும் பாடல்களை எழுதி அவற்றை அந்தந்த இடத்திலேயே பாடும் பழக்கமும் உள்ளது.[1]
நயாதிகளிக்குப் பிறகு, வீடுகளிலிருந்து கலைஞர்களுக்கு அரிசி, நெல், காணிக்கை வழங்கப்படும்.[1] பூரம் நாளில், அனைத்துக் குழுக்களும் கோவிலை அடைந்து நிறைவு நிகழ்ச்சியில் இசைக்கின்றனர்.[1] இவர்கள் மரப் பொம்மையுடன் ஒரு வகையான பொம்மை நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "നായാടിക്കളി സംഘങ്ങൾ വീടുകളിൽ എത്തിത്തുടങ്ങി" (in ml). ManoramaOnline (Malayala Manorama) இம் மூலத்தில் இருந்து 2023-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230328045001/https://www.manoramaonline.com/district-news/thrissur/2022/02/01/thrissur-kunnamkulam-nayadi-kali.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "വള്ളുവനാടിന്റെ കലാപാരമ്പര്യം" (in en). Janmabhumi இம் மூலத்தில் இருந்து 2023-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230328052416/https://www.janmabhumi.in/news/feature/the-artistic-tradition-of-valluvanad.