அறுபது ஆண்டுகள்
அறுபது ஆண்டுகள் (ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
வரலாறு
[தொகு]இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தோடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3] ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3][4]
தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
[தொகு]தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6][7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]
பட்டியல்
[தொகு]எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |
01. | பிரபவ | நற்றோன்றல் | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | பொற்றடை | Hevilambi | 2017–2018 | |
02. | விபவ | உயர்தோன்றல் | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அட்டி | Vilambi | 2018–2019 | |
03. | சுக்ல | வெள்ளொளி | Sukla | 1989–1990 | 33. | விகாரி | எழில்மாறல் | Vikari | 2019–2020 | |
04. | பிரமோதூத | பேருவகை | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | வீறியெழல் | Sarvari | 2020–2021 | |
05. | பிரசோற்பத்தி | மக்கட்செல்வம் | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கீழறை | Plava | 2021–2022 | |
06. | ஆங்கீரச | அயல்முனி | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | நற்செய்கை | Subakrith | 2022–2023 | |
07. | ஸ்ரீமுக | திருமுகம் | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | மங்கலம் | Sobakrith | 2023–2024 | |
08. | பவ | தோற்றம் | Bhava | 1994–1995 | 38. | குரோதி | பகைக்கேடு | Krodhi | 2024–2025 | |
09. | யுவ | இளமை | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | உலகநிறைவு | Visuvaasuva | 2025–2026 | |
10. | தாது | மாழை | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | அருட்டோற்றம் | Parabhaava | 2026–2027 | |
11. | ஈஸ்வர | ஈச்சுரம் | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | நச்சுப்புழை | Plavanga | 2027–2028 | |
12. | வெகுதானிய | கூலவளம் | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | பிணைவிரகு | Keelaka | 2028–2029 | |
13. | பிரமாதி | முன்மை | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | அழகு | Saumya | 2029–2030 | |
14. | விக்கிரம | நேர்நிரல் | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | பொதுநிலை | Sadharana | 2030–2031 | |
15. | விஷு | விளைபயன் | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | இகல்வீறு | Virodhikrithu | 2031–2032 | |
16. | சித்திரபானு | ஓவியக்கதிர் | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | கழிவிரக்கம் | Paridhaabi | 2032–2033 | |
17. | சுபானு | நற்கதிர் | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | நற்றலைமை | Pramaadhisa | 2033–2034 | |
18. | தாரண | தாங்கெழில் | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | பெருமகிழ்ச்சி | Aanandha | 2034–2035 | |
19. | பார்த்திப | நிலவரையன் | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பெருமறம் | Rakshasa | 2035–2036 | |
20. | விய | விரிமாண்பு | Viya | 2006–2007 | 50. | நள | தாமரை | Nala | 2036–2037 | |
21. | சர்வசித்து | முற்றறிவு யாவுந்திறல் [13] | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பொன்மை | Pingala | 2037–2038 | |
22. | சர்வதாரி | முழுநிறைவு | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | கருமைவீச்சு | Kalayukthi | 2038–2039 | |
23. | விரோதி | தீர்பகை | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | முன்னியமுடிதல் | Siddharthi | 2039–2040 | |
24. | விக்ருதி | வளமாற்றம் | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | அழலி | Raudhri | 2040–2041 | |
25. | கர | செய்நேர்த்தி | Kara | 2011–2012 | 55. | துன்மதி | கொடுமதி | Dunmathi | 2041–2042 | |
26. | நந்தன | நற்குழவி | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | பேரிகை | Dhundubhi | 2042–2043 | |
27. | விஜய | உயர்வாகை | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | ஒடுங்கி | Rudhrodhgaari | 2043–2044 | |
28. | ஜய | வாகை | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | செம்மை | Raktakshi | 2044–2045 | |
29. | மன்மத | காதன்மை | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | எதிரேற்றம் | Krodhana | 2045–2046 | |
30. | துன்முகி | வெம்முகம் | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | வளங்கலன் | Akshaya | 2046–2047 |
இம் முறையிலுள்ள குறைபாடுகள்
[தொகு]வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Subbarayappa, B.V. (1989), Indian astronomy: a historical perspective. In: Biswas, Mallik, Vishveshwara (eds.), "Cosmic Perspectives", Cambridge University, ISBN 978-0-521-34354-1". பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Jorge Angelino (19 டிசம்பர் 2009). "THE EFFECTS OF SAMVATSARAS". பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 3.0 3.1 Time Measurement and Calendar Construction. Brill Archive. p. 84.
- ↑ The Obscure Text of the Jyotisha Vedânga Explained. Indian Press. 1907.
- ↑ T. V. Kuppuswamy (Prof.), Shripad Dattatraya Kulkarni (1995). History of Tamilakam. Darkness at horizon. Shri Bhagavan Vedavyasa Itihasa Samshodhana Mandira (Bombay, India). p. 50.
- ↑ மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு
- ↑ திருக்கடையூர் கோபுரக் கல்வெட்டு
- ↑ "சித்தர் பாடல் பதிப்புகள்". கீற்று.காம். 2 ஆகஸ்டு 2011. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1
- ↑ "தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக்". உண்மை ஆன்லைன். 16 சனவரி 2012. Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tamil calendar evokes interest" (PDF). The Hindu. 17 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ http://dheivamurasu.org/தெய்வமுரசு-நற்றமிழ்-நாட்/
- ↑ (சர்வசித்து முற்றறிவு Sarvajit) வடமொழியில் சித்து என்பதற்கும் ஜித் என்பதற்கும் பொருள் வேறு!