லாரன்சு பிக்காச்சி
மேதகு லாரன்சு பிக்காச்சி | |
---|---|
கொல்கத்தா உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர்-கர்தினால் மரியாவின் திரு இதயக்கோவில் குரு-கர்தினால் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை, இயேசு சபை |
ஆட்சி பீடம் | கொல்கத்தா |
ஆட்சி துவக்கம் | 1969 |
ஆட்சி முடிவு | 1986 |
முன்னிருந்தவர் | பேராயர் ஆல்பர்ட் வின்செண்ட் டிசூசா |
பிற பதவிகள் | ஜாம்ஷெட்பூர் மறைமாவட்ட ஆயர் (1962-1969) |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | நவம்பர் 21, 1947 |
ஆயர்நிலை திருப்பொழிவு | செப்டம்பர் 9, 1962 பேராயர் ஜேம்ஸ் நாக்ஸ்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | மே 24, 1976 |
கர்தினால் குழாம் அணி | குருக்கள் அணி |
பிற தகவல்கள் | |
பிறப்பு | லெபாங், டார்ஜீலிங், இந்தியா | ஆகத்து 7, 1916
இறப்பு | நவம்பர் 30, 1992 கொல்கத்தா, இந்தியா | (அகவை 76)
குடியுரிமை | இந்தியா |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
லாரன்சு ட்ரவர் பிக்காச்சி (Lawrence Trevor Picachy) கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும், இந்தியக் கர்தினால்களுள் ஒருவரும் ஆவார்.[1] இவர் இந்தியாவின் டார்ஜீலிங் பகுதியில் லெபாங் என்னும் நகரில் 1916ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 7ஆம் நாள் பிறந்தார். கொல்கத்தாவில் 1992, நவம்பர் 30ஆம் நாள் இறந்தார். பிக்காச்சி இயேசு சபைத் துறவியாகவும், கொல்கத்தா அன்னை தெரசாவின் ஆன்மிக வழிகாட்டியாகவும், பின்னர் 1969இலிருந்து 1992 வரை கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் விளங்கினார். அவர் 1976இல் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
பிறப்பும் இளமைப் பருவமும்
[தொகு]கர்தினால் லாரன்சு பிக்காச்சியின் பெற்றோர் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர்கள். அவர்கள் 1911இல் இந்தியாவில் குடியேறியிருந்தார்கள். அவர்களின் மகனாக லாரன்சு பிக்காச்சி டார்ஜீலிங்கில் பிறந்தார். டார்ஜீலிங்கில் புனித யோசேப்பு கல்லூரியில் கேம்ப்ரிட்ஜ் மேநிலைக் கல்வி பயின்றபின் பிக்காச்சி 1943இல் துறவற வாழ்க்கை புக எண்ணம் கொண்டு, இயேசு சபை உறுப்பினரானார்.
இயேசு சபையில் புகுமுகத் துறவறப் பயிற்சியைப் புனித ஸ்தனிஸ்லாஸ் கல்லூரியிலும் (ஜார்க்கண்ட்), செண்பகனூர் (கொடைக்கானல்) தூய இதயக் கல்லூரியில் மெய்யியல் படிப்பையும் மேற்கொண்டார். சிறிதுகாலம் கொல்கத்தாவில் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் ஆசிரியப் பணி ஆற்றினார். அதைத் தொடர்ந்து கர்சியாங்கில் புனித மேரி கல்லூரியில் இறையியல் படிப்பில் தேர்ச்சிபெற்று குருத்துவப் பணிக்குத் தயார் ஆனார்.
குருத்துவப் பணி
[தொகு]1947ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 21ஆம் நாளில் பிக்காச்சி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1950இலிருந்து 1960 வரை கொல்கத்தா புனித சேவியர் கல்லூரியில் பேராசியராகவும் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து பசந்தியில் அருட்பணி ஆற்றினார்.
ஜாம்ஷெட்பூரின் முதல் ஆயர்
[தொகு]திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1962, சூலை 12இல் பிக்காச்சியை ஜாம்ஷெட்பூரின் முதல் ஆயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள் பிக்காச்சி பேராயர் ஜேம்ஸ் நாக்ஸ் (இந்தியாவில் திருத்தந்தைத் தூதுவர்) என்பவரால் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். அந்நிகழ்ச்சியில் பேராயர் பயஸ் கெர்க்கெட்டாவும் ஆயர் அகுஸ்தீன் வில்டெர்மத்தும் துணைத் திருப்பொழிவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
1962இலிருந்து 1965 வரை நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் நான்கு அமர்வுகளிலும் ஆயர் பிக்காச்சி கலந்துகொண்டு வாக்களித்தார்.
கொல்கத்தா பேராயராக நியமனம்
[தொகு]1969, மே திங்கள் 29ஆம் நாள் ஆயர் பிக்காச்சி கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1976இல் பிக்காச்சி இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படல்
[தொகு]திருத்தந்தை ஆறாம் பவுல் பேராயர் பிக்காச்சியை 1976ஆம் ஆண்டு மே திங்கள் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அப்போது அவருக்கு புனித மரியாவின் திருஇதயக் கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்விலும் (ஆகத்து 1978), திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்விலும் (அக்டோபர் 1978) கர்தினால் பிக்காச்சி கலந்துகொண்டு வாக்களித்தார்.
பணி ஓய்வும் இறப்பும்
[தொகு]1986ஆம் ஆண்டு, ஏப்பிரல் 5ஆம் நாள் பிக்காச்சி ஆயர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தம் 76ஆம் அகவையில் கொல்கத்தாவில் இறையடி எய்தினார்.
கர்தினால் பிக்காச்சி, கொல்கத்தாவில் தாக்கூர்புகூரில் அமைந்துள்ள இயேசு சபை தியானாஷ்ரம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.