விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 17, 2011

கபில மார்புப் பூங்குயில் என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். தென்கிழக்காசியாவில் மியன்மார் முதல் கீழைச் சாவகம், பிலிப்பீன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளிற் பரவிக் காணப்படும் இப்பறவையினம் 49 செமீ வரை வளரக்கூடியது. இதன் மேற்பகுதி சாம்பல் மற்றும் கடும் பச்சை நிறமாகவும் கீழ்ப் பகுதி செங்கபில நிறமாகவும் இருப்பதுடன் வெளிறிய மஞ்சள் நிறத்திலான அதன் சொண்டு சற்றுப் பெரிதாகவும் மேற்பகுதி கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். இப்பறவைகளின் இறகுகளின் நிறங்களினடிப்படையில் ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படும். ஏராளமான ஏனைய குயிலினங்களைப் போலன்றி, கபில மார்புப் பூங்குயில்கள் தம் கூடுகளைத் தாமே கட்டுவதுடன் தம் குஞ்சுகளையும் பராமரிக்கும் தன்மையுடைனவாகும். இப்பறவைகளின் இயற்கை வாழிடங்கள் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளும் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டலக் கண்டற் காடுகளுமாகும். இவை பொதுவாக மரங்களின் அடர்ந்த இலைகளுக்கிடையிலேயே வசிக்கும். இந்நாட்களில் இப்பறவைகளின் வாழிடங்களான காடுகள் பெரிதும் அழிக்கப்படுகின்றன. மேலும்...

முதலாம் சங்கிலி (ஏழாம் செகராசசேகரன்) 1519 முதல் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன். போர்த்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போர்த்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன. முதலாம் சங்கிலி யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆறாம் பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளுமே கடுமையாக எதிர்த்துவந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். மேலும்...