விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 30, 2008

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு. அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.