தமிழ்த் தாய்
தமிழ்த் தாய், தமிழன்னை, தமிழணங்கு (Tamil Thai) என்பது தமிழை அன்னை வடிவாக உருவகப்படுத்தி பாவித்தலைக் குறிப்பதாகும். ஏதோ ஒன்றின் காரணமாக மொழியை நபராக அடையாளப்படுத்துவதாகும்.
வரலாற்றுப் பின்னணி
[தொகு]தமிழ்த் தாய் என்ற சொல் நூற்றாண்டுகள் கடந்ததாகும். தமிழத் தாய் தான் இப்போது இழி நிலையில் உள்ளதாக தன் பிள்ளைகளான தமிழர்களிடம் புலம்புவதாக சுப்பிரமணிய பாரதி பாடியுள்ளார்.[1] தமிழ்ன்னையின் ஓவியத்தை காரைக்குடி கம்பன் விழாவின்போது வரையப்பட்டு மேடையில் வைக்கப்பட்டது. அந்த ஓவியத்தை கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் விருப்பப்படி எஸ். கருப்பையா என்ற ஓவியர் வரைந்ததாகும். 1981இல் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட போது தமுக்கம் மைதானத்தின் நுழைவாயிலில் தமிழன்னைக்கு எம்.ஜி.ஆர் சிலை அமைத்தார். அதை இந்திரா காந்தி திறந்து வைத்தார். முன்னதாக சா. கணேசன் காரைக்குடியில் உள்ள கம்பன் மணிமண்டபத்துக்குள் தமிழ்த்தாய்க்கு கோயில் அமைக்க 1975 இல் மு. கருணாநிதியைக் கொண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால் 1993 இல்தான் தமிழ்த்தாய் கோயிலை அமைக்க முடிந்தது. அதை மு. கருணாநிதி திறந்துவைத்தார்.
தோற்றம்
[தொகு]கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் விருப்பப்படி எஸ். கருப்பையா என்ற ஓவியர் வரைந்த தமிழன்னை வெள்ளைத் தாமரை மலரில் அமர்ந்தவாறும், நான்கு கரங்களுடனும், ஒரு கை யாழிசைக்க, மறுகை சுவடி ஏந்திய நிலையில் இருக்க, பின்னிரு கைகள் சுடரும், ருத்திராட்சமும் ஏந்தி இருப்பதுபோன்று வரையப்பட்டிருந்தது. இதே வடிவத்துடன் தமிழ்த்தாய் கோயிலில் அமைக்கப்பட்ட தமிழன்னையின் உருவம் கல்லில் வடிக்கப்பட்டது.[2]
2019 ஆம் ஆண்டு இந்தி மொழித் திணிப்புச் சர்ச்சைகளுக்கு இடையில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் தமிழணங்கின் ஓவியத்தை வரைந்தார். சிவப்பு நிறப் பிண்ணனியில் உள்ள அந்த ஓவியத்தில் தமிழணங்கு தமிழர்களின் மரபார்ந்த நிறமான கரிய நிறத்தில் இருந்தாள். அவள் முகத்தில் சினம் கொண்டும், விரிந்த கூந்தோலோடு இருந்தாள். மேலும் நெற்றியில் குங்குமம், கழுத்தில் ஆரம், இடையில் ஒட்டியாணம், காலில் சிலம்பு போன்றவற்றோடு வெள்ளைப் புடவை அணிந்து, தாண்டவக் கோலத்தில் இருந்தால். அவள் தன் கையில் ழகரத்தை கொண்ட ஆயுதத்தை ஏந்தியபடி, எதிர்ப்புணர்வின் வடிவமாகவும் இருந்தாள்.[3] இந்த ஓவியத்தை ஏ. ஆர். ரகுமான் தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் 2022 ஏப்ரல் 8 அன்று வெளியிட்டார். அச்சமயத்தில்தான் இந்திய ஒன்றிய அமைச்சர் அமித் சா இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தி மொழியை கொண்டுவரவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடியாக ஏ. ஆர். ரகுமான் இப்படத்தை வெளியிட்டதாக கருதப்படுகிறது.[4] இதையடுத்து இணைய பயனாளர்கள் பலரும் இந்தித்திணிப்புக்கு எதிராக இந்த தமிழணங்கின் படத்தை பயன்படுத்தினர்.[5] இந்த ஓவியம் நீதி கேட்கும் கண்ணகியை ஒத்தும், கொற்றவையை ஒத்தும் நாட்டார் வடிவில் இருப்பதாக பலர் கருதினர். இந்த ஓவியதை எதிர்த்து பா.ஜ.க ஆதரவாளர்களான வலதுசாரிகள் கருத்துகளை வெளியிட, ஓவியத்திற்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை வெளியிட்டனர்.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழின்பம், நூல், பக்கம்- 257-270, பழனியப்பா பிரதர்ஸ், பதினைந்தாம் பதிப்பு - 2007
- ↑ "தமிழணங்கு என்ன நிறம்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ சண்முகநாதன், பிரபாகரன். "A.R.Rahman பகிர்ந்த தமிழணங்கு ஓவியம்; எப்படி உருவானது? ஓவியர் சந்தோஷ் நாராயணன் உடன் ஒரு நேர்காணல்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ "AR Rahman's powerful tweet on Goddess Tamil, a cryptic response to Amit Shah?". Zee News (in ஆங்கிலம்). 2022-04-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ கி.ச.திலீபன். "தமிழணங்கு சர்ச்சை.. தமிழ்த்தாய் கறுப்பா, சிவப்பா.. தமிழறிஞர், சிற்பி சொல்வதென்ன?". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ Veerakumar (2022-04-12). "காளி நிறம் கருப்புதானே.. ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட தமிழன்னை படம்.. சர்ச்சையாக வெடிக்க காரணம் என்ன?". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.