ஸ்ரீரங்க தேவ ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ஸ்ரீரங்க தேவ ராயன் (கி.பி. 1572-1586) அல்லது முதலாம் ஸ்ரீரங்கா என அழைக்கப்பட்டவன், விஜயநகரப் பேரரசை ஆண்ட அரசர்களில் ஒருவன்.[1] அரவிடு மரபைச் சேர்ந்த இவன், அம் மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் சிதைந்து போயிருந்த பேரரசைச் சீர்செய்ய முயன்றான் எனினும், இவனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் படையெடுப்புக்கள் அடிக்கடி நிகழ்ந்ததுடன் நாட்டின் சில நிலப்பகுதிகளை அவர்களிடம் இழக்கவும்வேண்டி ஏற்பட்டது.
1576 ஆம் ஆண்டில், சுல்தான் அலி ஆதில் ஷா பெனுகொண்டாவில் இருந்த ஸ்ரீரங்காவின் கோட்டையை மூன்று மாதங்களாக முற்றுகை இட்டிருந்தான். இறுதியில் ஆதில் ஷாவின் இந்துத் தளபதிகளின் உதவியினால். ஸ்ரீரங்காவின் படைகள் சுல்தானின் படைகளை முறியடித்தன.
1579 ஆம் ஆண்டில், சுல்தானின் தளபதியும், மராட்டாப் பிராமணனும் ஆகிய முராரி ராவ் என்பவன் பெரிய முஸ்லிம் படையுடன் வந்து கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகளைத் தாக்கி அழித்தான். 1579 இன் இறுதிப் பகுதியில், அவன், அஹோபிலாம் கோயிலைத் தாக்கினான். அதனை அழித்தபின், அங்கிருந்த மணிகள் பதித்த திருமாலின் தங்கச் சிலையைப் பெயர்த்து சுல்தானுக்குப் பரிசாக அனுப்பினான். ஸ்ரீரங்கா முராரி ராவையும், அவனுடைய கோல்கொண்டா படைகளையும் தாக்கித் தோற்கடித்தான். அவன் அப்படைகளை வடக்கே துரத்திவிட்டு, அவர்களிடம் இழந்த பகுதிகளையும் மீட்டான். இச் சண்டையில் முராரி ராவ் பிடிபட்டான் ஆயினும் அவன் பிராமணன் ஆனதால் அவன் கொல்லப்படாமல் தப்பினான்.
புதிய சுல்தான் இப்ராஹிம் குதுப் ஷா கொண்டவிடுவைத் தாக்கி, உதயகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பின்னர் பெருந்தாக்குதல் ஒன்றை நடத்திப் பல உள்ளூர் மக்களைக் கொன்றான். எனினும் ஸ்ரீரங்கா சளைக்காமல் போராடி சுல்தானை உதயகிரியிலிருந்து துரத்தினான். சுல்தான் வினுகொண்டாவைத் தாக்கி அக் கோட்டையைக் கைப்பற்றினான். ஸ்ரீரங்கா, சென்னப்பாவுடன் வினுகொண்டாவுக்குச் சென்று கடும் சண்டையின் பின்னர் சுல்தானைத் தோற்கடித்தான். எனினும் சென்னப்பா போரில் இறந்தான்.
வெளியிலிருந்து வந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இவனது சகோதரர்களும் இவனுடன் ஒத்துழைக்காது பிரச்சினை கொடுத்தனர். மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்களும் திறை கொடுக்காது தட்டிக் கழித்தனர். ஸ்ரீரங்கா குறைவான வளங்களுடன் தொடர்ந்தும் எதிரிகளைச் சமாளித்து வந்தான்.
ஸ்ரீரங்கா 1586 ஆம் ஆண்டில் வாரிசு இல்லாமல் காலமானான். இவனைத் தொடர்ந்து இவனது தம்பியான வெங்கடபதி ராயன் ஆட்சிக்கு வந்தான்.