விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 14, 2007
பொங்கல் தமிழர் திருநாளாக தமிழகம், இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
நெற் பயிர், புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. நெற் பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடியது. இது சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதை தோல் நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு தோல் நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியமாகும்.