உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்னும் நூலை ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார். இந்நூல் பாரதி நிலையத்தால் 2001இல் வெளியிடப்பட்டது.[1]

நூலின் உள்ளடக்கம்

[தொகு]

திருக்குறளில் அடங்கியுள்ள பால்வரிசை மற்றும் அதிகாரவரிசையை அப்படியே பின்பற்றி, ஒவ்வொரு அதிகாரத்தையும் சுருக்கமாக, எளிதாகப் புரியும் விதத்தில் இந்நூல் வழங்குகிறது.

சில எடுத்துக்காட்டுகள்

[தொகு]

32. தீமை செய்யாதிருத்தல் (இன்னா செய்யாமை) - மனித சமூகத்தில் மனிதன் தன்னலத்துக்காக ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்து வாழ்வதால்தான் நாம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிறோம். அதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

எவ்வளவு சீரும் சிறப்பும் நமக்குக் கிடைக்கும் என்றாலும் தீமை செய்ய மறுப்பதுதான் நல்லவர்களின் கொள்கையாகும். திட்டமிட்டு ஒருவன் நமக்குத் தீமை செய்தாலும் அவனுக்குத் தீங்கு செய்யாதிருப்பது குற்றமற்றவர்களின் கொள்கை. யார் நமக்குத் தீமை செய்துவிட்டாரோ அவருக்குத் தீங்கு செய்தால் நாம் பெரும் தப்பு செய்தவர்களாகிறோம்.

ஒருவன் நமக்குச் செய்த தீமைக்குத் தண்டனை அவன் வெட்கப்படும்படி நாம் நன்மை செய்யவேண்டும். அடுத்தவனுடைய துன்பத்தைத் தன் துன்பம்போலக் கருதாவிட்டால் அவன் பெற்ற கல்வியினால், அறிவினால் எந்தப் பயனும் இல்ல. தனக்குத் துன்பம் தரக்கூடியது என்று உணர்ந்த செயல்களை நாம் பிறருக்குச் செய்யாமல் இருக்கவேண்டும்.

யாருமே தனக்குத் துன்பம் வருவதை விரும்ப மாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் பிறரைத் துன்புறுத்தமாட்டார்கள். பிறருக்கு முற்பகலில் செய்யும் தீமையானது நமக்குத் தானாக வந்து சேருகிறது. எப்போதும் யாருக்கும் எத்தனை மிகச் சிறிய மனக்கஷ்டமும் தராமல் இருப்பவனுடைய வாழ்க்கையே சிறந்ததென சொல்கிறார் திருவள்ளுவர்.

71. குறிப்பறிதல் - எதிரிலிருப்பவர்கள் எதுவுமே பேசாமல் அவர்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் நினைப்பதைத் தெரிந்து கொள்கிற அறிவுள்ளவர்கள் இந்த உலகிற்கு அணிகலன் போன்றவர்கள். இப்படி மனத்தைப் படிப்பவர்களை தெய்வத்தோடு ஒப்பிடலாம். முகக்குறிப்பை அறிகிறவர்களை, உங்களின் உறுப்பைக் கொடுத்துகூடத் துணையாகக் கொள்ளலாம்.

இவர்கள் பார்ப்பதற்குச் சாதாரணமானவர்களாய் இருந்தாலும் அறிவினால் வேறுபட்டவர்கள். இந்த அறிவு உள்ளவர்களின் முகத்தை நாம் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். இவர்களால் கண்களைப் பார்த்து, விரோதம், சிநேகம் இரண்டையும் அறிந்து கொள்ள முடியும்.

உள்ளத்தில் இருப்பதைப் பளிங்குபோல முகம் காட்டிக் கொடுத்துவிடும். விருப்பு, வெறுப்பையும் முதலில் தெரிவிப்பது முகம்தான். முகம் அறிவு மிக்கது. ஒருவருடைய கண்ணே அவர்களின் அறிவை, ஞானத்தை வெளிப்படுத்திவிடும். எதையும் நம்முடைய கண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்தக் கண்கள் இருந்தும் ஏதும் பயனில்லை என்று தெளிந்த பார்வையுடன் சொல்கிறார் வள்ளுவர்.

குறிப்பு

[தொகு]
  1. ஆனந்த், திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், பாரதி பதிப்பகம், சென்னை, 2001, பக்கங்கள்: 120.