உள்ளடக்கத்துக்குச் செல்

வானிலையாலழிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், இரசாயனக் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.

பாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் இரசாயன வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான வெப்பம், நீர், பனிக்கட்டி (Ice) மற்றும் அமுக்கம் என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. அமில மழை போன்ற நேரடி இரசாயன காரணிகளாலும், விலங்குகளின் சிறுநீர், எச்சம் போன்ற உயிரியல்சார் காரணிகளினால் ஏற்படும் சிதைவுகளின் இரசாயன தாக்கங்களாலும் இரசாயன வானிலையாலழிதல் நிகழும்[1]. உயிரியல் சார்ந்த காரணிகளால் ஏற்படும் வானிலையாலழிதல் சிலசமயம் உயிரியல் வானிலையாலழிதல் என்றும் அழைக்கப்படுவதனால், மூன்று வகையான வானிலையாலழிதலாகப் பிரிக்கப்படுவதுமுண்டு.

பௌதீக வானியாலழிதல்

[தொகு]
சுவீடன் அபிசிகோவில் வெப்பம் மற்றும் பனி உறைவு காரணமாக பாளங்களாக வெடிப்புற்ற பாறை

சூரிய வெப்பம், நீர், காற்று முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.

  • சூரிய வெப்பத்தால் பாறையின் மேற்பரப்பு உலர்வடையும். இதனால் அதன் கனவளவு குறைவடையும். பின் மழை பெய்யும் போது நனைவதால் கனவளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு கனவளவு மாற்றம் வானிலையாலழிதலைத் தூண்டுகின்றது.
  • இரவு பகல் வேளைகளில் வெப்பமாதலும் குளிர்சியடைதலும் மாறி மாறி ஏற்படுவதால் வானிலையாலழிதல் தூண்டப்படுகின்றது.
  • காற்றினால் அள்ளிச் செல்லப்படும் மணல், மற்றும் ஓடும் நீர் பாறைகளில் மோதுவதாலும் அலையடிப்புக் காரணமாகவும் பாறை வானிலையாலழிதலுக்கு உட்படுகின்றது.
  • பாறை வெடிப்புகளில் நீர் புகுவதால் வெடிப்புகள் மேலும் விரிதலுக்குள்ளாகுகின்றன. இவ்வாறு புகும் நீர் உறையும் போது கனவளவு அதிகரிப்பும் ஏற்படுகின்றது. இதனால் பாறை உடைவு மேலும் தூண்டப்படுகின்றது.

இரசாயன வானிலையாலழிதல்

[தொகு]
கலிபோர்னியாவில் உப்புமுனை பூங்காவில் உள்ள துளைகொண்ட பாறை

.

பாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட இரசாயன பதார்த்தங்களின் தாக்கங்களால் இரசாயன வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், ஒட்சிசன், அமிலங்கள் முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் இரசாயன வானிலையாலழிதல் நேருகின்றது.

  • பாறையில் அடங்கியுள்ள இரும்புத் தாது கொண்ட கனியங்கள் வளிமண்டல ஒட்சிசனுடன் தாக்கமுறுதல்.
  • பாறையில் அடங்கியுள்ள சேர்வைகள் நீரேற்றத்திற்கு உட்பட்டு புதிய சேர்வைகள் தோன்றுதல்.

எ.கா: கல்சியம், சோடியம் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு முதலான மூலகங்கள் அடங்கிய கனியங்கள் இலகுவில் நீர்ப்பகுப்புக்கு உள்ளாகும். உதாரணம்: ஒத்டோகினேசுப் பாறை நீர்ப்பகுப்படைந்து பாற்களி உருவாகுதல்.

  • பாறை வெடிப்புகளினுள் புகுகின்ற உவர்நீர் உறைந்து படிவுகளாகும் போது அவை விரிவடைந்து வெடிப்பை மேலும் விரிவுபடுத்தும்.அல்லது உவர்நீர் பாறையுடன் உக்கலடையும். இத்தகைய தாக்கங்களால் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து சோடியம் காபனேற்று மற்றும் சோடியம் சல்பேற்று என்பன தோன்றும்.

உயிரியல் வானிலையாலழிதல்

[தொகு]
இலைக்கன்களால் உயிரியல் வானிலையழிதல்

பாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும்.

  • பாறை வெடிப்புகளில் ஊடுருவும் தாவர வேர்கள் காரணமாக பாறை பிளவடைதல்.
  • பாறைகளின் மேற்பரப்பில் வளரும் இலைக்கன்கள் மற்றும் பாசிகளால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள்
  • விலங்குகள் கொம்பு மற்றும் அவற்றில் கால்களால் பாறைகளை சிதைத்தல்.
  • பாறைகளில் நடைபெறும் மனித நடவடிக்கைகள்

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானிலையாலழிதல்&oldid=3640832" இலிருந்து மீள்விக்கப்பட்டது