உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணாத்திக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணாத்திக்குருவி, கருப்பு வெள்ளைக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் அல்லது பாலகன் (Oriental magpie-robin, Copsychus saularis), என்பது வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ. நீளமுடையது. இலை, தழைகளுக்கிடையிலும் வீட்டுத் தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.

நிறம்

[தொகு]
  • ஆண் குருவி கருமைநிற மேல்பகுதியில் வெண்ணிறத்தில் தோள்பட்டைச் சிறகுடையது; இதன் அடிப்பகுதி வெண்ணிறமுடையது. இனப்பெருக்க காலங்களில் இது் அருமையான சுருதிகளில் பாடி தன் எல்லையை அறிவிக்கும் இயல்பு கொண்டது.
  • பெண் குருவி சாம்பல் நிறமுடையது.

இயல்பு

[தொகு]
கருப்பு வெள்ளைக்குருவி

வண்ணாத்திக் குருவி மாந்தர் வாழும் இடங்களில் காணப்படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் காண இயலும். மற்ற மாதங்களில் இது பாடாது என்பதால், இதன் இருப்பை அறிந்து கொள்வது கடினம். பிப்ரவரி மாதம் அடர் கருப்பு-வெள்ளை நிறச் சிறகுத் தொகுதியுடன் ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து பாட ஆரம்பிக்கும். முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப்போக காதுக்கினிய கீதங்களாக மாறும். சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய பெண் குருவி தோன்றும். அவை ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடி பின்னர் கலவியில் ஈடுபடும். இரு ஆண் குருவிகள் சண்டையிடுவதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றே.

கூடு

[தொகு]
வண்ணாத்திக்குருவி

வண்ணாத்திக் குருவி மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ தன் கூட்டினை அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.

உசாத்துணை

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Copsychus saularis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணாத்திக்குருவி&oldid=3817655" இலிருந்து மீள்விக்கப்பட்டது