விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 27, 2011
வென் படம் என்பது கணங்களின் முடிவுறு தொகுப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய தொடர்புகளைப் பற்றிய விளக்கப் படமாகும். 1880களில் பிரித்தானிய தர்க்கவாதியும் மெய்யியலாளருமான ஜான் வென், கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகளைப் படங்களின் மூலம் விளக்கலாம் என்ற தனது கருத்திற்கு வடிவமைத்தார். வென்படங்கள், அடிப்படைக் கணக்கோட்பாட்டினைச் சொல்லித்தரவும், நிகழ்தகவு, தருக்கம், புள்ளியியல், மொழியியல், கணினியியல் ஆகிய துறைகளிலுள்ள எளிய கணங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை விளக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வென் படங்கள் ஒரு தளத்தில் வரையப்பட்ட மூடிய வளைவரைகளைக் (curves) கொண்டவையாகும். அவை பொதுவாக ஒன்றின் மீது ஒன்று வெட்டிக்கொள்ளூம் வட்டங்களைக் கொண்டிருக்கும். வட்டத்தின் உட்பகுதி அதற்குரிய கணத்திலுள்ள உறுப்புகளையும் வெளிப்பகுதி அக்கணத்தில் இல்லாத உறுப்புகளையும் குறிக்கும். இரண்டு கணங்களைப் பற்றிய வென்படத்தில் ஒரு வட்டம் எல்லாவிதமான மரச்சாமான்களின் கணம், மற்றொன்று எல்லாவகையான மேசைகளின் கணம் என்றால் இரு வட்டங்களுக்கும் பொதுவான பரப்பு மரமேசைகளைக் குறிக்கும்.மேலும்..
ஜி. ஜி. பொன்னம்பலம் (1901-1977) இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1934 இல் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1944 இல் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் "ஐம்பதுக்கு ஐம்பது" என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இவரது மகன், குமார் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும்..