1960 கோயம்புத்தூர் கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கு
1960 கோயம்புத்தூர் கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கு, கோயம்புத்தூர் நகரத்தைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணன் என்ற பஞ்சாலை அதிபர் 100 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அச்சடித்து, புழக்கத்தில் விட்ட வழக்கில், ஜி. கிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம், 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணை வழங்கி தீர்ப்பு அளித்தது.[1][2]
வரலாறு
[தொகு]1959-ஆம் ஆண்டின் இறுதியில் கோயம்புத்தூர் நகரபுறத்தில் உள்ள புளியம்பட்டி சந்தையில் சில கள்ள நூறு ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்தது கவனிக்கப்பட்டது. இதனை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல்துறையினர் செய்த விசாரணையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே கோவையில் கள்ள நோட்டு புழக்கத்தை கண்காணிக்க சென்னை குற்றப்பிரிவு சி.பி. சி.ஐ.டி.,க்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
சி. பி. சிஐடியின் குற்றப்பிரிவின் துணை கண்காணிப்பாளர் ஆர். என். கிருஷ்ணசாமி, ஏப்ரல் 1960-இல் கோவை கள்ள நோட்டு புழக்க விசாரணையைத் துவக்கினார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கள்ள நூறு ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதையும் வணிக பரிவர்த்தனைகளையும் வெளிப்படுத்திய 1959 மற்றும் 1960 ஆண்டுகளின் கள்ள நோட்டு வழக்கு கோப்புகளையும், குறிப்புகளையும் ஆராய்ந்ததில், கள்ளநோட்டு புழக்கத்திற்கு ஒரு நிறுவனம் தான் காரணம் என முடிவுக்கு வந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பி. ராமா ராவின் கையொப்பத்தின் கீழ் எச் 19 மற்றும் ஏ 20 தொடர்களின் கீழ் அக்கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில் ஒரு தொடக்கமாக, புளியம்பட்டி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட 11 கள்ள நோட்டுகள் உதகமண்டல நகராட்சியின் கவுன்சிலர் வரதராஜா செட்டிக்கு சொந்தமானது என்ற விவரம் கண்டறியப்பட்டது. விசாரணையின் போது வரதராஜ செட்டி, டிசம்பர் 1958 இல் நாணய இரட்டிப்பு பரிவர்த்தனையில் பி. சி. ஜார்ஜிடம் ரூபாய் 50,000 இழந்ததாகவும், மேலும் கள்ள நோட்டுகளை அச்சிட்ட நிறுவனம் தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார். ஆனால் பி. சி. ஜார்ஜ்ஜை கைது செய்யாமல் அவரது நடமாட்டத்தை கண்காணிப்பதன் மூலம், கள்ள நோட்டு புழக்கத்தில் விடுபவர்களை கண்காணிக்க முடிவு செய்தார்.
விசாரணை அதிகாரி ஆர். என். கிருஷ்ணசாமி, நல்ல ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக கள்ள ரூபாய் நோட்டுகள் மூன்று மடங்காக வழங்குபவர்களுக்கு கோயம்புத்தூர் காவல் துறையினரும் உடந்தையாக இருந்ததையும் விசாரணையில் கண்டறிந்தார்.
மே 1960-இல், விசாரணை அதிகாரி ஒரு தகவலறிந்தவரின் உதவியுடன் கள்ள நோட்டுகளை வாங்க முயற்சி செய்தார். விசாரணை அதிகாரி ஒரு பணக்காரனாக காட்டிக்கொண்டு, ஒரு உயர் வகுப்பு விடுதியில் பதிவுசெய்து, அவருடன் உண்மையான நூறு ரூபாய் நாணயத்தாள் ரூபாய். 25,000-ஐ கொண்டு சென்று, பொறி வைத்து பிடிக்க முயன்றார். இத்தகவல் எப்படியோ கசிந்து பொறியில் யாரும் சிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
சிறிது நாட்கள் கழித்து, விசாரணை அதிகாரி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு பணக்காரத் திரைப்படத் தயாரிப்பாளராக காட்டிக் கொண்டார். இருப்பினும் கள்ளநோட்டுக்காரர்களை பிடிக்க வைத்த பொறியில் எவரும் சிக்கவில்லை.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொறிக்கான ஏற்பாடுகளை கவனமாக பரிசோதித்தபோது, தனது விசாரணைக்கு வலிய வந்து உதவிய கோயம்புத்தூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் பத்மநாபனை விசாரணைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
விசாரணை அதிகாரி ஆர். என். இராதாகிருஷ்ணன் இறுதியாக நாராயணசாமி என்ற மரத் தச்சரை கண்டுபிடித்து, விசாரணை நடத்தியதில், 1958-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஜவுளி ஆலை அதிபரான ஜி. கிருஷ்ணன், தன்னை கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கு ஒரு மர அச்சுத் தொகுதி தயாரிக்க நியமிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த அச்சுத் தொகுதி கிருஷ்ணனின் விருந்தினர் மாளிகையில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது தரமற்றதால் அழிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி, நாராயணசாமி ஆசாரி மற்றும் கிருஷ்ணனின் நம்பிக்கைக்குரிய பி. சி. ஜார்ஜ் மற்றும் பாலசுந்தரம் ஆகியோரையும் கைது செய்தார்.
ஜவுளி ஆலை அதிபர் ஜி. கிருஷ்ணன் தலைமையிலான சதித்திட்டம் இருப்பதை விவரிக்கும் மூன்று அறிக்கைகளின் படி, சூன் 1960-இல், பஞ்சாலை அதிபர் கிருஷ்ணன் மற்றும் பத்மநாபன் ஆகியோர் கோவையில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ரூபாய் 6.7 இலட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.
இந்த கள்ள நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பி. ராமா ராவின் கையொப்பத்தைத் தாங்கிய எச் 19, ஏ 20, கியூ 12 மற்றும் க்யூ 16 தொடர்களில் இருந்தன. அவை காவல் துறை உதவி ஆய்வாளர் பத்மநாபனின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மேலதிக விசாரணையில் மற்ற சதிகாரர்கள் கே.எஸ்.பி. மணி, கே.ஆர். ஆண்டனி, எம்.சி. குரியகோஸ், கே.ஏ. ஹமீத், தம்பு, பெரியசாமி, மருதாச்சல கவுண்டர், பாலகிருஷ்ணா முரளிதர் மற்றும் கே.ஸ்ரீதரன் நாயர் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணையில் தெரியவந்த செய்திகள்
[தொகு]1957-ஆம் ஆண்டில், சி.எஸ். & டபிள்யூ. டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிடெட் உரிமையாளரான ஜி. கிருஷ்ணன் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் பல பஞ்சாலைகளை வாங்கியதில் பணமுடை ஏற்ப்பட்டது. எனவே கள்ள நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலம் நிதிச் சிக்கலை சமாளிக்க முடிவு செய்தார். நாராயணசாமி ஆசாரியைக் கொண்டு, கள்ளநோட்டு அச்சு தயாரித்தார். அது தரமற்றது என கண்டறிந்து பின்னர் அழித்தார்.
1958-இன் துவக்கத்தில் கேரளா மாநிலத்தின் கோட்டயம் நகரத்தின் புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டணி, குரியகோஸ், மணி மற்றும் கோவையில் உள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோரின் கூட்டு முயற்சியால், ஜி. கிருஷ்ணன் கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவ முடிவு செய்தார்.
கிருஷ்ணன் சென்னையில் உள்ள ஈஸ்ட் ஆசியடிக் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திலிருந்து ஒரு ஜெர்மன் ஹைடெல்பெர்க் அச்சு இயந்திரத்தை வாங்கினார். அதனை கோவையில் ஒரு வாடகை வீட்டில், ஈஸ்ட் ஆசியடிக் கம்பெனி லிமிடெட் அனுப்பிய மெக்கானிக் ஒருவரால் நிறுவப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரமும் வாங்கப்படடது. கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் மணி பம்பாய்க்குச் சென்று, 17-வது ரிசர்வ் பத்திரத் தாளில் 208 ரீம்களை வாங்கி கோயம்புத்தூருக்கு அனுப்பினார். பம்பாயிலிருந்து கோயம்புத்தூரில் உள்ள வாடகை வீட்டிற்கு காகிதத்தை அனுப்பியதை நிரூபிக்க ஆவண ஆதாரங்கள் இருந்தன.
பின்னர் கிருஷ்ணனுக்கு சொந்தமான ஜனார்த்தனா டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிடெட் விருந்தினர் மாளிகையில் அச்சு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. கள்ளப் பணம் அச்சிடுதல் தொடங்கிய போது, பம்பாயில் வாங்கிய காகிதம் பொருத்தமானதல்ல என்று கண்டறியப்பட்டது. எனவே அதை உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டது. பின்னர் புதிய காகிதம் வாங்கப்பட்டு, பத்மநாபன் கள்ளநோட்டு அச்சிடும் பணிகளை மேற்பார்வையிட்டு, கிருஷ்ணனிடம் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்.
ஜெர்மன் அச்சிடும் இயந்திரத்தை இயக்குவது கடினம் என்று ஆண்டனி கண்டறிந்ததால், வேறு அச்சு இயந்திரம் கேட்டார். கிருஷ்ணன் சென்னையிலிருந்து ஒரு ரஷ்ய தயாரிப்பு டி.சி. ஹெவி பிளாட்டன் அச்சு இயந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். பின்னர் ஆண்டனி மற்றும் ஹமீத் ஆகியோர் பம்பாய்க்குச் சென்று இந்தியத் தயாரிப்பான சன்லைட் ஆஃப்செட் பேப்பரை ரூ. 1,718-க்கு வாங்கி ஜனார்தனா டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்குச் எடுத்துச் செல்லப்பட்டது. ஆண்டனி பம்பாய்க்கு பயணம் செய்தபோது, அவர் கிருஷ்ணனுக்கு செய்த தனிப்பட்ட டிரங்க் அழைப்புகளை, பின்னர் விசாரணை அதிகாரியால் முறையாகக் கண்டறியப்பட்டன.
புதிய அச்சிடும் இயந்திரம் மற்றும் புதிய காகிதத்தைப் பெற்ற பின்னர் கள்ளநோட்டுகள் அச்சிடும் பணி மார்ச் 1959-இல் துவங்கி மே 1959-இல் நிறைவு பெற்றது. அச்சிடப்பட்ட கள்ள நோட்டுகளின் பெயரளவு மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும்.
4 மே 1959 அன்று காலையில் அச்சிடப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் கட்டுகள் ஆண்டனி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோரால் கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது, ஆண்டனி செய்த உதவிக்கு, கிருஷ்ணன் ரூபாய் 2.5 லட்சம், பஞ்சாப் நேசனல் வங்கியிலிருந்து காசோலை மூலம் ரொக்கமாக எடுத்து வழங்கினார்.
4 மே 1959 மாலையில் கிருஷ்ணன், நூல் வாங்கிய கடனுக்கு ரூபாய் 10,000 /-க்கு கள்ள ரூபாய் நோட்டுகளை காரமடை பழனி கவுண்டருக்கும், மறுநாள் காலை பருத்தி வியாபாரிகளுக்கு செலுத்த வேண்டிய 60,000 ரூபாய்க்கு கள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கினார்.
பருத்தி வியாபாரிகளில் ஒருவர் கிருஷ்ணனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டுகள் போலியானது எனக் கண்டுபிடித்து, அதனை கிருஷ்ணனுக்கே அனுப்பி வைத்தார். இது கிருஷ்ணனை மிகவும் கலக்கப்படுத்தியது. எனவே கிருஷ்ணன் புழக்கத்தில் விட்ட அனைத்து கள்ள நோட்டுகளையும் திரும்பப் பெற ஏற்பாடு செய்தார். பின்னர் கிருஷ்னன் திரும்பப் பெற்ற கள்ள நாணயத்தாள்கள் முழுவதையும் காவல்துறை உதவி ஆய்வாளர் பத்மநாபனின் வீட்டிற்கு அனுப்பினார். உதவி ஆய்வாளர் பத்மநாபன், துடியலூர் மருதாச்சல கவுண்டருக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும், ஜார்ஜ் என்பவருக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை விற்றார்.
விசாரணை தொடங்கியபோது, கிருஷ்ணன் பதற்றமடைந்து, ஜெர்மன் மற்றும் ரஷ்ய தயாரிப்பு அச்சு இயந்திரங்களையும், இந்திய வெட்டு இயந்திரத்தையும் உடைத்து உருக்கினார். குற்றம் சாட்டப்பட்ட தம்பு என்பவர் அளித்த தகவலின் பேரில், அச்சிடும் இயந்திரங்களின் உருகாத பாகங்கள் நிறுவனங்களிலிருந்து மீட்கப்பட்டு, அவற்றை வழங்கிய நிறுவனங்களின் இயக்கவியலால் அடையாளம் காணப்பட்டது.
விசாரணையின் போது, ஒரு பதிவு செய்யப்பட்ட பார்சல் விசாரணை அதிகாரி ஆர். என். கிருஷ்ணசாமியால் பெறப்பட்டது. அதை திறந்து பார்க்கையில் ரூபாய் 1.19 லட்சம் கள்ள நோட்டுகளும், பெயர் மற்றும் கையொப்பம் இடப்படாத கடிதமும் இருந்தது. கடிதத்தில் கள்ள நோட்டுகள், தான் அதை மருதாச்சலக் கவுண்டரிடமிந்து பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்பு
[தொகு]கள்ள நோட்டு அச்சடிப்பு விசாரணையை முடித்ததும், குற்றத்திற்கான ஆதரங்கள் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் சி. கே. தப்தாரியிடம் வழங்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் 9-வது மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. பின்னர் இவ்வழக்கு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 80 நாட்கள் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிமன்றத்தால் 3,000 பக்க குற்ற ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி 27 சூலை 1960 அன்று வழங்கிய தீர்ப்பில் ஜவுளி ஆலை அதிபர் கிருஷ்ணன் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் பத்மநாபன் உட்பட 8 முக்கிய குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஆகஸ்ட் 1962-இல் தண்டனையை குறைக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில், சிறப்பு அமர்வு நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், 10 ஆண்டு தண்டனையை தண்டணையை 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.