உள்ளடக்கத்துக்குச் செல்

லில்லியன் டி வால்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லில்லியன் டி வால்டு
பிறப்புமார்ச் 10, 1867
சின்சினாட்டி
இறப்புசெப்டம்பர் 1, 1940(1940-09-01) (அகவை 73)
வெஸ்ட்போர்ட், கனெடிகட்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் ஆஸ்பிடல் டிரெய்னிங் ஸ்கூல் ஆப் நர்சஸ்
பணிசெவிலியர், மனிதுரிமையாளர், செயல்பாட்டாளர்
அறியப்படுவதுFounding the Henry Street Settlement; nursing pioneer, advocacy for the poor

லில்லியன் டி வால்டு (Lillian D. Wald மார்ச் 10, 1867-செப்டம்பர் 1, 1940)என்பவர் ஒரு அமெரிக்கச் செவிலி, மனித நேய ஆர்வலர், அமெரிக்கன் கம்யூனிட்டி நர்சிங் அமைப்பின் நிறுவனர்.[1] பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஜெர்மனியின் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிப்பில் சிறந்து விளங்கினார். பிரெஞ்ச், ஜெர்மானிய மொழிகள் கற்றார். 1891-ல் நியூயார்க் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு மகளிர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார்.[2]

செவிலியராக

[தொகு]

1893இல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிவு செய்தார். ஏழை மக்களுக்கு செவிலியர் வகுப்புகள் எடுத்தார். செவிலியராகப் பணிபுரிந்தார். ஹென்றி ஸ்ட்ரீட் செட்டில்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது சேவைகளை அறிந்த யூதக் கொடையாளி ஒருவர், ஏழை ரஷ்ய யூதர்களுக்கு மேலும் சிறந்த சேவை செய்ய அனைத்து உதவிகளையும் ரகசியமாக வழங்கினார்.

1906-ல் இந்த அமைப்பில் 27 செவிலியர்கள் பணிபுரிந்தனர். பகுதி நேரமாக வந்து சேவை செய்யும் செவிலியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. பின்னாளில் இது ‘விசிட்டிங் நர்ஸ் சர்வீஸ் ஆஃப் நியூயார்க்’ என்ற அமைப்பாக விரிவடைந்தது.[3]

செவிலியர் அமைப்பு

[தொகு]

அரசுப் பள்ளியில் செவிலியர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற இவரது யோசனையின் விளைவாக ‘நியூயார்க் போர்டு ஆஃப் ஹெல்த்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதல் பொது செவிலியர் அமைப்பு. பொதுச் சுகாதார செவிலியருக்கான தேசிய அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். செவிலியருக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தைப் பரிந்துரை செய்தார். கொலம்பியா பல்கலையில் செவிலியர் கல்லூரி தொடங்க உதவினார்.[2]

பிறபணிகள்

[தொகு]

பெண்களுக்கான தொழிற்சங்கம் தொடங்க உதவினார். அதன் நியூயார்க் நகர அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். பல நாடுகளுக்கும் சென்று மனிதநேயப் பணிகளில் நாட்டம் செலுத்தினார். குழந்தைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, கல்வியை மேம்படுத்தும் தேசிய அமைப்பின் தலைவராக இருந்தார்.[2] கறுப்பின தேசிய முன்னேற்றக் கூட்டமைப் பின் நிறுவன உறுப்பினரானார்.

எழுத்துப்பணி

[தொகு]

தனது பணிகள் குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஹென்றி ஸ்ட்ரீட்’, ‘விண்டோஸ் ஆன் ஹென்றி ஸ்ட்ரீட்’ என்ற 2 புத்தகங்களை எழுதினார்.

சிறந்த அமெரிக்கக் குடிமக்களுக்கான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அரங்கில் இவரது சிலை வைக்கப்பட்டது. 1922-ன் தலைசிறந்த 12 பெண்களில் ஒருவர் இவர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது. லிங்கன் பதக்கம் உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.

இறப்பு

[தொகு]

லில்லியன் வால்டு தனது 73 வது வயதில் (1940) மரணமடைந்தார்.

மேற்கோள்

[தொகு]
  1. Philips, Deborah (1999). "Healthy Heroines: Sue Barton, Lillian Wald, Lavinia Lloyd Dock and the Henry Street Settlement". Journal of American Studies 33 (1): pp. 65–82. doi:10.1017/S0021875898006070. 
  2. 2.0 2.1 2.2 Lillian D. Wald biography[தொடர்பிழந்த இணைப்பு], National Women's History Museum website and newsletter. Retrieved February 20, 2010
  3. Elizabeth Fee and Liping Bu (July 2010). "The Origins of Public Health Nursing: The Henry Street Visiting Nurse Service". American Journal of Public Health 100 (7): 1206–1207. doi:10.2105/AJPH.2009.186049. பப்மெட்:20466947. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லியன்_டி_வால்டு&oldid=3578582" இலிருந்து மீள்விக்கப்பட்டது