உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 11, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுவாள் புலி (saber-toothed tiger) என்பது அழிந்து போன ஒரு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்கு ஆகும். இதன் பேரினப் பெயர் சிமிலிடான் என்பதாகும். மேல்த்தாடையின் கோரைப் பற்கள் இரண்டும் கொடுவாள் போல நீண்டு இருப்பதால் இது இப் பெயர் பெற்றது. இது புலி என்று அழைக்கப்பட்டாலும் "கொடுவாள் பூனை" எனும் பெயரே சரி. ஏனெனில் புலிகள் பாந்தரினே கிளைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. சிமிலோடான்களோ மாக்கைரோடான்டினோ கிளைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. டென்மார்க் இயற்கையியலாளர் பீட்டர் வில்லெம் லுண்ட் 1841 இல் பிரேசிலில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டரின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்த போது தான் அதிசயிக்கத்தக்க இந்த உண்மை உறுதியானது. கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என பொதுவாக நம்பப்படுகிறது.


கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - சனவரி 31, 1995) தமிழறிஞர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். சென்னையில், காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி தெலுங்கு. 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்" என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.