வாயல்பாடு பட்டபிராமர் கோயில்

வாயல்பாடு பட்டபிராமர் கோயில் (தெலுங்கில்: వాయల్పాడు పట్టాభి రామస్వామి ఆలయం) என்பது தென்னிந்தியாவின், ஆந்திரப் பிரதேசத்தின், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள வாயல்பாடு என்ற ஊரில் உள்ள ஒரு இராமர் கோயிலாகும்.[1]
அமைவிடம்
[தொகு]இக்கோயிலானது ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதியில் இருந்து 129 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் வாவில் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பகுதி வாவில் பாடு என அழைக்கப்பட்டு பின்னர் வாயல்பாடு என திருந்து வழங்குகிறது.[2]
தொன்மம்
[தொகு]இராமரின் பட்டாபிசேக விழாவிற்கு சென்று ஜாம்பவான் தன் இருப்பிடம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் காணப்பட்ட ஒரு எறும்பு புற்றிலிருந்து ஒளி வருவதைக் கண்டார். ஜாம்பவான் அந்தப் புற்றை உடைத்துப் பார்த்தபோது அங்கே இராமர், சீதை உள்ளிட்டோரின் சிலைகள் கிடைத்தன. உடனே அங்கேயே இராமருக்கு கோயில் எழுப்பி ஜாம்பவான் வழிபட்டார் என்ற கதை இக்கோயில் குறித்து கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலானது நான்கு நிலை இராச கோபுரத்தைக் கொண்டுள்ளது. அதைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்துக்கு அருகே உள்ள கருவறையில் பட்டாபிசேக கோலத்தில் இராமரும், சீதையும் வடக்கு நோக்கி உள்ளனர். இராமருக்கு இடதுபுறம் இலக்குவனும், சற்று பின்னால் சாமரம் வீசியபடி சத்ருகுணனும், சீதைக்கு சற்று பின்னால் சாமரம் வீசியபடி பரதனும் உள்ளனர். இங்குள்ள இராமர் தன் வலக்கையில் கிசா முத்திரையைக் காட்டியபடியும், இடது கையில் வரத ஸ்தம்பத்தை வழங்கியபடியும் உள்ளார்.
வெளியே அனுமனுக்கு தனி திருமுன் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் ஆட்சியராக இருந்த ஹேஸ்டிங்க்ஸ் என்பவரின் வயிற்று வலி இத்தல இறைவனை வேண்டியதால் குணமானதாக கூறப்படுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோயிலுக்கு முன்பாக நான்கு கால் மண்டபத்தை கட்டிக் கொடுத்துள்ளார் எனப்படுகிறது.[2]
சிறப்புகள்
[தொகு]இத்தல இறைவன் மீது தாளபாக்கம் அன்னமாச்சார்யா 21 கீர்த்தனைகளை பாடியுள்ளார். கோயில் கருவறைமீது கலசத்துக்கு பதில் சுதர்சன சக்கரம் உள்ளது. இந்த ஊரைச் சுற்றி பகுதா ஆறு ஓடுகிறது.[2]
நிருவாகம்
[தொகு]இக்கோயில் நிருவாகத்தை 1997 இல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ tirupatitirumalainfo (2018-06-05). "Sri Pattabhirama swamy Temple - Vayalpadu - History" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-05.
{{cite web}}
: Text "How to reach" ignored (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "அனைத்திலும் வெற்றி அருளும் வாயல்பாடு ஸ்ரீபட்டாபிராமர்". Hindu Tamil Thisai. 2025-04-03. Retrieved 2025-04-05.