உள்ளடக்கத்துக்குச் செல்

கடும்படி சின்னம்மன் கோவில், சைதாப்பேட்டை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடும்பாடி சின்னம்மன் கோவில் தமிழ்நாட்டின், சென்னை மாநகரம், சைதாப்பேட்டை மேற்கு, ஜெயராம் செட்டி தெருவில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். கடும்பாடி சின்னம்மன் சுயம்பு வடிவில் இருக்கும் இக்கோவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. [1][2] சின்னம்மனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் கருதி வழிபாட்டு வருகின்றனர்.[3]

கோவில் அமைப்பு[தொகு]

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கோவிலின் இராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. கோபுர நுழைவாயிலை ஒட்டி வலப்புறத்தில் மதுரைவீரனுக்கும், இடப்புறத்தில் காத்தவராயனுக்கும் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவற்றைக் காணலாம். இக்கோவிலின் தல விருட்சம் வேப்பமரம் ஆகும். பக்தர்கள் இம்மரத்திற்கு மஞ்சள் சரடு கட்டி வேண்டிக்கொள்வது வழக்கம். இங்கு பலகாலமாக இருந்து வரும் பனைமரத்தையும் காணலாம். வெளிப்பிரகாரத்தில் புற்று அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதி மக்கள் புற்றுக்கு பால் மற்றும் முட்டை படைத்து வழிபடுகிறார்கள். வரசித்தி விநாயகர், கன்னிமார் மற்றும் அண்ணமார் சுவாமி ஆகிய தெய்வங்கள் தனி சன்னதி கொண்டுள்ளனர்.[1][2][3]

இக்கோவிலின் மூலவரான கடும்பாடி சின்னம்மன் கருவறையில் குடிகொண்டுள்ளார். வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள புற்று சின்னம்மனின் மற்றொரு சன்னதியாகும்.[1]

வழிபாடுகள்[தொகு]

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவர் சன்னதியில் நடைபெறும் பாலபிஷேகத்தையும், வெள்ளிக்கிழைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிசேகத்தையும் காண ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவதுண்டு.[1][2] இக்கோவிலில் வழங்கப்படும் சங்கு தீர்த்தம் அம்மை நோய்க்கும், உப்பு வாங்கி செலுத்துதல் சரும நோய்க்கும் பரிகாரமாக அமைவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.[4]

திருவிழா[தொகு]

ஆடி மாதம், ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் வெள்ளிக் கிழமை தொடங்கி பத்து நாட்கள் இக்கோவிலின் பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் 9 ஆம் நாளன்று பக்தர்கள் அம்மனுக்குப் புடவை சார்த்தியும், பொங்கலிட்டும், கூழ் வார்த்தும், பால்காவடி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும், தீச்சட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். கார்த்திகை மாதத்தில் 108 சங்காபிசேக பூசை நடைபெறுகிறது.[1][2][3]

கோவில் நேரம்[தொகு]

காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]