வேலூர் அரசு அருங்காட்சியகம்
வேலூர் அரசு அருங்காட்சியகம் (Vellore Government Museum ), தமிழக அரசால் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் ஆறாம் நாளில் நகர அரங்கம் வேலூரில் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாளில் இருந்து தற்போதுள்ள வேலூர் கோட்டையினுள் இயங்கி வருகிறது. இவ்வருங்காட்சியகம் ஒரு பல்நோக்கு அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகத்தின் மொத்தப்பரப்பளவு 9000 சதுர அடிகளாகும். இதில் 5000 சதுர அடிகள் பரப்பளவில் கலைப்பொருட்கள் எட்டுவகையான காட்சிக்கூடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதைபொருளாகக் கண்டெடுக்கப்படும் அனைத்து அரும்பொருட்களும் இங்குதான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மூன்று தேசிய விடுமுறை நாட்களிலும் வார விடுமுறையான வெள்ளிக்கிழமையும் தவிர்த்து ஏனைய தினங்களில் பொது மக்களின் பார்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.[1] அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது.
இங்கு 3000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள், கற்சிலைகள், கல்வெட்டுகள், நடுகற்கள், மரச்சிற்பங்கள், ஓவியங்கள், மானுடவியல் கலைப்பொருட்கள், நாணயங்கள், போர்க் கருவிகள், அஞ்சல் தலைகள் , தாவரவியல், விலங்கியல் மற்றும் புவியியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [2]
முந்து வரலாற்று கலைப்பொருட்கள்
[தொகு]பெருங் கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்திய சுடுமண் தாழிகள் இரண்டு இங்கு பாதுகாக்கப்படுகிறது. இவை இரண்டும் குடியாத்தம் வட்டம் வேப்பூரில் கண்டெடுக்கப்பட்டவை ஆகும். செங்கம் வட்டம் பெருங்குளத்தூர் என்னும் ஊரில் கிடைத்த புதைபொருட்களும் சவ்வாது மலை பகுதிகளில் இருந்து கிடைத்த கற்கோடாரிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் இப்பகுதியில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.மேலும் [[அரும்பலூர்| அரும்பலூரில்}] கிடைத்த சமணப்படிமங்கள் அக்கால வரலாற்றை விளக்குகின்றன.
சிலைகள்
[தொகு]சோழவரம் சிவன் மற்றும் சந்திரன் சிலைகள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்கள நாட்டு கலை வண்ணங்களாகும். இவ்வாறே இங்கு சில சோழர்கால கற்சிற்பங்களும் விசயநகர மன்னர்கள் காலத்திய சில கற்சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.
நடுகற்கள்
[தொகு]போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நடுகற்கள் வைப்பது நம்முடைய பண்டைய மரபாக இருந்துவந்துள்ளது.கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்மணி நடுகல்லும், 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பனங்காட்டேரி நடுகல்லும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
போர்கருவிகள்
[தொகு]அப்புக்கல் என்ற ஊரில் புதையலாக கிடைத்த செப்பு போர்வாட்களும், பழங்குடிகளான மலையாளிகள், இருளர்கள், காட்டு நாயக்கன்கள், இலம்பாடிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் ஆடை அணிகலன்கள் இங்கு சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விலங்கியல் கூடம்
[தொகு]இக்கூடத்தில் பலவகையான பாம்புகள், மீன்கள், பறவைகள், மயில்கள், மான்கள், கழுதைப்புலி முதலியன பதப்படுத்தப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
நாணயங்கள்
[தொகு]சோழர் கால நாணயங்கள், விசயநகர மன்னர் கால காசுகள், ஆற்காடு நவாப் கால நாணயங்கள் மற்றும் ஆங்கிலேயர் கால நாணயங்கள் அந்தந்த காலகட்டத்தின் பொருளாதார வழக்கத்தை தெரிவிப்பவனவாக இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.
மானுடவியல் கூடம்
[தொகு]ஆரணி சாகிர்தாரர்கள் பயன்படுத்திய வாட்களும், மிகச்சிறப்பு வாய்ந்த கரிகிரி மட்பாண்டங்களும், முடையூர் மாக்கல் சிலைகளும், வாலாசா மண்சிற்பங்களும் இக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கடைசித் தமிழ்மன்னர்
[தொகு]வேலூர் கோட்டையில் சிறையில் வாடிய இலங்கை கடைசித் தமிழ்மன்னரரான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பயன்படுத்திய தந்தத்தினாலான சதுரங்கப் பலகையும், பூமராங் என்னும் வளை தடியும் இங்கு அழகுற வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
- ↑ [1]