இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில்
பொன்வாசிநாதர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூரில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]மணப்பாறையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.[1] இந்த மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.[2]
அமைப்பு
[தொகு]இக்கோயில் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அங்குள்ள குலசேகர பாண்டியன் (1190-1218) மற்றும் சுந்தர பாண்டியன் (1218-1244) கல்வெட்டுகள் மூலமாக இக்கோயில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மூலவரின் விமானத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் உள்ளனர். தெற்கில் நால்வர், மேற்கில் கன்னிமூலை கணபதி, வீர [[விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண புஷ்கலையுடன் ஐயனார், ஸ்ரீதேவி பூதேவியுடன் விஷ்ணு, வீரபத்திரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகம், கிழக்கில் பட்டினத்தார் உள்ளனர். மேற்கு திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் உள்ளார். கோஷ்டத்தில் கொங்கணச் சித்தர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர்.[1]
மூலவர்
[தொகு]இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் கேமவிருத்தீஸ்வரா், பொன்வாசிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவி பொன்னம்பாள் தெற்கு நோக்கிய நிலையில், நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் உள்ளார். அவரின் மேலிரு கரங்களில் தாமரை மலர் உள்ளது. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் உள்ளன. கோயிலின் திருச்சுற்றில் தல மரங்களான வில்வமரமும், மகிழ மரமும் உள்ளன.[1] காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.[2]
வழிபட்டோர்
[தொகு]ராமபிரானும், இலக்குவனனும் சீதையைத் தேடி தென்திசை செல்லும்போது 'மது கவனம்' என்று அழைக்கப்படும் இவ்வூரின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்கு சிவலிங்க பூஜை செய்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.[1] குரு, சிவனை வழிபட்டதால் பொன்வாசிநாதர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.[2] புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, பட்டினத்தாரால் பாடல் பெற்ற ஒரே திருத்தலம் ஆகும். பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் இங்கு வந்து இறைவனை வணங்கி அருள்பெற்று சென்றுள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார் இங்கு வந்து தொண்டுகள் பல செய்து இறைவனை வழிப்பட்டுள்ளார்.
விழாக்கள்
[தொகு]இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், 8ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம், 9ஆம் நாள் தேரோட்டம், 10ஆம் நாளில் தீர்த்தவாரியுடன் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வருவர். [1] [3]நவராத்திரி விழா [2] [4] பங்குனி உத்திரத் திருவிழா [5]போன்ற விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ஜெயவண்ணன், பொன்னை வாரி வழங்கும் பொன்வாசி நாதர் ஆலயம், மாலை மலர், 2 ஏப்ரல் 2020". Archived from the original on 2020-04-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
- ↑ 2.0 2.1 2.2 2.3 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
- ↑ இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் தேரோட்டம், தினமணி, 12 மே 2014
- ↑ "இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்பு போடும் நிகழ்ச்சி, தினகரன், 10 அக்டோபர் 2019". Archived from the original on 2019-10-15. பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
- ↑ இலுப்பூர் பகுதியில் பங்குனி உத்திரத் திருவிழா, தினமணி, 27 மார்ச் 2013