வீ. வருண்குமார்
வீ. வருண்குமார் | |
---|---|
பிறப்பு | வீ. வருண்குமார் இராமநாதபுரம் தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | இந்தியக் காவல் பணி |
பணியகம் | தமிழ்நாடு அரசு காவல் துறை |
பெற்றோர் | வீரசேகரன், கல்பனா |
வாழ்க்கைத் துணை | வந்திதா பாண்டே |
வீ. வருண்குமார் (V. Varun Kumar) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை வீரசேகரன் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். தாய் கல்பனா ஒரு குடும்பத் தலைவி ஆவார். இவரது தந்தையின் பணி நிமித்தமாக குடும்பம் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தது. திருச்சியில் காம்பியன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த, இவர் சென்னையில் உள்ள ராகஸ் பல் மருத்துவக் கல்லூரியில் பல்மருத்துவராகப் பட்டம் பெற்றார். இந்நிலையில் காக்க காக்க திரைப்படத்தைப் பார்த்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்று விரும்பினார்.[1] அதனால் 2007 இல் அதற்காக தயாராகத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள் எழுதி அகில இந்திய அளவில் மூன்றாம் இடம்பெற்று தேர்வானார். இந்திய ஆட்சிப்பணி அலுவலாராகும் வாய்ப்பு இருந்தும், இந்தியக் காவல் பணி அலுவலர் பணியை விரும்பி ஏற்று 2011 ஆண்டு பயிற்சி முடித்தார். பின்னர் உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர், சென்னை அதிதீவிரப்படையில் பணிபுரிந்தார். காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பல இடங்களில் பணிபுரிந்தார். தற்போது (2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவருகிறார்.
குடும்பம்
[தொகு]இவர் இந்தியக் காவல் பணி அலுவலரான வந்திதா பாண்டே என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
சர்ச்சைகள்
[தொகு]வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டுவந்தது. ஒரு கட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வருண்குமார் தி.மு.கவின் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினரைப் போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.[2] 2024 திசம்பர் மாதம் சண்டிகரில் நடந்த ஐந்தாவது இ.கா.ப அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று பேசியது சர்ச்சைகளை ஏற்படுதியது.[3] இதனையடுத்து நடத்தை விதிகளை மீறிய வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நா.த.க.யினர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டி.ஜி.பி) புகார் அளித்தனர்.[4]
பதக்கங்களும் அங்கீகரித்தல்களும்
[தொகு]- சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றியதற்காக வருண்குமாருக்கு 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "null". Jagranjosh.com (in ஆங்கிலம்). 2012-04-16. Retrieved 2024-12-07.
- ↑ Karthick, Prasanth. "நாம் தமிழர் ஒரு ஆபத்தான இயக்கம்..? பிரதமர் மோடி முன்னால் பேசிய அருண்குமார் ஐபிஎஸ்! - நாம் தமிழர் கண்டனம்!". tamil.webdunia.com. Retrieved 2024-12-05.
- ↑ பிரதீபா (2024-12-04). ""நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி" IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. அறிவிப்பு". tamil.abplive.com. Retrieved 2024-12-05.
- ↑ "திருச்சி எஸ்பி மீது தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்! நாம் தமிழர் கட்சியினர் அதிரடி!". Samayam Tamil. Retrieved 2024-12-05.
- ↑ Ranjith (2024-09-15). "சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு". Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-05.