உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

ஆள்கூறுகள்: 8°58′35.0″N 77°09′05.0″E / 8.976389°N 77.151389°E / 8.976389; 77.151389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில்
ஆரியங்காவு தர்மசாஸ்தா சேத்ரம் 1900ல்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கொல்லம்
அமைவு:ஆரியங்காவு
ஆள்கூறுகள்:8°58′35.0″N 77°09′05.0″E / 8.976389°N 77.151389°E / 8.976389; 77.151389
கோயில் தகவல்கள்

ஆரியங்காவு ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இக்கோவில் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்து சமயக் கடவுளான ஐயப்பன் இக்கோவிலின் முதன்மைக் கடவுள் ஆவார். சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார்.

தனு மாதத்தில் (மார்கழி) ஐயப்பன் - புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். ஆர்யங்காவு கோயில், கேரளம் – தமிழ்‌நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எனவே அம்பலத்தினுள் மலையாள ஆச்சாரங்களும், உற்சவத்தின்போது தமிழ் ஆச்சாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.

அமைவிடம்

[தொகு]

தமிழக மாநிலத்தில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் உள்ள இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.திருவனந்தபுரம்-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.

கோவில் அமைப்பு

[தொகு]

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுகின்றன. கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற தொன்நம்பிக்கை உள்ளது.

தொன்மம்

[தொகு]

பரசுராமர் கிழக்கு மலை தொடர்ச்சியில் கேரளத்தில் நான்கு இடங்களில் நான்கு தர்மசாஸ்தா கோவில்களை நிறுவினார் என்பது ஐதீகம். அவற்றில் குளத்துபுழையில் பாலகனாக "பிரமச்சார்ய நிலை"யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் "கிரகஸ்தாஸ்ரம" நிலையிலும், அச்சன்கோவிலில் "வானப்பிரஸ்த" நிலையிலும் சபரிமலையில் "சந்நியாசி" கோலத்திலும் உள்ளார். அதன்படி சாஸ்தாவின் நான்கு முக்கிய கோவில்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு தர்மசாஸ்தா, சௌராட்டிர குலப் பெண்ணான புஷ்கலா தேவியுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

மதுரையிலிருந்து திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.

திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய நன்றிக்கடனாக தன்னிடம் இருந்த பட்டு அங்கவஸ்திரத்தை அந்த வேடனுக்கு வழங்கினார். வேடனும் அந்த பட்டு அங்கவஸ்திரத்தை தன்னுடைய கழுத்தில் தோளில் அணிந்து கொண்டு,இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இப்போது நான் எப்படி இருக்கிறேன்? என்று அந்த வியாபாரியிடம் கேட்டான் அந்த வேடன். கட்டுமஸ்தான உடம்பு,திமிறிய தோள்கள்,ராஜ தேஜஸுடன் மந்தகாச புன்னகையுடன் கூடிய வேடனின் முகத்தை கண்ட வியாபாரி,உனக்கு என்னப்பா குறை,மாப்பிள்ளை போல இருக்கிறாய் என்று மனதார கூறினார். அதைக் கேட்ட வேடன் அப்படியானால் உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?என்று கேட்டான். அதனால் என்னப்பா, என் உயிரை காப்பாற்றியதன் மூலம் என் குலத்தையே காப்பாற்றிய என் குல தெய்வம் நீ...! உன் விருப்படியே என் மகளை உனக்கே மணம் முடித்து தருகிறேன் என்று வாக்களித்தார்.

ஆரியன்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவில் கருவறையில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தக் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் கடைசி பாண்டியர்களின் இறுதியில் வடகரை ஆதிக்கத்திற்கு உட்பட்ட "சொக்கம்பட்டி ஜமீன்" சார்பில் ஆலய திருப்பணி நடைபெற்றதற்கான சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. இதனால் இதை திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது என்று கூறுவதும் உண்டு. கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது. பத்து முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் நுழையக் கூடாது.

சிறப்புகள்

[தொகு]
ஆரியங்காவில் குதிரை விழா

இத்தலம்,"மூர்த்தி", "தலம்", "தீர்த்தம்' என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவில் என்று கூறப்படுகிறது. "மூர்த்தி" என்ற வகையில், ஒரு திருக்கோவிலின் கருவரையில் தாபிக்கப்படும் தெய்வ (பிராண) பிரதிட்டைகள் அதாவது மூல விக்கிரகங்கள் அந்த திருக்கோவிலின் தல புராணத்தை விளக்கும் வகையில் அமையும். அந்த வகையில் இக்கோயிலில் தர்மசாஸ்தா "மதகஜ வாஹன ரூபனாக" அதாவது மதம் பிடித்த யானை அடக்கி, வேட வடிவில் மாப்பிள்ளை கோலத்தில் புஷ்கலா தேவியோடு இங்கு திருமண காட்சி தருகிறார்.

"தலம்" என்ற வகையில் ஆரியன் திரிந்த காடு "ஆரியன்காவு" என்ற பெயர் பெற்ற ஸ்தலமாக இது விளங்குகின்றது.

"தீர்த்தம்" என்ற வகையில் சாஸ்தா குடி கொண்டுள்ள குளத்துப்புழை, அச்சன்கோவில், பாம்பை ஆகிய இடங்களில் புனிதமான ஆறுகள் இருப்பது போல ஆரியன்காவு திருக்கோவிலின் சன்னதியிலும் "கருப்பா நதி" சல சலத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண தினத்தன்று "சப்பர புறப்பாடு" நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது.

திருக்கோயிலுக்கு உள்ளே மலையாள தாந்தீரிக முறைப்படியும், வெளிப்பிரகரத்தில் நடைபெறும் திருக்கல்யாணம், "பாண்டியன் முடிப்பு" @ நிச்சயதார்த்த வைபவம், சப்பர புறப்பாடு ஆகியவை தமிழ் நாட்டு ஆச்சார முறைப்படியும் நடைபெறுகிறது.

சௌராஷ்டிர குல மக்கள் "சம்பந்தி" முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் மணமகள் புஷ்கலா தேவி சார்பில் கலந்து கொள்கிறார்கள்.

தேவஸ்வம் போர்டாரல் மூன்று நாள் "சம்பந்தி விருந்தும்" அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐயப்பனின் பரவலாக அறியப்பட்ட கோவில்களில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. குளத்துப்புழா, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள் ஆகும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று, ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். சபரிமலையைப் போன்றே இங்கும் பூசைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]