அசலாம்பிகை
அசலாம்பிகை என்பவர் பெண்களுக்கும் இளம் விதவைகளுக்கும் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் அதையெல்லாம் புறக்கணித்து, இளம் வயதில் கணவனை இழந்த நிலையிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று தமிழறிஞராக மாறியவர். இவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார்.[1]
பிறப்பும் கல்வியும்
[தொகு]திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த இவர் பத்தாவது வயதில் திருமணம் முடிந்து கணவனையும் இழந்தார். அன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்தவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத சமூகக் கட்டுப்பாடுகள் அதிகமிருந்த நிலையில் அவரது தந்தை பெருமாள் அய்யர் இவரைப் படிக்க வைக்க விரும்பினார். ஆசிரியரை வீட்டுக்கு வரவைத்து பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக அந்த ஊரை விட்டு வெளியேறி திருப்பாதிரிப் புலியூரில் குடியேறினார். அசலாம்பிகை தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றார்.
பேச்சாளர்
[தொகு]அசலாம்பிகை தம்மைப் போலவே மற்ற பெண்களும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரைத் தேடி வரும் பெண்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். அவர்களிடம் பெண்கள் முன்னேற்றத்திற்கான கருத்துகளைப் பேசியதுடன், அவற்றைப் பாடல்களாக இயற்றித் தந்தார். அடுப்படியே வாழ்க்கை எனக் கிடக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல மேடைகளில் பேசவும் பாடவும் செய்தார். அவற்றை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் இதழ்களில் எழுதி வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார்.[2]
பெண் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை குறித்த கருத்துகளையும் அவர் மேடைகளில் பேசினார். இவர் வடலூர் வள்ளலாரின் பொது நெறி குறித்தும் பல மேடைகளில் பேசியிருக்கிறார். பல வெளியூர்களில் இவர் பேசத் தொடங்கிய பின்பு “திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மையார்” என்று புகழ் பெற்றார்.
திரு.வி.க. பாராட்டு
[தொகு]“பண்டிதை அசலாம்பிகை அம்மையாரின் தமிழ் அமிழ்தை யான் இளைஞனாயிருந்த போது பன்முறை பருகினேன். திருப்பாதிரிப் புலியூரில் அத்தமிழ்த் தாயை நேரிற் கண்டு உறவாடுஞ் சேயானேன்.” என்று திரு.வி.க. இவரைப் பற்றி பல இடங்களில் கூறுவார் என்பது இவருக்குரிய தனிச்சிறப்புகளில் ஒன்று.
எழுதிய நூல்கள்
[தொகு]- ஆத்திசூடி வெண்பா
- இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- திருவாமாத்தூர்ப் புராணம்
- திருவுடையூர் (மேல்சேவூர்) தலபுராணம்
- காந்தி புராணம்
- திலகர் புராணம்
இக்கால ஔவையார்
[தொகு]திரு.வி.க அவர்கள் இவரை இக்கால ஔவையார் என்று அழைத்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜெயலெட்சுமி, கோ (2020-03-08). "19 ஆம் நூற்றாண்டின் ஔவையார் அசலாம்பிகை!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
- ↑ ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.