உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மொழிபெயர்ப்பு விதிகள்/மலையாளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”ஐ” கொண்டுள்ள சொற்கள்: தாமர/தாமரை

[தொகு]
வழக்கமாக, தமிழில் ஐ கொண்டுள்ள சொற்கள் மலையாளத்தில் அ என்றே முடிகின்றன (திராவிடச் சொற்கள் மட்டும்!). தமிழுக்கு ஏற்றவாறு மாற்றவேண்டுமா? எ.கா: தாமர - தாமரை, மல - மலை, கர- கரை

ஆங்கில வழியில் சொற்களைப் படித்துவிட்டு சிலர், ஆ என்று முடித்து எழுதுகிறார்கள். மல -மலா(மலை), திருவல்ல -திருவல்லா (திருவல்லை) அ, ஐ, ஆ ஆகிய மூன்று தலைப்புகளில் ஒன்றை முதன்மைப்படுத்தி மற்றவற்றை வழிமாற்றாகத் தர வேண்டும். (எடுத்துக்காட்டு: குதிரமாளிக (ml), குதிரைமாளிகை ta), குதிரமாளிகா (en)) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:35, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆம் மாற்றுவதே நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவின் மூலம் தாமரை தமிழில் தாமர என மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.--Kanags \உரையாடுக 06:29, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
என் கருத்து: வணக்கம் தமிழ்க்குரிசில். அனைத்து பெயர்களும் தமிழ்படுத்தப்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும். பிற மொழி வழிமாற்றுகள் தேவையில்லை--நந்தகுமார் (பேச்சு) 06:37, 2 நவம்பர் 2013 (UTC) 👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 16:28, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் அதனையே நானும் சொல்ல வந்தேன்.--Kanags \உரையாடுக 07:23, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மேற்கூறிய வகை, தமிழ் மூலச் சொற்களுக்கு மட்டுமே!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
  • தமிழ்க்குரிசில், நான்கு வெவ்வேறு கருத்துகளைச் சரியாக வரையறை செய்துகொண்டு பேசுதல் நல்லது.
  1. மொழிபெயர்ப்பு: horse = குதிரை, lotus = தாமரை (இவை சில நேரங்களில் மூல மொழியில் உள்ள அதே பொருள் எல்லைகளைத் தமிழில் கொண்டிராமல் இருகக்லாம், அல்லது தமிழில் மூல மொழி சுட்டாத கூடுதலான பொருள் எல்லைகள் கொண்டதாகவோ இருக்கலாம். ஆகவே இடத்துக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. பொருள்நிறம் இரு மொழிகளிலும் ஒன்றுபோலவே இராது. ஆங்கிலத்தில் river bank, sea shore என்பதைத் தமிழில் ஆற்றங்கரை, கடற்கரை என்கிறோம்; இரண்டுக்குமே கரை.
  2. எழுத்துப்பெயர்ப்பு: horse ஹ்ஒர்ஸ்இ (கிரந்தம் சேர்த்து எழுதினால் இப்படி எழுதலாம், ஆனால் எல்லா மொழி ஒலிகளுக்கும் கிரந்தம் போதாது. Gandhi என்பதைக் க்3அந்த்4இ என்பது போல எழுதுதல். ஆங்கிலம், உருசியம், அரபி என்று மிகப்பல மொழிகளில் பல்வேறு ஒலியெழுத்துகள் உள்ளன. எழுத்துப் பெயர்ப்பு என்பது ஒருமொழியின் ஓரெழுத்துக்கு ஏதோ ஒருவகையான வழியில் தமிழ் எழுத்துகளைக்கொண்டு மேலொட்டு, கீழொட்டு இட்டோ அல்லது பிற முறைமைகளைத் தழுவியோ எழுதுவது. ஒலிப்பு என்பது கூட சரியாக இல்லாமல் இருக்கலாம். எழுத்துக்கு எழுத்தான பெயர்ப்புதான். எழுத்தில் ஒலிகளைச் சூழலோடு கூடிக் காட்டும் முறை அன்று. physics என்பதை ப்ஹ்ய்இக்*ஸ் என்று எழுதிக்காட்டுதல்
  3. ஒலிபெயர்ப்பு: ஒலிப்பைக் கூடியமட்டிலும் துல்லியமாகக் காட்டுதல் physics என்பதை ஃபிசி7க்ஸ் அல்லது ஃபிஸிக்ஸ் (இவை எல்லாம் மிகுதுல்லியம் என்று கூற முடியாது), இதனையே அனைத்துலக ஒலியன் குறியீட்டின் படி எழுதிக்காட்டுதல் அல்லது பிற வழிகளில் எழுதிக்காட்டுதல், எ.கா. மெரியம்-வெபுசிட்டர் அகராதி \ˈfi-ziks\ என்று காட்டும்; இப்படி எழுதிக்காட்டுதலில் எங்கு சற்று நிறுத்தி ஒலிக்க வேண்டும், எதனை அழுத்த வேண்டும் போன்ற குறிப்புகள் இருக்கும் ஆக்ஃசுபோர்டு அகராதி /ˈfɪzɪks/ என்று ஒலிப்பைக் காட்டுகின்றது. கேம்பிரிட்சு அகராதி /ˈfɪz·ɪks/ எனக் காட்டுகின்றது (இவை மூன்றும் வெவ்வேறான ஒலிப்புகள் என்று உணர்தல் வேண்டும்). அதாவது வெவ்வேறு முறைகளிலும் சிறு மாறுபாடான ஒலிப்புகளிலும் குறிக்கின்றார்கள். ஆனால் இவை எல்லாம் ஒலிபெயர்ப்பு, அதைக் காட்டும் முறைகளில் சில
  4. தமிழ்முறைப்படிப் பிறமொழிச்சொல்லை எழுதுதல்: வேற்று மொழிச்சொற்களைத் தமிழ் முறைப்படித் தமிழாக்கி வழங்குதல். இதற்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் நெடிய நல்வரலாறு உள்ளது. எ.கா. கமலம், சந்தோசம், தலம் (ஸ்தலம்), விசயம்-விடயம், இராவணன், இராமன், விபீடணன், திருதராட்டிரன், அனுமன், பில் கேட்ஃசு, சனவரி.. இப்படித் தமிழ்ப்படுத்தி எழுதியிருப்பவை பிறமொழிச்சொற்கள் தாம், ஆனால் அவை ஓரளவுக்குத் திரிபடைந்து தமிழ் முறைப்படி தமிழில் வழங்கும் வேற்றுமொழிச் சொற்கள். எல்லா மொழிகளிலும் இப்படித் திரிபடைதல் உண்டு, அது இயற்கை.

நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் நான்காவதாகத் தந்துள்ள முறைப்படிதான் (கூடிய மட்டிலும் இலக்கண முறைப்படி) வழங்குகின்றோம். சில நேரங்களில் முதல் முறையைப் பின்பற்றுகின்றோம். இரண்டாவது மூன்றாவது முறையைப் பிறைக்குறிகளுக்குள் சில நேரம் தர முயலுகின்றோம்; அல்லது அனைத்துலக ஒலியன் குறியீடுகளைத் தருகின்றோம்; சில நேரங்களில் உரோமன் எழுத்திலும் எழுதிக்காட்டுகின்றோம்). இவை அனைத்தும் மலையாளத்துக்கு என்றில்லை எந்தப்வொரு மொழிச்சொல்லாயினும் தமிழில் வழங்கும் முறைமை.

--செல்வா (பேச்சு) 16:28, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ங்ங/ ஞ்ஞ வகை

[தொகு]

மலையாளத்தில் சில இடங்களில் ங்ங/ஞ்ஞ கூட்டாக வருகின்றன. தமிழிலும், அங்ஙனம் போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. நான் இந்த வகையைக் குறிப்பிடவில்லை. தமிழில் இருந்த கூட்டுகளான “ங்க, ஞ்ச” போன்றவை, பிற்காலத்தில் மலையாளத்தில் ங்ங/ஞ்ஞ என்று மாறுகின்றனவாம். எங்கோ படித்தேன். கொடுங்ஙல்லூர் (கொடுங்கல்லூர்), குளங்ஙர (குளங்கரை) போன்ற சொற்களை தமிழில் எப்படி எடுத்தாளலாம்? இவற்றின் மூலம், தமிழ் என்பதால், தமிழ் வழக்கப்படியே ஆள்வோமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]