ஸ்தாயி
சிதாயி (அல்லது மண்டிலம்) என்பது கருநாடக இசையில் ஏழு சுரங்களும் நிற்கும் இடத்தை (அல்லது நிலையை)க் குறிக்கும். சட்சம் முதல் நிசாதம் வரையிலுள்ள எல்லையை ஒரு சிதாயி என்கிறோம். இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2]
1. மந்திரசிதாயி (மெலிவு மண்டிலம்) - ஆதார மத்திய சிதாயி ஆகிய சட்ச சுரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் "நி த ப ம க ரி ச" என்ற ஏழு சுரங்களும் இதில் அடங்கும்.
2. மத்தியசிதாயி (சமன் மண்டிலம்) - ஆதார மத்திய சிதாயி ஆகிய சட்ச சுரத்திலிருந்து மேல் நோக்கி போகும் "ச ரி க ம ப த நி" வரையிலான ஏழு சுரங்களும் இதில் அடங்கும்.
3. தாரசிதாயி (வலிவு மண்டிலம்) - இது சட்ச சுரத்திலிருந்து அதற்கு மேலிருக்கும் "ரி க ம ப த நி" வரையிலான ஏழு சுரங்களும் இதில் அடங்கும்.
தமிழிசை முறையில் மனிதனுடைய தொண்டையினால் சாதாரணமாகப் பாடக் கூடிய அளவைக் கொண்ட 14 சுரங்களை உடைய நிலையே மூன்று சிதாயிகளென வழங்கியிருக்கின்றார்கள்.
எமது வழக்கத்தில் இருந்து வரும் கீர்த்தனைகள், கிருதிகள், வர்ணங்கள், மற்றைய உருப்படிகள் யாவும் மேற்கூறிய சிதாயி நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
தக்க சாரீரமுடைய ஒருவர் 7 சுரங்களை ஒரு நிலையைக் கொண்ட மூன்று சிதாயிகளிலும் பாடுவதாயினும், தாரசிதாயியில் நின்று பாட முடியாது. அவ்வாறு பாடினும் அது செவிக்கு இன்பம் அளிக்காது என்பது பொது அனுபவம். ஆனால் எவ் விதிக்கும் விதிவிலக்குகள் இருப்பது போல 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆத்மநாத பாகவதர், சன்சாமிர்தம் சுப்பராயர் ஆகிய சில திறமை மிக்க பாடகர்கள் வரப் பிரசாதமான சாரீரத்தைப் பெற்றிருந்தமையால் 3 சிதாயிகளிலும் இலகுவாக கானம் இசைக்கக் கூடியவர்களாக விளங்கினார்கள்.
இசைக்கருவிகளின் சிதாயி எல்லை
[தொகு]இல | இசைக்கருவி | சிதாயி |
---|---|---|
1. | கின்னரப்பெட்டி (பியானோ) | 7 1/4 |
2. | பிரதர்ச வீணை | 5 |
3. | கோட்டு வாத்தியம் | 4 1/2 |
4. | பிடில் (வயலின்) | 4 |
5. | வீணை | 3 1/2 |
6. | காகளம் (கிளாரினெட்) | 3 |
7. | கின்னரம் (ஆர்மோனியம்) | 3 |
8. | வரப்பிரசாதமான மனித சாரீரம் | 3 |
9. | விருத்தி செய்த மனித சாரீரம் | 2 1/2 |
10. | புல்லாங்குழல் | 2 1/2 |
11. | நாதசுவரம் | 2 1/2 |
12. | முகவீணை | 1 1/2 |
13. | மகுடி | 1 இலும் குறைய |
யாழ்
[தொகு]பேரியாழிலே மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று மண்டிலங்களும் அமைந்திருந்தன என்று சுவாமி விபுலாநந்தர் தமது யாழ்நூல் என்னும் நூலில் கூறுகின்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article Title[usurped!]
- ↑ Te Nijenhuis, Emmie (1974). Indian Music: History and Structure. BRILL Academic. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-03978-3.