விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 2, 2008
பொறியியல்என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல் (materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொரியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். .
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுப்பிளவு போன்றவை.
சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.