உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 4, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது. குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூக சூழல், மனத்தகைவு, மன நலம், மரபியல் முற்சார்பு, வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும் பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது. மேலும்...


வசீலி சுகோம்லின்சுக்கி (1918–1970) உக்ரைனில் வாழ்ந்த ஒரு கல்வியாளர். இவர் உக்ரைன் நாட்டிலுள்ள சுமார் 3000 மக்கள் வசித்து வந்த பாவ்லிச்சு என்ற சிற்றூரிலுள்ள பள்ளியின் தலைமையாசிரியராக இருபது ஆண்டுகள் இருந்தார். சிறந்த பண்பாளராக ஒரு மாணவரை உருவாக்குவதில் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார் வசீலி. இன்றும் கூட அவர் தொடங்கிய கல்விச் சீர்திருத்தங்களைக் காண பாவ்லிச்சு பள்ளிக்கு பல இடங்களிலிருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். முழுமையான கல்விக்கு உள்ளகமாக அறக்கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். அறக்கல்வி என்று அவர் வரையறுத்தது, இயற்கையின் அழகைத் துய்க்கும் அளவிற்கு மாணவர்களை நுட்பமானவர்களாக்குதல், கலை மற்றும் மனித உறவுகள் குறித்த நுட்பங்களை அறியச்செய்தல் ஆகியவையே. ஒரு மாணவருக்கு உடல்-சார், அறிவு-சார் வளர்ச்சியோடு தொழில்-சார் அறிவும் தேவை என்று திடமாக நம்பினார். அவரது கல்விமுறையில் மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும்...