உள்ளடக்கத்துக்குச் செல்

இரசக்கலவை (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்க்யுரைட்டு, வெள்ளி மற்றும் பாதரசம் கலந்த ஒரு இயற்கையான இரசக்கலவை

இரசக்கலவை (An amalgam) என்பது உலோகங்களுடன் பாதரசம் கலந்த கலப்புலோகம் ஆகும். கலப்புலோகமானது அதில் கலந்துள்ள பாதரசத்தின் விகித அளவைப் பொறுத்து, திரவ நிலையிலோ, பசை போன்ற நிலையிலோ காணப்படும். இந்த கலப்புலோகங்கள் மாழைப் பிணைப்பின் காரணமாக உருவாகின்றன.[1] நிலை மின்னியல் கவர்ச்சி விசையுடன் நகரும் எதிர்மின்னிகள் அனைத்து நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளை ஒரு படிக அமைப்பினுள் இணைத்து வைக்கின்றன.[2] ஏறத்தாழ எல்லா உலோகங்களுமே இரசக்கலவைகளை  உருவாக்குகின்றன. குறிப்பிடத்தக்க  விதிவிலக்குகளாக இரும்பு, பிளாட்டினம், தங்குதன் மற்றும் டாண்ட்டலம் ஆகியவை உள்ளன. வெள்ளி  இரசக்கலவையானது பல் மருத்துவத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

தங்க இரசக்கலவையானது தங்கம் அதன் கனிமூலத்திலிருந்து  பிரித்தெடுக்கப்படும் செயல்முறையில் பயன்படுகிறது.

முக்கிய இரசக்கலவைகள்

[தொகு]

துத்தநாக இரசக்கலவை

[தொகு]

துத்தநாக இரசக்கலவையானது, கரிமத் தொகுப்பு முறைகளில் பயன்படுகிறது.(உதாரணமாக கிளம்மன்சன் குறைத்தல் விளைவு).[3] பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் ஜோன்ஸ் ஒடுக்க உலையில் இது ஒடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக, உலர் மின்கலங்களில்  பயன்படுத்தப்பட்ட துத்தநாகத்  தகடுகள் சேமித்து வைக்கப்படும் போது சிதைவடைவதைத் தடுப்பதற்காக, சிறிதளவு பாதரசத்துடன் இரசக்கலவையாக்கப்பட்டன. 

பொட்டாசிய இரசக்கலவை

[தொகு]

கார உலோகங்களைப் பொறுத்தவரை, இரசக்கலவையாக்க வினையானது வெப்ப உமிழ் வினையாகவும், KHg மற்றும் KHgபோன்ற வேறுபட்ட வடிவங்களை உடைய சேர்மங்களைத் தருவதாகவும் அமைகிறது.[4] KHg ஆனது தங்க நிறத்தையுடைய, 178 °செ உருகுநிலையுடைய சேர்மமாகும். KHg2 வெள்ளி நிறத்திலான 278 °செ உருகுநிலையுடைய சேர்மமாகும். இந்த இரசக்கலவைகள் நீர் மற்றும் காற்றின் மீது மிகவும் நுட்பமான வினைகளையுடையவை (வெகு விரைவில் வினைபுரியும் தன்மை) , ஆனால், உலர் நைட்ரசனுடன் வேலை செய்யக் கூடியதாகவும் உள்ளன. Hg-Hg பிணைப்பு நீளமானது ஏறத்தாழ 300 பிக்கோமீட்டர் என்ற அளவிலும், Hg-K பிணைப்பு நீளமானது ஏறத்தாழ 358  பிக்கோமீட்டர் அளவிலும் உள்ளது.

சோடிய இரசக்கலவை

[தொகு]

சோடிய இரசக்கலவையானது, குளோரால்கலி செயல்முறையில் துணை விளைபொருளாக உருவாகிறது. இது கனிம மற்றும் கரிம வேதியியலில் முக்கிய ஒடுக்கும் காரணியாகப் பயன்படுகிறது. நீருடன், இது சோடியம் ஐதராக்சைடு, ஐதரசன் மற்றும் பாதரசமாகச் சிதைவுறுகிறது. மீண்டும் இப்பொருட்கள் குளோரால்கலி செயல்முறைக்குப் புதியதாக உட்படுகின்றன. நீரற்ற தூய ஆல்ககாலானது நீருக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டால் ஆல்கலி கரைசலுக்குப் பதிலாக ஆல்காக்சைடானது உருவாகிறது.

அலுமினிய இரசக்கலவை

[தொகு]

அலுமினியம் பாதரசத்துடனான வினையின் காரணமாக அலுமினிய இரசக்கலவையை உருவாக்குகிறது. அலுமினிய வில்லைகள் அல்லது கம்பிகளை பாதரசத்தில் சேர்த்து அரைப்பதனாலோ அல்லது அலுமினியக் கம்பி அல்லது அலுமினியத் தாளை பாதரசக் குளோரைடுக் கரைசலுடன் வினைபுரியச் செய்வதாலோ கூட தயாரிக்கப்படலாம். இந்த இரசக்கலவையானது, இமீன்களை அமீன்களாக ஒடுக்கும் வினைகளில் ஒடுக்கியாகப் பயன்படுகிறது. அலுமினியமானது, மிகச்சிறந்த எதிர்மின்னி ஈனியாகவும், பாதரசம் எதிர்மின்னி மாற்றத்தைக் கடத்தும் ஊடகமாகவும் இருக்கிறது. [5]

வெள்ளீய இரசக்கலவை

[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் வெள்ளீய இரசக்கலவையானது கண்ணாடிகளில் எதிரொளிப்பிற்கான இரசப்பூச்சாகப் பயன்படுத்தப்பட்டது.[6]

இதர இரசக்கலவைகள்

[தொகு]

பல்வேறு விதமான இரசக்கலவைகள் அறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் தேவை மற்றும் பயன்பாடு ஆய்வு நோக்கம் சார்ந்ததாகவே உள்ளது.

அம்மோனிய இரசக்கலவையானது 1808 ஆம் ஆண்டில் ஹம்பிரி டேவி மற்றும் ஜே. ஜே. பெர்சீலியஸ் ஆகியோரால் கண்டறியப்பட்டது. இந்த இரசக்கலவை சாம்பல் நிறத்தை உடையதாகவும், மென்மையானதாகவும் உள்ளது. இந்த இரசக்கலவை அறை வெப்பநிலையில் மற்றும் நீர் அல்லது ஆல்ககாலுடன் தொடர்பிலிருக்கம் போது சிதைவடைகிறது.

தாலியம் இரசக்கலவையானது −58 °செ, உறைநிலையைக் கொண்டுள்ளது. இந்த உறைநிலையானது தூய பாதரசத்தின் உறைநிலையைக் காட்டிலும் (−38.8 °செ) குறைவானதாகும். ஆகவே, இந்த இரசக்கலவையானது மிகக்குறைந்த வெப்பநிலைகளை அளக்க உதவும் வெப்பநிலைமானிகளில் பயன்பத்தப்படுகிறது.

தங்க இரசக்கலைவயானது தங்கத்தின் சுத்திகரிப்பில் பயன்படுகிறது. தங்கமானது நுண்ணிய தூளாக்கப்பட்டு, பாதரசத்துடன் தொடர்புக்குட்படுத்தப்படும் போது, இரண்டு உலோகங்களின்பரப்புகளும் மிகத் தூய்மையான நிலையில் இருக்கையில், இரசக்கலவையாக்கம் எளிதாகவும், விரைவாகவும் நடந்து AuHg2 முதல் Au8Hg வரையிலான சேர்மங்களைத் தருகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Callister, W. D. "Materials Science and Engineering: An Introduction" 2007, 7th edition, John Wiley and Sons, Inc. New York, Section 4.3 and Chapter 9.
  2. http://mine-engineer.com/mining/minproc/MercAmal.htm
  3. Ham, Peter "Zinc amalgam" in e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis (2001). எஆசு:10.1002/047084289X.rz003
  4. E J Duwell; N C Baenziger (1955). "The Crystal Structures of KHg and KHg2". Acta Crystallogr. 8 (11): 705–710. doi:10.1107/S0365110X55002168. 
  5. Emmanuil I. Troyansky and Meghan Baker "Aluminum Amalgam" in e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis  2016, எஆசு:10.1002/047084289X.ra076.pub2
  6. "Die Sendung mit der Maus, Sachgeschichte vom Spiegel" (in German). Archived from the original on 17 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Mercury Amalgamation". mine-engineer.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசக்கலவை_(வேதியியல்)&oldid=4096149" இலிருந்து மீள்விக்கப்பட்டது