வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/3
விவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்.
சிலுவையைச் சுமந்துசென்ற இயேசுவின் அடியொற்றி நடந்துசென்று, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, தியானிப்பதைப் பதினான்கு நிலைகளில் செய்வது மரபு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவகப்படுத்தும். அக்காட்சியில் வருகின்ற ஆள்கள் இடங்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு, உணர்வில் ஏற்று, இயேசுவோடு மக்கள் தம்மை ஒன்றுபடுத்துவர்.
ஆயினும் மரபுப்படி தரப்பட்ட 14 நிலைகளுள் எட்டு நிலைகளுக்கு மட்டுமே உறுதியான விவிலிய அடிப்படை உள்ளது. இதனால், மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையில் கற்பனை நிகழ்வுகள் புகுத்தப்பட்டன எனப் பொருளாகாது என்றும், பொதுமக்களின் பக்தி முயற்சியாக வளர்ந்த சிலுவைப் பாதையில், இயேசு சிலுவை சுமந்து சென்றபோது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணி உள்ளத்தில் சிந்தித்து இறைவேண்டல் செய்திட வெவ்வேறு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டன என்றும் அறிஞர் கூறுகின்றனர்.
இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்த நிகழ்வோடு தொடர்புடைய தகவல்கள் வெளிப்படையாக நற்செய்தி நூல்களில் உள்ளனவா என்று ஆய்ந்து அவற்றை மட்டுமே சிலுவைப் பாதையின் நிலைகளாகக் கருதுவது நல்லது என்னும் எண்ணத்தில் பலர் "விவிலிய சிலுவைப் பாதை" உருவாக்கலாயினர். இத்தகைய விவிலிய சிலுவைப் பாதை ஒன்றினைக் காலஞ்சென்ற திருத்தந்தை முத். இரண்டாம் யோவான் பவுல் உருவாக்கினார். அதை 1991ஆம் ஆண்டு பெரிய வெள்ளியன்று அவரே முன்னின்று உரோமை கொலொசேயத்தில் பயன்படுத்தி வழிபாடு நடத்தினார். அந்த விவிலிய சிலுவைப் பாதையை எல்லாக் கிறித்தவ மக்களும் பொது வழிபாட்டின்போது பயன்படுத்துவது நலம் என்று கூறி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இசைவு வழங்கினார்.