உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 25, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரடைப்பு இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். மேலும்...


கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. இவர் செய்த புரட்சி நடவடிக்கைகளுக்காக 1845ல் பாரிசு நகரத்திலிருந்தும், 1849ல் கோல்ன் நகரிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். மேலும்...