உள்ளடக்கத்துக்குச் செல்

குறள் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகப்பெரிய நூல் வடிவில் திருக்குறள்

குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது.

எடுத்துக்காட்டு

[தொகு]

எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு

எழுத்துகள் எல்லாவற்றிற்கும் முதலெழுத்தாக அகரம் இருப்பது போல உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் முதலாளாகக் கடவுள் இருக்கிறார் எனப் பொருள்பட இதனைத்  திருவள்ளுவர் ஆக்கியுள்ளார். திருக்குறள் நூலில் முதலாவது குறள் இதுவே.

நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாக முதலாமடியும் மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாக இரண்டாமடியும் அமைய, மொத்தமாக ஏழு சீர்களைக் கொண்ட குறள் வெண்பாவாக இத்திருக்குறளைக் காணலாம்.

'அகர' என்ற முதற் சீரில் "அ" உம் 'ஆதி' என்ற நான்காம் சீரில் "ஆ" உம் மோனையாக வந்துள்ளது. அதேவேளை முதலடி முதற் சீரில் "அக" உம் இரண்டாமடி முதற் சீரில் "பக" உம் எதுகையாக வந்துள்ளது.

இவ்வாறு எதுகை அமைந்தால் "ஒரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் இவ்வாறு எதுகை அமையாத வேளை "இரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் சொல்லப்படுகிறது.

ஈரசைச் சீர்கள் ஆறும் மூவசைச் சீர் ஒன்றும் அதேவேளை ஈற்றடி ஈற்றுச் சீர் 'பிறப்பு' எனும் வாய்பாட்டிலும் இக்குறள் அமைந்திருக்கிறது. அதாவது, ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் காய்ச் சீரும் ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசைச் சீரும் (அல்லது உகரம் ஏறிய ஓரசைச் சீரும்) வெண்பாவில் வருவது இயல்பே!

மாமுன் நிரை (இயற்சீர் வெண்டளை), காய்முன் நேர் (வெண்சீர் வெண்டளை) என்றவாறு இக்குறளில் தளைகள் வந்துள்ளது. இங்கே விளமுன் நேர் வராவிடினும் அதுவும் இயற்சீர் வெண்டளை ஆகும்.

குறள் வகை

[தொகு]

இனக்குறள், விகற்பக்குறள் என்று குறள் இரண்டு வகைப்படும் என்று யாப்பருங்கல விருத்தி குறிப்பிட்டு அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. [1]

இனக்குறள்

[தொகு]

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு [மோனை]

தன்னுயிர்க் கின்னாமை தான்றிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல் [எதுகை]

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் [முரண்]

கடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு
படாஅ முலைமேல் துகில் [இயைபு]

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் [அளபெடை]

விகற்பக் குறள்

[தொகு]

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் [விகற்பம்]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ எனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு [விகற்பம்]

அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைகுமே
நன்னுதல் நோக்கோர் வளம் [செந்தொடை]

அலகிடுதல்

[தொகு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பது குறள். இதனை இவ்வாறு முறையாக அலகிடும்போது குறள் வெண்பாவின் இலக்கண அமைதி விளங்கும்.

சீர்நிலை

[தொகு]
குறள் வெண்பா (சீர்நிலை)
குறளில் உள்ள சீர் அசை வாய்பாடு
அகர நிரை நேர் புளிமா
முதல நிரை நேர் புளிமா
எழுத்தெல்லாம் நிரை நேர் நேர் புளிமாங்காய்
ஆதி நேர் நேர் தேமா
பகவன் நிரை நேர் புளிமா
முதற்றே நிரை நேர் புளிமா
உலகு நிரைபு பிறப்பு

தளைநிலை

[தொகு]
குறள் வெண்பா (தளை அமைதி)
சீரும் சீரும் தளைதல் தளையின் பெயர் தளைதல்
அகர முதல இயற்சீர் வெண்டளை மா முன் நிரை
முதல எழுத்தெல்லாம் இயற்சீர் வெண்டளை மா முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி வெண்சீர் வெண்டளை காய் முன் நேர்
ஆதி பகவன் இயற்சீர் வெண்டளை மா முன் நிரை
பகவன் முதற்றே இயற்சீர் வெண்டளை மா முன் நிரை
முதற்றே உலகு இயற்சீர் வெண்டளை மா முன் நிரை

யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். இக்குறளுக்கு  "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." என மு. வரதராசன் விளக்கம் தருகின்றார்.

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன்
  • யாப்பதிகாரம் - புலவர் குழந்தை
  • யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன்

மேற்கோள்

[தொகு]
  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 185

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்_வெண்பா&oldid=4045573" இலிருந்து மீள்விக்கப்பட்டது