உள்ளடக்கத்துக்குச் செல்

லினா கோசுடென்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லினா கோசுடென்கோ
லினா கோசுடென்கோ (2006)
லினா கோசுடென்கோ (2006)
பிறப்பு19 மார்ச்சு 1930 (1930-03-19) (அகவை 94)
ரயசசிவ், உக்ரானிய சோவியத் குடியரசு, சோவியத் யூனியன்
மொழிஉக்ரேனிய மொழி
செயற்பட்ட ஆண்டுகள்1957–

லினா வாசிலிவ்னா கோசுடென்கோ (உக்குரேனிய மொழி: Ліна Василівна Костенко; பிறப்பு: 19 மார்ச் 1930) ஒரு உக்ரேனிய கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் மற்றும் முன்னாள் சோவியத் எதிர்ப்பாளர் ஆவார். இவர் உக்ரைனின் முன்னணி கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார் மற்றும் உக்ரேனிய மொழியில் பாடல் கவிதைகளை எழுதும் பழக்கத்தை புதுப்பித்த பெருமைக்குரியவர்களில் ஒருவர்.

லினா கீவ் நகரத்தின் மொகிலா அகாடமியில் கவுரவ பேராசிரியராக பதவி வகித்தார். லிவீவ் மற்றும் செர்னிவ்ட்சி பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. மேலும் இவர் சேவ்செங்கோ தேசிய பரிசு மற்றும் செவாலியே விருது உள்ளிட்ட பல கௌரங்களை பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]
1948 இல் கோசுடென்கோ

லினா வாசிலிவனா கோசுடென்கோ 1930 ஆம் ஆண்டு பிறந்தார். 1936 ஆண்டில், இவரது குடும்பம் தற்போதைய உக்ரேனிய தலைநகரான கீவ் நகருக்கு குடிபெயர்ந்தது, அங்கு இவர் தனது இடைநிலைக் கல்வி படிப்பை முடித்தார்.[1]

1937 முதல் 1941 வரை, இவர் துருகானிவு தீவில் அமைந்துள்ள கீவ் பள்ளியில் படித்தார். இந்த இடம் 1943 ஆம் ஆண்டு நாட்சி படைகளால் அழிக்கப்பட்டது. இவரின் கிரவுண்ட் அப் இன் கீவான் வெனிஸ் என்ற கவிதை இந்த நிகழ்வுகளை குறிக்கும் விதமாக இயற்றப்பட்டது. பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, லினா கீவ் பயிற்சி பள்ளியிலும், பின்னர் மாஸ்கோவில் உள்ள மாக்சிம் கோர்கி இலக்கிய நிறுவனத்திலும் படித்தார், அங்கிருந்து அவர் 1956 இல் தனித்துவத்துடன் பட்டம் பெற்றார்.[2]

வாழ்க்கை

[தொகு]

1950கள் மற்றும் 1960களில் இருந்த அறுபதுகளின் இயக்கத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான நபர்களில் கோசுடென்கோவும் ஒருவர்.[2] இவரின் கவிதைகள் பொதுவாக பாடல் வரிகள், பேச்சுவழக்கு மற்றும் நையாண்டி மொழியையும் கொண்டுள்ளன. மேலும் இவரின் எழுத்துக்கள் பொதுவாக சர்வாதிகாரத்தை விமர்சிக்கின்றன. இவர் உக்ரேனிய மொழியில் பாடல் கவிதைகளை எழுதும் பழக்கத்தை மக்களிடையே மீண்டும் ஏற்படுத்தினார்.[3] மேலும் இவர் உக்ரேனின் மிகச்சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[4] அறிஞரான இவான் கோசிலிவெட்சு, இவரது எழுத்தை "முன்னோடியில்லாதது" என்று குறிப்பிட்டார். 1960 களின் முற்பகுதியில், கீவ் இலக்கிய மன்றங்களில் இவர் பங்கேற்றார். 1957 இல் எர்த்லி ரேஸ், 1958 இல் செயில்ஸ் மற்றும் 1961 இல் ஜர்னிஸ் ஆப் தி ஹார்ட் என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். இந்தக் கவிதைகள் உக்ரேனிய வாசகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தன. சோவியத் அரசாங்கம் இவரது கவிதைகளைத் தணிக்கை செய்த முனைந்ததால், சோவியத் அதிகாரிகளிடம் அடிபணிய விரும்பாத காரணத்தினால் இவர் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[4]

சோவியத் அரசாங்கத்துடன் மோதல்

[தொகு]

1961 ஆம் ஆண்டில், இவர் "அரசியல் சார்பற்றவர்" என்று உக்ரானிய மாகாணத்தில் விமர்சிக்கப்பட்டார்.[4] 1963 ஆம் ஆண்டில், சோவியத் அரசின் தலையிட்டால், இவருடைய தி ஸ்டார் இன்டெக்ரல் மற்றும் தி பிரின்ஸ் மவுண்டன் போன்ற கவிதைகளை அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், கோசுடென்கோவின் கவிதைகள் பெரும்பாலும் அண்டை நாடுகளான செக்கோஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகளின் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. அவை எப்போதாவது மட்டுமே உக்ரேனிய பார்வையாளர்களை அடைந்தன. 1965 ஆம் ஆண்டில் சோவியத் அரசால் உக்ரேனிய படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஓர் கடிதத்தில் கோசுடென்கோ கையெழுத்திட்டார். பின்னர் இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையிலும் இவர் கலந்து கொண்டார். பல எழுத்தாளர்கள் இந்த கைதுகளை எதிர்த்தனர் மற்றும் விடுவிக்கும் கோரிக்கையுடன் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த முயற்சிகள் விசாரணைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் அவை அந்த நேரத்தில் உக்ரேனிய போராட்டக்காரர்களின் மன உறுதிக்கு உறுதுணையாக இருந்தன.

1966 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த உக்ரைனின் தேசிய எழுத்தாளர்கள் சங்கத்தில் கலந்துகொண்ட கோசுடென்கோ மற்றும் மற்ற எழுத்தாளர்களின் மீது "தேசியவாத சட்டவிரோதி" என்று முத்திரை குத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் கோசுடென்கோ இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குகாக பரிந்துரைக்கப்பட்டார்.[5]

1968 ஆம் ஆண்டில், லிட்ரேச்சரி உக்ரைன் செய்தித்தாளில் எழுத்தாளர் வியாசெசுலாவ் சோர்னோவில் மீது அவதூறு பரப்பப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் கோசுடென்கோ அவரை ஆதரித்து பல கடிதங்களை எழுதினார். அதன் பிறகு, லினா கோசுடென்கோவின் பெயர் பல ஆண்டுகளாக சோவியத் பத்திரிகைகளில் குறிப்பிடப்படவில்லை. இவர் தனது படைப்புகள் இந்த பத்திரிகைகளில் வெளியிடப்படப்போவதில்லை என்பதை அறிந்த போதிலும் தொடர்ந்து எழுதி வந்தார். 1973 இல் உக்ரைன் பொதுவுடைமை கட்சியின் மத்திய குழு செயலாளரான வாலண்டைன் மலான்சுக் என்பவரால் கோசுடென்கோ தடுக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில், மலான்சுக் வெளியேறிய பிறகு, இவரது கவிதைத் தொகுப்பான ஆன் தி பாங்க்ஸ் ஆப் தி எடர்னல் ரிவர் வெளியிடப்பட்டது. மேலும் 1979 ஆம் ஆண்டில், புரட்சிகர காவல்படையின் சிறப்பு ஆணையின் கீழ், இவரது மிகப்பெரிய படைப்புகளில் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த படைப்பு மரூசியா சுராய் என்ற 17 ஆம் நூற்றாண்டின் உக்ரேனிய நாட்டுப்புற பாடகரை பற்றிய ஒரு வரலாற்று நாவல் ஆகும்.[2] 1987 ஆம் ஆண்டில் உக்ரேனிய தாராசு சேவுசெங்கோ தேசிய பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

சுதந்திர உக்ரைனில் வாழ்க்கை

[தொகு]

1991 ஆம் ஆண்டில், கோசுடென்கோ செர்னோபில் அணு உலை விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள விலக்கு மண்டலத்திற்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் இவர் அங்குள்ள ஆபத்துகள் காரணமாக மற்றவர்களை இவ்வாறு செய்ய வேண்டாம் என்று எச்சரித்தார். 2000 ஆம் ஆண்டில் இவரது கணவர் வாசில் சுவியூர்குனோவ் இறந்ததைத் தொடர்ந்து, இவர் எழுதுவதில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். 2010 ஆம் ஆண்டில், இவரது நோட்ஸ் ஆப் எ உக்ரேனிய மேட்மேன் என்ற நாவல் வெளியிடப்பட்டது. இது நெடுங்காலத்திற்கு பிறகு வெளிவரும் இவரது முதல் நாவலாகும். மேலும் இந்த புத்தகம் இவரது 1989 ஆம் ஆண்டு பதிப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்குப் பிறகு வெளிவந்த முதல் புத்தகமாகும்.[1]

இந்த வெளியீட்டைத் தொடர்ந்து இவர் உக்ரைன் முழுவதும் ஒரு புத்தக சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டார், ஆனால் லிவீவ் நகரத்தில் திடீரென்று இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார். 2005 ஆம் ஆண்டில், அப்போதைய சனாதிபதி விக்டர் யுசுசெங்கோ கோசுடென்கோவிற்கு உக்ரைன் நாட்டின் மிக உயரிய விருதை அளிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் கோசுடென்கோ இந்த விருதை வாங்க மறுத்தார், மேலும் "நான் அரசியல் சம்பந்தமான விருதுகளை வாங்க மாட்டேன்" என்று அறிவித்தார்.[1][6] 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் மீதான உருசிய படையெடுப்புக்கு இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.[7]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

[தொகு]
  • தாராசு சேவுசெங்கோ தேசிய பரிசு (1987, "மருசுயா சுராய்" நாவலுக்காகவும், "தனித்துவம்" என்ற தொகுப்பிற்காகவும்)
  • அன்டோனோவிசு பரிசு (1989)
  • கீவ் நகர மொகிலா அகாடமி தேசிய பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியர்
  • லிவீவ் மற்றும் செர்னிவ்ட்சு பல்கலைக்கழகங்களில் இருந்து கவுரவ டாக்டர் பட்டம்
  • செவாலியே விருது
  • 2005 ஆண்டில் ஆண்ட்ருசிவகா வானியல் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் 290127 லினாகோசுடென்கோ என்று இவரது நினைவாக பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Shestak, Anna (10 December 2018). "Lina Kostenko: Poet of the Era". Ukrayinska Pravda. https://www.pravda.com.ua/articles/2018/12/10/7200729/. 
  2. 2.0 2.1 2.2 "Kostenko, Lina". Encyclopaedia of Ukraine. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  3. Olynyk, Marta D. (Fall 1979). "A Selected Bibliography of Works by and About Lina Kostenko". Nationalities Papers 7 (2): 213. doi:10.1080/00905997908407867. https://www.cambridge.org/core/journals/nationalities-papers/article/abs/selected-bibliography-of-works-by-and-about-lina-kostenko/41F2B6EF5854337EF11669C5E521651C. 
  4. 4.0 4.1 4.2 Naydan, Michael M.; Kostenko, Lina (Fall 1977). "Floating Flowers: The Poetry of Lina Kostenko". Ulbandus Review 1 (1): 138. https://www.jstor.org/stable/25748018. 
  5. "Nominations 1967". Nobel prize organization. April 2020.
  6. "Чи матюкаються солов'ї? Нецензурна лексика в часи війни". https://www.radiosvoboda.org/a/ukrayina-viyna-matyuky-netsenzurna-leksyka-ruskiy-korabl/31887525.html. பார்த்த நாள்: 20 June 2022. 
  7. Khotyn, Rostyslav (8 June 2022). "Are nightingales barking? Obscene language during the war". Radio Free Europe/Radio Liberty. https://www.radiosvoboda.org/a/ukrayina-viyna-matyuky-netsenzurna-leksyka-ruskiy-korabl/31887525.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லினா_கோசுடென்கோ&oldid=3909792" இலிருந்து மீள்விக்கப்பட்டது