திருவாசகம்
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.[1] இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
அமைப்பு
[தொகு]திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
- சிவபுராணம்,
- கீர்த்தித் திருவகவல்,
- திருவண்டப்பகுதி,
- போற்றித் திருவகவல்
என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது.
திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.
சிறப்பு
[தொகு]- மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.
- மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.
- தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.
- மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.
- "பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - திருமுருக கிருபானந்த வாரியார்.[2]
இசை வடிவில்
[தொகு]இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. திருவாசகத்திற்குத், தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://web.archive.org/save/http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202135.htm
- ↑ https://web.archive.org/save/http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11390
Thiruvasagam (Tamil) by Manikkavasaga Swamigal (Author)