ஹரல்ட் ஹோல்ட்
ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் Harold Edward Holt | |
---|---|
ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் | |
பதவியில் ஜனவரி 26, 1966 – டிசம்பர் 19, 1967 | |
முன்னையவர் | ரொபேர்ட் மென்சீஸ் |
பின்னவர் | ஜோன் மாக்கெவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா | 5 ஆகத்து 1908
இறப்பு | 17 திசம்பர் 1967 நேப்பியன் புள்ளி, விக்டோரியா | (அகவை 59)
அரசியல் கட்சி | லிபரல் |
ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் (Harold Edward Holt, ஆகஸ்ட் 5, 1908 – இறப்பு அநுமானிக்கப்பட்டது: டிசம்பர் 17, 1967) ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமராக 1966 - 1967 காலப்பகுதியில் இருந்தவர். இவர் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது திடீரென காணாமல் போனதையடுத்து இவரது பதவிக்காலம் டிசம்பர் 17, 1967இல் முடிவுற்றது. அவர் இறந்ததை ஆஸ்திரேலிய அரசு டிசம்பர் 19 இல் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். வியட்நாம் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்தியமைக்கு ஹோல்ட் இன்னமும் நினைவுகூரப்படுகிறார்.
வியட்நாம் போரில் ஹோல்ட்
[தொகு]ஹோல்ட்டின் பதவிக்காலத்தில் வியட்நாம் போர் ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபடவைத்தார். பதவிக்கு வந்த அதே மாதத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்ட படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக, 4,500 ஆக, அதிகரித்தார். ஹோல்ட் மிகவும் தீவிரமான அமெரிக்க சார்புக் கொள்கையுடையவராக இருந்தார். அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார்.
மறைவு குறித்த வதந்திகள்
[தொகு]ஹோல்ட்டின் இறப்புக் குறித்து பல வதந்திகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ரஷ்ய அல்லது சீன நீர்மூழ்கிக் கப்பலினால் கடத்தப்பட்டார் என்றும் பலர் விவாதிக்கின்றனர்.
1983 இல் பிரித்தானிய ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் மக்கள் சீனக் குடியரசின் உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.[1]
ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரே மார்ட்டின் நவம்பர் 2007 இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். த புலெட்டின் இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி "ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.[3]
இதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கிரே, அந்தனி. பிரதமர் ஒரு உளவாளி (லண்டன், 1983)
- ↑ த புலெட்டின் 13 நவம்பர் 2007, ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார்-தி ஆஸ்திரேலியன் 14 நவம்பர் 2007 பரணிடப்பட்டது 2007-12-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ சிட்னி மோர்னிங் ஹெரால்ட் 13 நவம்பர் 2007, ஹெரால்ட் சன் நவம்பர் 15 2007
- ↑ ஏபிசி 2 செப்டம்பர் 2005
வெளி இணைப்புகள்
[தொகு]- ஹரல்ட் ஹோல்ட் பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம்