இந்திய மூக்குக்கொம்பன்
இந்திய மூக்குக்கொம்பன் | |
---|---|
இந்திய மூக்குக்கொம்பன்கள் (இடமிருந்து வலமாக: பச்சிளம் ஆண் கன்று, வயது வந்த பெண் விலங்கு, பெண் கன்று) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Rhinoceros (genus)
|
இனம்: | R. unicornis
|
இருசொற் பெயரீடு | |
Rhinoceros unicornis லின்னேயசு, 1758 | |
இந்திய காண்டாமிருகத்தின் பரவல் |
'இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன்[2] என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன.[3] நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008-இல் கணக்கிடப்பட்டுள்ளது.[4] இவ்விலங்கு அசாமின் மாநில விலங்காகும்.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும். இதனை 1758-ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும்[5]. தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்.
படிவளர்ச்சியும் பரவலும்
[தொகு]மூதாதைய மூக்குக்கொம்பன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது.[6] உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[7]
இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டாமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.[8][9] தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டாமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[10] மேலும் கோலோசின் காலத்தில் இம்மூக்குகொம்பன்கள் தற்போதைய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.[5]
முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.[11] மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.[12]
இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்:
நாடு | இடம் | காலம் | சான்றுகோள் |
---|---|---|---|
இந்தியா | கங்கா நகர், ராச்சசுத்தான் | 3500-400 BC | பானர்ஜி மற்றும் சக்ரவூர்த்தி (1973)[13] |
இந்தியா | லங்குனசு, குசராத் | பானைக் காலத்திற்கு முன் | ஜுனெர் (1952)[14] |
இந்தியா | கனிவெல் ஏரி, குசராத் | 8000-1200 BC | Momin et al. (1973)[15] |
இந்தியா | சிவாலிக் மலைகள் | கீழ் மயோசீன் | பேகர் மற்றும் துரந்த் (1836)[16],Falconer and Cautely (1847)[17], Falconer (1868)[18], Lydekkar (1876)[19]. |
இந்தியா | மிர்சாபூர், உத்திர பிரதேசம் | தரவுகள் இல்லை | காக்பர்ன் (1883)[20] |
இந்தியா | பாண்டா, உத்திர பிரதேசம் | தரவுகள் இல்லை | காக்பர்ன் (1883)[20] |
இந்தியா | சிர்ராண்டு, பீகார் | c.1700 BC | நாத் 1976)[21] |
இந்தியா | சென்னை, தமிழ் நாடு | தரவுகள் இல்லை | லைடேக்கர் (1880)[22] |
இந்தியா | கோகக், பெல்காம், கர்நாடகா | தரவுகள் இல்லை | ஃபூடே (1874)[23] |
பாக்கிசுத்தான் | அரப்பா | 2500-1500 BC | ப்ரசாத் [24] |
பாக்கிசுத்தான் | மொகஞ்சுதாரா | 300 BC | மார்ஷல் [25] |
வரலாற்றில் உள்ள பதிவுகள்
[தொகு]மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான். ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ்விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்ததாகும் மற்றும் இப்படிவத்தில் காண்டாமிருகத்தின் ஒரு சில பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன; காண்க தோளின் மீதுள்ள கொம்புகள்.
உடலமைப்பு
[தொகு]தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும்.[26] தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும்.[27] ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.
நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.[28]. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.[5].
அகவை(வயது) | அளவு |
---|---|
பிறந்தவுடன் | கொம்பு இல்லை |
6 மாதங்கள் | 1.1 – 1.65 செ.மீ |
ஓர் ஆண்டு | 3.3 – 5.5 செ.மீ |
2 ஆண்டுகள் | 6.6 – 8.8 செ.மீ, சுற்றளவு 17.6 – 22 செ.மீ |
3 ஆண்டுகள் | 8.8 – 13.2 செ.மீ, சுற்றளவு 17.6 – 44 செ.மீ |
3 - 20 ஆண்டுகள் | 19.8 – 22 செ.மீ, முழுவதும் வளர்ந்த கொம்பு |
20 - 30 ஆண்டுகள் | பயன்பாட்டால் கொம்பின் நீளம் குறைதல் அல்லது கொம்பு சேதமடைதல் |
பழக்கவழக்கங்கள்
[தொகு]சமூகவாழ்க்கை
[தொகு]இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தெள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டாமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டாமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டாமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.[5]
உணவு
[தொகு]இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலாலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.[5]
இனப்பெருக்கம்
[தொகு]இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.
இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்ணை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.
தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுகொள்ளும்.[29]
காப்புநிலை
[தொகு]ஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.[30] இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றபோதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. 1983-ஆம் ஆண்டிலிருந்து 1989-ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள்.[31]
இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[32][33][34]
பாதுகாக்கப்பட்ட இடத்தின் பெயர் | இந்திய காண்டாமிருகத்தின் எண்ணிக்கை | பாதுகாக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு |
---|---|---|
காசிரங்கா தேசிய பூங்கா, அசாம் | 1600 + | 430 சதுர கி.மீ |
ராயல் சிட்வான் தேசிய பூங்கா, நேபாளம் | 600 + | 932 சதுர கி.மீ |
போபிதார வனவிலங்கு உய்விடம், அசாம் | 78 | 16 சதுர கி.மீ |
சல்தாபார வனவிலங்கு உய்விடம், மேற்கு வங்காளம் | 65 | 21 சதுர கி.மீ |
ஓரங்கு வனவிலங்கு உய்விடம், அசாம் | 46 | 78 சதுர கி.மீ |
கோருமாரா தேசிய பூங்கா, மேற்கு வங்காளம் | 32 | 8.88 சதுர கி.மீ |
மானசா தேசிய பூங்கா | இங்கு காண்டாமிருகத்தின் இருப்பு சந்தேகத்திற்குரியது | - |
லோக்வா வனவிலங்கு உய்விடம் | தற்போது காண்டாமிருகம் ஏதுமில்லை | - |
பாதுகாக்கப்பட்ட இடத்தின் பெயர் | இந்திய காண்டாமிருகத்தின் எண்ணிக்கை |
---|---|
துவ்வா தேசிய பூங்கா, இந்தியா | 21 |
ராயல் பரிடியா தேசிய பூங்கா, நேபாளம் | 85 |
ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா, நேபாளம் | 16 |
1910-ஆம் ஆண்டு முதல் இந்திய காண்டாமிருகத்தின் உயிர் தொகையியல் புள்ளி விபரத்தின் போக்கு ஆதாரம் : here.
|
சின்னம்
[தொகு]இந்திய காண்டாமிருகம் அசாம் மாநிலத்தின் மாநில விலங்காகும். மேலும் அசாம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சியட் டயர் நிறுவனத்தின் சின்னமும் இந்திய காண்டாமிருகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rhinoceros unicornis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ சு, தியடோர் பாசுக்கரன் (2006). "ஒற்றைக் கொம்பனுக்கு மறுவாழ்வு". இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89912-01-1.
- ↑ http://www.foxnews.com/wires/2008Jul26/0,4670,IndiaRhinoPoaching,00.html
- ↑ http://news.nationalgeographic.com/news/2008/03/080327-nepal-rhinoceros.html
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Laurie, W.A.; E.m. Lang, and C.P. Groves (1983). "Rhinoceros unicornis". Mammalian Species (211): 1–6. doi:10.2307/3504002
- ↑ Xu, Xiufeng; Axel Janke, and Ulfur Arnason (01 Nov 1996). "The Complete Mitochondrial DNA Sequence of the Greater Indian Rhinoceros, Rhinoceros unicornis, and the Phylogenetic Relationship Among Carnivora, Perissodactyla, and Artiodactyla (+ Cetacea)". Molecular Biology and Evolution 13 (9): 1167–1173
- ↑ Lacombat, Frédéric. The evolution of the rhinoceros. In Fulconis 2005, pp. 46–49.
- ↑ http://www.ias.ac.in/jarch/currsci/62/00000593.pdf
- ↑ http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6VGS-4P8B0ST-1&_user=5965116&_coverDate=12%2F31%2F2008&_rdoc=1&_fmt=full&_orig=search&_cdi=6046&_sort=d&_docanchor=&view=c&_acct=C000025298&_version=1&_urlVersion=0&_userid=5965116&md5=4a4bc2cb93bc94e478998576f68b45fc#secx18[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Jayakaran S C, 1980. Fossil rhinoceros from Tamilnadu. Current Science 49/9/346-347
- ↑ Jarret, H.S. 1949. Ain-I-Akbari of Abdul Fazl-I-Allami, II: A Gazetteer and Administrative Manual of Akbars Empire and Past History of India. 2nd ed., corrected and further annotated by Sir Jadu-Nath Sarkar. Royal Asiatic Society of Bengal (Bibliotheca Indica, 271). Calcutta.
- ↑ 12.0 12.1 12.2 12.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-22. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17.
- ↑ Banerjee, S and Chakravoorty, S. 1973. Remains of the Great One-horned Rhinoceros, Rhinoceros uncornis Linnaeus from Rajasthan. Sci. and Cult. 39(10): 430-431.
- ↑ Zuener, F.E. 1952. The micro industry of Langhnaj, Gujarat. Man 52: 129-131.
- ↑ Momin, K.N., Shah, D.R. and Oza, G.N. 1973. Great Indian rhinoceros inhabited Gujarat. Current Science 42: 801-802.
- ↑ Baker, W.E and Durand, H.M. 1836. Sub-Himalayan fossil remains of the Dadapur collection. J.Asiat.Soc.Bengal 5: 486-504.
- ↑ Falconer, H and Cautely, P.T. 1847. Fauna Antiqua sivalensis, being the Fossil Zoology of the Siwalik Hills in the North of India.Illustrations, Part III: Suidae and Rhinoceratidae. Plates 69-80. Smith, Elder and Co., London.
- ↑ Falconer, H. 1868. Palaeontological memoirs and notes, 2 vols. Robert Hardwickwicke, London.
- ↑ Lydekkar, R. 1876. Descriptions of the molar teeth and other remains of mammalian. Mem.geol.surv. India (Palaeont.India), series X, 1(2): 19-87.
- ↑ 20.0 20.1 Cockburn. J. 1883. On the recent existence of Rhinoceros indicus in the North Western province and a description of a tracing of an archatic rock painting from Mizrapore representing the hunting of this animal. J.Asiat.Soc.Bengal 52: 56-64.
- ↑ Nath, B. 1976. On the occurrence of great Indian rhinoceros- Rhinoceros unicornis Linn. from the prehistoric site at Chirand, Saran district, Bihar. News letter, Zoological Survey, India 2(3): 86-87.
- ↑ Lydekkar, R. 1880. A sketch of the history of the fossil vertebrata of India. J.Asiat.Soc.Bengal 49: 8-40.
- ↑ Foote, F.B. 1874. Rhinoceros deccanensis, a new species discovered near Gokaka, Belgaum District. Mem.Geol.Sur. India (Palaeont India). Series X, 1(1): 1-17.
- ↑ Prashad, B. 1936. Animal remains from Harappa. Mem. Archaeological Survey, India 51: 1-76.
- ↑ Marshall, J. 1931. Mohenjo- Daro and the Indus civilizations, 3 vols. Arthur Probsthain, London.
- ↑ Prater, S.H. 1948, 1971. The book of Indian Animals (with 28 colour plates by Paul Barruel). Bombay Natural History Society and Oxford University Press, India. 324 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195621697.
- ↑ http://www.ultimateungulate.com/Perissodactyla/Rhinoceros_unicornis.html
- ↑ Dinerstein 2003, pp. 272
- ↑ http://www.wii.gov.in/envis/ungulatesofindia/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ அழிவுக்கு இலக்காகி இருக்கும் இந்திய விலங்குகளும் அவற்றைக் காக்கும் வழிமுறைகளும், எஸ். எம். நாயர், நேசனல் புக் டிரஸ்ட், 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-1239-1
- ↑ Menon, V. 1996. Under Siege: Poaching and protection of greater one-horned rhinoceros in India. Traffic India, WWF-India, New Delhi
- ↑ Sinha, S.P. and Sawarkar, V.B. 1991. Management of the reintroduced Great one- homed rhinoceros (Rhinoceros unicornis) in Dudhwa National Park, UP, India. International Rhino Conference, Rhinoceros Biology and Conservation, San Diego, California, USA: 9-11 May 1991.
- ↑ Sinha, S.P. and Sawarkar, V. B. 1992. Management of the reintroduced Indian Great one- homed rhinoceros (Rhinoceros unicornis) in Dudhwa National Park. IV World Congress of National Parks and protected areas, Caracas, Venezuela. 10-21, February, 1992.
- ↑ Sinha, S.P., Sawarkar, V.B and Tiwari, A. 2001. Management of Re-introduced Greater one-horned Rhinoceros (Rhinoceros unicornis) in Dudhwa National Park & Tiger Reserve, Uttar Pradesh, India. Proceedings of the International elephant and rhino research symposium, Vienna, June 7-11, 2001. 222- 230.
வெளி இணைப்புகள்
[தொகு]- Indian Rhino Info & /index.php?s=1&act=imgs&CODE=tax_images&taxon=6 Indian Rhino Pictures on the Rhino Resource Center (ஆங்கில மொழியில்)
- Indian Rhino page at International Rhino Foundation website பரணிடப்பட்டது 2007-10-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Greater Indian Rhinoceros page at TheBigZoo.com (ஆங்கில மொழியில்)
- Indian Rhino page at AnimalInfo.org (ஆங்கில மொழியில்)
- Indian Rhino page at AmericaZoo.com (ஆங்கில மொழியில்)
- Indian Rhinoceros page at nature.ca (ஆங்கில மொழியில்)
- Page Rhinocéros indien à nature.ca (ஆங்கில மொழியில்)
- Indian Rhinoceros page at UltimateUngulate.com (ஆங்கில மொழியில்)
- Short narrated video about the Indian Rhinoceros பரணிடப்பட்டது 2007-10-08 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Images, videos and information on the Indian Rhinoceros பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Asian Rhino Foundation பரணிடப்பட்டது 2007-09-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)