உள்ளடக்கத்துக்குச் செல்

திரவிடத்தாய் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணரால் 1944 இல் எழுதப்பட்ட நூல் திரவிடத்தாய். இது முன்னுரை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, முடிவு எனும் ஆறு பாகங்களையும், 112 பக்கங்களைக் கொண்டு விளங்குகின்றது. "தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்ததாதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும்." என்று முன்னுரையிலேயே நூல் நோக்கத்துடன் குமரிநாட்டுக் கொள்கையையும், ஞால முதன்மொழிக் கொள்கையையும் பதிவு செய்கிறார் பாவாணர். "பவளம்" என்பது "ப்ரவளம்" என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம்(தமிழ்) என்னுஞ் சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்றாகி, பின் தமிழில் வந்துவழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே "திராவிடம்" எனுஞ் சொல் தோன்றிற்று என நாட்டுகின்றார்.[1]

கொடுந்தமிழ் மொழிகளான கூர்ச்சரமும் (குஜராத்தி), மகாராட்டிரமும் முதலில் பிரிந்தன. பின்னர் முறையே தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் பிரிந்து போயின. [2] இங்கனம் தமிழுடன் தொடர்புள்ள மொழிகளையே திரவிடத்தாய் எனும் இந்நூலில் ஆராய்கிறார். இப்படிப் பிரிந்த போதும் மலையாளத்தில் வழங்கும் 'தம்பிராட்டி', 'கைநீட்டக்காசு' ஆகிய சொற்களும்; கன்னடத்தில் வழங்கும் 'கொண்டாடு', 'திக்கில்லாத' முதலிய சொற்களும்; 'ஓடச்சரக்கு', 'மூக்குப் பொடி' எனும் தெலுங்குச் சொற்களும் தமிழே என்பதில் சிறிதும் ஐயமில்லை.[3]

தமிழிலிருந்து பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள்

[தொகு]

தமிழ் மக்கட் பெருக்கம், எழுத்தொலித் திரிபு, சொல் திரிபு, பொருள் திரிபு, இயற்கைத் தெரிப்பு, வழக்கற்ற சொல் வழங்கல், குடியேற்றப் பாதுகாப்பு (இதுபோது தமிழில் வழங்கா விடினும் குமரிநாட்டில் வழங்கியவாகத் தெரிகின்ற சொற்களும் சொல் வடிவங்களும் பிற திரவிட மொழிகளிற் பாதுகாக்கப் பட்டிருத்தல்) புத்தாக்கச் சொல், தாயொடு (தமிழொடு) தொடர்பின்மை, வடசொற் கலப்பு, வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல், தமிழின் பண்படுத்தம் ஆகியனவற்றைக் குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக, தமிழில் வெள்ளையான புதுப் பெருக்கைக் குறிக்கும் வெள்ளம் எனும் சொல் மலையாளத்தில் நீரைக் குறிக்கப் பயன்படுத்துவதால் பொருள் வேறுபடுதலை அவர் காட்டலைக் கூறலாம்.[4]

கால்டுவெல் தமிழைச் சிறப்பித்துக் கூறுவன எனும் ஒரு பகுதியும் முன்னுரையில் வருகின்றது.

மலையாளம்

[தொகு]

சாரல் நாட்டு (மலை நாட்டு) மன்னனாகிய சேரன் எனும் பெயர் முறையே சேரல்>> சேரலன்>> கேரலன்>> கேரளன் என மருவும். பின் ஈறு திரிந்து கேரளம் என்றாகும். மலை+ஆளி =மலையாளி என்றாகும். அவனது நாடும், மொழியும் மலையாளம் என்று வழங்கப்படுகிறது என்கிறார்.[5]

மலையாளம் திரிந்தமைக்குக் காரணங்கள்

[தொகு]

பாவாணர் மலையாளம் திரிந்தமைக்குப் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்:[6]

  1. சேரநாட்டுடனான தொடர்புக்கு மலை தடுப்பாக இருந்தமை.
  2. 12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.
  3. வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும்.
  4. மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை.
  5. மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை.
  6. மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல்.

கன்னடம்

[தொகு]

கருநாடு, அதாவது கரிசற்பாங்கான நாடே, கருநாடம் அல்லது கருநாடகம் என்றாயிற்று எனப் பொருள்கொள்ளலே தகும் என்கிறார் பாவாணர்.

கன்னடம் திரிந்தமைக்குக் காரணங்கள்

[தொகு]

பாவாணர், கன்னட மொழி பின்வரும் காரணங்களால் திரிந்தது என்கின்றார்:[7]

  1. கன்னடச் சீமையில் தமிழ் மன்னராட்சி ஒழிந்தமை.
  2. அங்கு தமிழ் நூல்கள் வழங்காமை.
  3. தமிழர் விழிப்பின்மை.
  4. தட்பவெப்ப நிலையால் தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமை.
  5. வடசொற் கலப்பும் வடமொழியிலக்கண வமைப்பும்.

தெலுங்கு

[தொகு]

தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன. தமிழ் நாட்டுக்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனும் பெயர் இடப்பட்டது.[8] பிளினி எனும் வரலற்றாசிரியர் மூன்று கலிங்கம் எனப் பொருள்படும் 'மெர்டொகலிகம்' குறித்திருப்பது முதலிய வரலாற்றுச் சான்றுகளை முன்னிறுத்தி, பண்டைத் தெலுங்க நாடு திரிகலிங்கம் என அறியப்பட்டதெனவும், அது மருவி, திரிலிங்கம்>> தெலுங்கம்>> தெலுங்கு என்றாயிற்று என்கிறார்.[9]

தெலுங்கு திரிந்தமைக்கான காரணங்கள்

[தொகு]

தெலுங்கு திரிந்தமைக்கான காரணங்களாக அவரால் கூறப்படுவன பின்வருவன:[10]

  1. தட்பவெப்ப நிலையும், நிலத்தியல்பும்.
  2. மக்கட்தொகை பெருக்கம்.
  3. பண்டை இலக்கிய இலக்கணமின்மை.
  4. தமிழரொடு உறவு கொள்ளாமை.
  5. தமிழ் நூல்களைக் கல்லாமை.
  6. ஒலிமுறைச் சோம்பல்.
  7. வடசொற் கலப்பு.

துளு

[தொகு]

துளு திரிந்தமைக்குக் காரணங்கள்

[தொகு]
  1. தட்ப வெப்பநிலை.
  2. இலக்கண நூலின்மை.
  3. தமிழரொடு தொடர்பின்மை.
  4. துளுவர் தமிழ்நூலைக் கல்லாமை.
  5. வடசொற் கலப்பு.
  6. ஒலிமுறைச் சோம்பல்.

இனி, மேற்கூறிய மொழிகளில் வழங்கும் பல திறப்பட்ட பெயர்களையும், வினைகளையும், தொடர்களையும், பழமொழிகளையும், பட்டியலிட்டுத் தருகின்றார். ஒவ்வொரு மொழியும் திரிந்த வகைகளை எடுத்துக்காட்டுக்களுடன் தரவும் செய்கிறார்.

முடிவு

[தொகு]

தமிழல்லாத திராவிட மொழிகள் சிலவற்றில், திரவிடச் சொற்கள் சிலதின் இயற்கை வடிவம் இருந்த போதிலும் இருந்த போதிலும், அவை குடியேற்ற பாதுகாப்பின் (colonial preservation) பாற்படும் என்றும், தமிழின் தாய்மைப் பண்புக்கு அது ஒரு ஊறும் செய்யாதும் என்று கூறி பாவாணர் இந்நூலை முடிக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. திரவிடத்தாய்,பக் 8
  2. திரவிடத்தாய், பக் 15
  3. திரவிடத்தாய், பக் 17
  4. திரவிடத்தாய், பக் 18
  5. திரவிடத்தாய், பக் 31,32
  6. திரவிடத்தாய், பக் 37
  7. திரவிடத்தாய், பக் 61
  8. திரவிடத்தாய், பக் 81
  9. திரவிடத்தாய், பக் 82
  10. திரவிடத்தாய், பக் 87
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவிடத்தாய்_(நூல்)&oldid=2808768" இலிருந்து மீள்விக்கப்பட்டது