விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 5, 2010
பேர்கன் நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில், நோர்வேயின் தலை நகரமாகவும் இது இருந்தது. நோர்வேயின் வடமேற்கு கரையோரத்திலுள்ள ஓர்டாலாந்து மாவட்டத்தில் பேர்கன் நகரம் அமைந்திருப்பதுடன், அம்மாவட்டத்தின் ஆட்சியக மையமும் இதுவேயாகும். பேர்கன் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்குவதுடன், 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரங்கள் எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்பது ஐரோப்பிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்” என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. முன்னொரு காலத்தில் குடைகளை பணமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய இயந்திரங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை சரியாக வெற்றியளிக்காததால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மேலும்..
ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்த மகாதேவன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபின் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. மேலும்..