2020 பெட்டிமுடி நிலச்சரிவு
நாள் | 6 ஆகத்து 2020 |
---|---|
அமைவிடம் | பெட்டிமுடி, இடுக்கி மாவட்டம், கேரளா, இந்தியா |
வகை | நிலச்சரிவு |
இறப்புகள் | 66 |
காணாமல் போனோர் | 4 |
2020 பெட்டிமுடி நிலச்சரிவு (2020 Pettimudi landslide) என்பது 2020 ஆகத்து 6ஆம் நாளன்று, தென்னிந்திய மாநிலமான கேரளா இடுக்கி, பெட்டிமுடியில் நடைபெற்ற நிலச்சரிவு ஆகும். இந்த நிலச்சரிவு காரணமாக 66 பேர் இறந்தனர்.[1] நிலத்தடியில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் 4 பேரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.[2]
நிலச்சரிவு
[தொகு]எரவிக்குளம் தேசியப் பூங்காவின் எல்லையில் பலத்த சத்தத்துடன் பாறைகள் வெடித்து, பெட்டிமுடி ஆற்றில் விழுந்து இரண்டு கிலோமீட்டர் கீழே உள்ள தொழிலாளர் முகாம்களை அழித்தன. கண்ணன் தேவன் மலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகள் அழிக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் தப்பிக்க முடியவில்லை. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இச்சோகம் வெளி உலகிற்குத் தாமதமாகத் தெரியவந்தது. இப்பகுதி பத்து அடி உயரம் வரை மண்ணால் மூடப்பட்டது. பல இடங்களில் பெரிய பாறைகள் விழுந்தன.[3]
மீட்பு நடவடிக்கைகள்
[தொகு]மூணாரிலிருந்து 30 கி. மீ. க்கு அப்பால் உள்ள மலைப் பகுதியில் பெட்டிமுடி அமைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில், அலைபேசி சேவை அல்லது தரைவழி தகவல் தொடர்பு வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையில் இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் படையினர் சரியான நேரத்தில் துயரப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் 50 பேர் கொண்ட குழு மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றது. வான்வழி மீட்புப் பணிக்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. முதல் நாளில் 26 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது தேடுதல் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளில், மேலும் 16 உடல்கள் மீட்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. பயிற்சி பெற்ற தேடுதல் நாய்களும் பயன்படுத்தப்பட்டன. 10 மாத பெல்ஜிய மாலினாய்ஸ் காவல்துறையின் மோப்ப நாய் லில்லி, தரையில் புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களைக் கண்டுபிடித்தது. மூன்றாவது நாளில் மேலும் ஆறு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு மற்றும் வனப் பகுதியிலிருந்தும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Landslides in Pettimudi: social inequalities in disasters". The Hindu. 2022-09-27. https://www.thehindu.com/specials/text-and-context/landslides-in-pettimudi-social-inequalities-in-disasters/article65939327.ece. பார்த்த நாள்: 2023-08-07.
- ↑ "One year of Pettimudi landslide; a scar yet to be healed". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2021-08-06. Retrieved 2023-08-07.
- ↑ "Pettimudi landslide: Memories weigh down desolate survivors". The New Indian Express. Retrieved 2023-08-07.
- ↑ "The devastating Pettimudi landslides in Kerala: Were vulnerabilities ignored?". The News Minute (in ஆங்கிலம்). 2020-08-19. Retrieved 2023-08-07.