வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/11
யால தேசிய வனம் இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஆகக் கூடிய எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் செல்வதும் பரப்பளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இவ்வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 190 மைல் தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இக்காடு அதில் வசிக்கும் ஏராளமான வனவிலங்குகள் தொடர்பில் மிகப் பிரபலமானதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானைகளினதும் நீரியற் பறவைகளினதும் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யால தேசிய வனத்தினுள் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். உலகில் சிறுத்தைகள் செறிவு மிகக் கூடிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004 கடற்கோளினால் இவ்வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009-இல் இக்காட்டினுட் பகுதிப் பாதுகாப்பு சிறப்பாக்கப்பட்டது முதல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.