உள்ளடக்கத்துக்குச் செல்

வர்க்கி விதயத்தில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்தினால்

வர்க்கி விதயத்தில்
எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலத் தலைமைப் பேராயர்; புனித பெர்நார்தோ அல்லே தேர்மே-யின் கர்தினால்-குரு
சபைகத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை
உயர் மறைமாவட்டம்எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலம்
முன்னிருந்தவர்மார் அந்தோனி படியறா
பின்வந்தவர்ஜார்ஜ் ஆலஞ்சேரி
பிற பதவிகள்-
  • பெங்களூரு புனித பெனடிக்ட் துறவற இல்லத்தின் திருத்தூது ஆளுநர் (1990-1996)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுஜூன் 12, 1954
பேராயர் தாமஸ் பொத்தகாமுரி-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுஜனவரி 17, 1997
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுபெப்ருவரி 21, 2001
கர்தினால் குழாம் அணிஎர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலத் தலைமைப் பேராயர்; புனித பெர்நார்தோ அல்லே தேர்மே-யின் கர்தினால்-குரு
பிற தகவல்கள்
பிறப்பு(1927-05-29)29 மே 1927
பாரூர், வடக்கு திருவிதாங்கூர், கேரளம்
இறப்பு1 ஏப்ரல் 2011(2011-04-01) (அகவை 83)
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
கல்லறைபுனித மரியா பேராலயம், எர்ணாகுளம்
குடியுரிமைஇந்தியன்
சமயம்கத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை
பெற்றோர்ஜோசப் விதயத்தில், தெரசியம்மா மாநாடன்
குறிக்கோளுரைObedience and Peace
கீழ்ப்படிதலும் அமைதியும்

கர்தினால் வர்க்கி விதயத்தில் (Varkey Cardinal Vithayathil) (பிறப்பு: மே 29, 1927 - இறப்பு: ஏப்ரல் 1, 2011) என்பவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த ஒரு இந்திய கர்தினால் ஆவார்.[1] இவர் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் நிலவுகின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையின் உயர் பேராயராகப் பணிபுரிந்து அதன் தலைமைப் பதவியை வகித்தார்.[2] அச்சபையினர் இவரை மார் வர்க்கி விதயத்தில் என அழைப்பர்.

இளமைப் பருவமும் குருத்துவப் படிப்பும்

[தொகு]

வர்க்கி விதயத்தில், ஜோசப் விதயத்தில் என்பவருக்கும் தெரசியம்மா மாநாடன் என்பவருக்கும் மகனாக, கேரளத்தில் வடக்கு திருவிதாங்கூர் பகுதியில் பாரூர் என்னும் ஊரில் 1927ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் பிறந்தார். இவர்தம் தந்தை ஜோசப் விதயத்தில் திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினராகவும், திருவிதாங்கூர் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். மேலும், அவர் கத்தோலிக்க திருச்சபையில் சிறப்புப் பணி ஆற்றினார் என்னும் முறையில் அவருக்கு "செவாலியே" என்னும் "கவுரவ வீரர்" பட்டம் அளிக்கப்பட்டது. அவர் அகில கேரள கத்தோலிக்க காங்கிரஸ் என்னும் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

வர்க்கி விதயத்தில் தம் இளமைப் பருவத்திலேயே கத்தோலிக்க திருச்சபையில் குருவாகப் பணியாற்ற விருப்பம் கொண்டு, "உலக இரட்சகர் சபை" என்னும் துறவற சபையில் சேர்ந்தார். அச்சபையைச் சார்ந்த குருவாக 1954ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 12ஆம் நாள் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோமை நகரில் அமைந்துள்ள புனித அக்வீனா தோமா பல்கலைக் கழகத்தில் வர்க்கி விதயத்தில் உயர் கல்வி பயின்றார். அங்கு திருச்சபைச் சட்டப் படிப்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு "சீரோ-மலபார் வழிபாட்டு ஆட்சிப்பீடத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் பொருள் பற்றி அமைந்தது.

பெங்களூரில் அமைந்த உலக இரட்சகர் சபைக் குருத்துவக் கல்லூரியில் 25 ஆண்டுகளாக இறையியல் துறைப் பேராசியராகப் பணியாற்றினார். 1972ஆம் ஆண்டில் அவர் கர்நாடக பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பெங்களூரில் வேறு பல குருத்துவக் கல்லூரிகளிலும் அவர் பயிற்றுவித்தார்.

மாநிலத் தலைவர்

[தொகு]

இந்தியா மற்றும் இலங்கையை உள்ளடக்கிய உலக இரட்சகர் சபை மாநிலத்தின் தலைவராக வர்க்கி விதயத்தில் 1978இலிருந்து 1984 வரை பணியாற்றினார். இந்திய கத்தோலிக்க துறவியர் அமைப்பின் தலைவராக 1984-1985 ஆண்டுக்காலத்தில் பணிபுரிந்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஆணைப்படி, 1990இல் வர்க்கி விதயத்தில் பெங்களூரில் அமைந்துள்ள "ஆசீர்வனம்" என்னும் புனித பெனடிக்ட் துறவற இல்லத்தின் திருத்தூது ஆளுநர் பொறுப்பை ஏற்றார்.

முதன்மைப் பேராயராகவும், சீரோ-மலபார் சபைத் தலைவராகவும் நியமனம்

[தொகு]

வர்க்கி விதயத்தில் 1996ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ஆம் நாளன்று, எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு, 1997, ஜனவரி 6ஆம் நாள் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1999ஆம் ஆண்டு, டிசம்பர் 23ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வர்க்கி விதயத்திலை எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும், சீரோ-மலபார் திருச்சபையின் தலைவராகவும் நியமித்தார்.

2008ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் வர்க்கி விதயத்தில் அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாண்டு பெப்ருவரி 19இலிருந்து 2010ஆம் ஆண்டு மார்ச் 3 வரை அப்பதவியை வகித்தார்.

கர்தினால் பதவி

[தொகு]

2001, ஜனவரி 21ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வர்க்கி விதயத்திலை கர்தினால் பதவிக்குத் தேர்ந்தெடுத்து அதே ஆண்டு பெப்ருவரி மாதம் 21ஆம் நாள் கர்தினாலாக உயர்த்தினார். அவருக்கு புனித பெர்நார்தோ அல்லே தேர்மே-யின் கர்தினால்-குரு என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. 2005இல் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் இவரும் கலந்துகொண்டு வாக்களித்தார்.

இறப்பு

[தொகு]

கர்தினால் விதயத்தில் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் நாள் வெள்ளிக்கிழமை தம் இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மயக்கமடைந்தார். உடனடியாக எர்ணாகுளம் லிஸ்ஸி மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு இறந்தார். அவருடைய இறுதி அடக்கச் சடங்கு மறுநாள் சனிக்கிழமை மாலை எர்ணாகுளம் புனித மரியா பேராலயத்தில் 4 மணிக்கு நடந்தது.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கர்தினால் வர்க்கி விதயத்திலின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர் சீரோ-மலபார் திருச்சபைக்கும் உலகத் திருச்சபைக்கும் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார்.

கர்தினால் விதயத்திலின் இறப்போடு இந்திய கர்தினால்மாரின் எண்ணிக்கை 5 ஆகவும் இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் (திருத்தந்தைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள்) 3 பேர் எனவும் மாறியது. தற்சமயம் திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆகும்.

வெளியிட்ட நூல்கள்

[தொகு]
  • The Origin and Progress of the Syro-Malabar Hierarchy, Thesis, Angelicum, 1959. Published: Oriental Institute of Religious Studies, India, 1980.
  • Straight From the Heart (நேர்காணலின் போது வழங்கிய தன்வரலாற்றுச் செய்திகளும் பிற கருத்துகளும்).

கருத்து

[தொகு]

மரியா (இயேசுவின் தாய்) கடவுளின் அருளை மனிதருக்கு வழங்கும் இடையாளாக இருக்கிறார் என்னும் உண்மையைக் கிறித்தவ நம்பிக்கைக் கொள்கையாக அறிக்கையிட்டால் அதனால் பயன் விளையும் என்றும், கிறித்தவர்களிடையே ஒற்றுமை ஏற்பட அது வழியாகும் என்றும் கர்தினால் வர்க்கி விதயத்தில் கருத்துத் தெரிவித்தார்.

ஆதாரங்கள்

[தொகு]

மேலும் அறிய

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்க்கி_விதயத்தில்&oldid=3850212" இலிருந்து மீள்விக்கப்பட்டது