உள்ளடக்கத்துக்குச் செல்

லொகான் ரத்வத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லொகான் ரத்வத்தை
Lohan Ratwatte
ලොහාන් රත්වත්ත
நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்டம்
பதவியில்
2010 – 24 செப்டம்பர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூன் 1968 (1968-06-22) (அகவை 56)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
துணைவர்ரசிபாபா ராசபக்ச ரத்வத்தை
முன்னாள் கல்லூரிகண்டி திரித்துவக் கல்லூரி

லொகான் எவீந்திர ரத்வத்தை (Lohan Evindra Ratwatte, பிறப்பு: 22 சூன் 1968) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2024 வரை கண்டி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2020 முதல் 2024 வரை இராசாங்க அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான செனரல் அனுருத்த ரத்வத்தையின் மூத்த மகன் ஆவார்.

அரசியல்

[தொகு]

ரத்வத்தை மத்திய மாகாண சபை உறுப்பினராக 2009 இல் தெரிவு செய்யப்பட்டார், பின்னர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ரம் சென்றார். 2012 இல், கண்டி பத்ததும்பறை தொகுதியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[1] சாலை மேம்பாட்டுக்கான இராசாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 2015 தேர்தலிலும், 2020 தேர்தலிலும் போட்டியிட்டுத் தெரிவானார். 2020 இல் இரத்தினம், நகை தொடர்பான தொழில்களுக்கான இராசாங்க அமைச்சராவும், சிறைச்சாலை முகாமைத்துவத்துக்கான இராசாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[2]

சர்ச்சைகள்

[தொகு]

லொகான் ரத்வத்தையின் தந்தை துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது 2001 நாடாளுமன்றத் தேர்தலின் போது உடத்தலவின்னயில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஆதரவாளர்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக லொகான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2006 இல் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். ரத்வத்தை குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மெய்க்காவலர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[3]

2021 செப்டெம்பரில் லொகான் ரத்வத்தை தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நிகழ்வு தொடர்பில் எதிர்மறையான விளம்பரத்தைப் பெற்றார். 2021 செப்டெம்பர் 12 இல் அப்போதைய சிறைச்சாலை முகாமைத்துவ, கைதிகள் புனர்வாழ்வு இராசாங்க அமைச்சராக இருந்த லொகா ரத்வத்தை, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் போதையில் நுழைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளைச் சந்திக்கக் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்க் கைதிகள் 10 பேர் ரத்வத்தையின் முன் அழைத்து வரப்பட்ட போது அவர் அவர்களிடம் சிங்கள மொழியில் உரையாற்றினார். மேலும் ஒரு கைதி தங்களுக்கு சிங்களம் தெரியாது என்று எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​ஆத்திரமடைந்த ரத்வத்த, "சிங்கள நாட்டில்" வாழ்ந்தாலும் மொழி தெரியாமல் கைதிகளை "பற தெமல" என்ற இன இழிவுரை பயன்படுத்தி, அவர்களை இந்தியாவிற்கு செல்லுமாறு திட்ட ஆரம்பித்தார். அடுத்த கிழமை இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் எடுத்துக் கொள்ளவுள்ளதால், ஐ.நா.வுக்கோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கோ நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்திக் கைதிகளை எச்சரித்தார். பின்னர் ரத்வத்த தனது கைத்துப்பாக்கியை காட்டி, துப்பாக்கி முனையில் தமிழ்க் கைதிகளை மண்டியிடுமாறு கட்டளையிட்டதுடன், அவர்களை மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினார். கைதிகளை விசாரிக்கும் போது, ​​நீங்கள் யாரேனும் இராணுவ வீரர்களைக் கொன்றீர்களா எனக் கேட்டதோடு, அவர்களில் ஒருவரின் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய அரசுத்தலைவர் தமக்கு அதிகாரம் அளித்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்கலாம் அல்லது கொலை செய்யலாம் என்றும் ரத்வத்தை கூறியதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, 2021 செப்டம்பர் 15 அன்று ரத்வத்தை தனது இராசாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். ரத்வத்தை சிறைக்குச் சென்றபோது கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்ததற்கான நம்பகமான ஆதாரங்களைக் கண்டறிந்த நீதி அமைச்சின் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் 2023 சூன் 8 அன்று ரத்வத்தையை "கைதிகளை தவறாக நடத்தியதற்காகவும், தமிழ் கைதிகளை துன்புறுத்துவதன் மூலம் பாரபட்சத்தை தூண்டும் வகையில் தேசிய வெறுப்பை ஆதரிப்பதற்காகவும்" விசாரித்து சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை ஆகியவற்றுக்குக் கீழ் வழக்குத் தொடருமாறு கோரியது.[4][5][6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lohan Ratwatte appointed Chief SLFP Organizer for Pathadumbara". Adaderana. http://www.adaderana.lk/news.php?nid=17799. 
  2. "Lohan Ratwatte appointed State Minister of Prison Management and Prisoners Rehabilitation". The President's Office. https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/12/02/lohan-ratwatte-appointed-state-minister-of-prison-management-and-prisoners-rehabilitation/. 
  3. "Minister In Sri Lanka Accused of Holding Tamil Prisoners At Gunpoint Must Face Investigation". amnestyusa.org. Amnesty International. பார்க்கப்பட்ட நாள் 28 September 2021.
  4. Jeyaraj, D.B.S. (2021-09-18). "How Gun-toting State Minister Lohan Ratwatte Terrified and Humiliated Tamil Prisoners at the Anuradhapura Jail". Sri Lanka Brief (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-09.
  5. "Tamil prisoners file Fundamental Rights petition at Sri Lanka's Supreme Court" (in en-IN). The Hindu. 2021-09-30. https://www.thehindu.com/news/international/tamil-prisoners-file-fundamental-rights-petition-at-sri-lankas-supreme-court/article36753917.ece. 
  6. "Sri Lankan prison minister resigns after alleged inmate threats". Al Jazeera (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-09.
  7. Palihawadane, Norman. "Ratwatte remains a state minister despite resignation over running amok in prisons". The Island. https://island.lk/ratwatte-remains-a-state-minister-despite-resignation-over-running-amok-in-prisons/. 
  8. "THE COMMITTEE REPORT ON LOHAN RATWATTA OBTAINED UNDER THE RTI". Centre for Society and Religion (CSR) (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-06-08. பார்க்கப்பட்ட நாள் 2023-06-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லொகான்_ரத்வத்தை&oldid=4096492" இலிருந்து மீள்விக்கப்பட்டது